இந்த வருடம் பல்வேறு உலகக் கிண்ண நிகழ்வுகளும், அதிகளவான நாடுகள் கலந்துகொண்ட பாரியளவான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
அந்தவகையில் 2010ம் ஆண்டின் சில முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு இதோ........
குளிர்கால ஒலிம்பிக்... (பெப்ரவரி 12-28)21வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவின் வான்கூவரில் பெப்ரவரி 12-28 வரை நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்ப நிகழ்வுகள் மூடிய அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கா(9/15/13), கனடா(14/7/5),ஜேர்மனி(10/13/7)ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.
சச்சின் சாதனை... (பெப்ரவரி 24)சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் முதல் இரட்டைச்சதம் பெற்ற வீரராக சச்சின் சாதனை படைத்தார். (200* Vs தென்னாபிரிக்கா).
ஆடவர் உலகக் கிண்ண ஹொக்கி... (பெப்ரவரி 28-மார்ச் 13)12 நாடுகள் பங்குபற்றிய 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பெப்ரவரி28ம் திகதி முதல் மார்ச் 13வரை இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஜேர்மனி அணியினை 2-1 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.
T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்... ( ஏப்ரல் 30 – மே 16)மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 3வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி புதிய சாதனையினைப் படைத்தது.
மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.
உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூன் 10-ஜூலை 11)2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட்... (ஜூன் 15-24)இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்ட 10வது ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில், இந்தியா, இலங்கையினை 81 ஓட்டங்களால் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் வெற்றிகொண்டு 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.
முரளி ஓய்வு...ஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கட் மைல்கல்லினை அடைந்த ஒரேவீரர் முரளிதரன் ஆவார்.
மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூலை 13 - ஆகஸ்ட் 1)ஜேர்மனியில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 5வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மனி, நைஜீரியாவினை இறுதிப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு 2வது தடவையாக சாம்பியனாகியது.
மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி... (ஆகஸ்ட் 29-செப்டெம்பர் 11)12 நாடுகள் பங்குபற்றிய 12 வது மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி, ஆர்ஜென்டீனா நாட்டில் ரொசாரியோ நகரில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்து அணியினை 4-2 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.
மகளிர் உலகக் கிண்ண றக்பி... (ஆகஸ்ட் 20-செப்டெம்பர் 5)
12 நாடுகள் பங்குபற்றிய 4 வது மகளிர் உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி, இங்கிலாந்து, லண்டன் நகரில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியினை 13-10 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.
1வது இளையோர் ஒலிம்பிக்... (ஆகஸ்ட் 14-26)வரலாற்றில் முதல் தடவையாக இளையோர் ஒலிம்பிக்
சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 14-18வயது வரையிலான 3600 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.
மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (செப்டெம்பர் 5-25)ரினிடாட் & ரொபாக்கோவில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 2வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் தென்கொரியா, ஜப்பானினை இறுதிப்போட்டியில் 5-4(3-3) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு முதல் தடவையாக சாம்பியனாகியது.
பொதுநலவாய விளையாட்டு போட்டிகள்... (ஒக்டோபர் 3-14)19வது பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றன.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா(74/55/48), இந்தியா(38/27/36), இங்கிலாந்து(37/59/46) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டன.
ஆசிய விளையாட்டு போட்டிகள்... ( நவம்பர் 11-27)16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்றது.
ஆசிய விளையாட்டு நிகழ்வில் சீனா(199/119/98), தென்கொரியா(76/65/91), ஜப்பான்(48/74/94) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.
ஆசிய விளையாட்டு வரலாற்றில் சீனா 1000+ தங்கப் பதக்கங்களைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிரிக்கெட்டில் .....இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பெற்றமை, அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினை இழந்தமை, பங்களாதேஷ் அணி~ நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் முழுமை வெற்றியைப் பெற்றமை etc…..
***