Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Sunday, February 13, 2011

அழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........




பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகும் காட்சியளிக்கும் சிவப்பு சிங்கமீன்கள்(Red Lionfish) இதுவரையும் மனிதர்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்பட்டிருந்தன. ஆனால் இந்த மீனினங்கள் மனிதர்களுக்கு மாத்திரமின்றி அவை வாழுகின்ற இயற்கை சூழற்றொகுதிக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


ஒரு சிங்க மீனானது, முருகைக்கற் சூழற்றொகுதியொன்றில் அறிமுகமாகின்றபோது, அவை அறிமுகமாகிய ஒரு சில வாரங்களிலேயே அந்த முருகைக்கற் சூழற்றொகுதியில் வாழ்கின்ற சிறிய மீனினங்களில் 80% ஆனவை அழிவடைந்துபோவதாக அமெரிக்க நாட்டினைச் ஒரிகொன் மாநில பல்கலைக்கழக கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் சிங்க மீனினங்கள் உயர்ந்தபட்சத்தில் ஏனைய உயிரினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவையாகும்.

மேற்கு பசுபிக் கடலின் சுதேச நீர்ப்பரப்புகளின் சூழற்றொகுதிகள் சிங்க மீனினங்களின் வாழிடமாக விளகுகின்றன, இந்த சூழற்றொகுதிகள், சிங்க மீனினங்கள் ஏனைய உயிரினங்களை தின்கின்ற நடத்தையின் காரணமாக தம்மை மாற்றிக்கொண்டுள்ளன.

இந்த மீனினங்கள் இனப்பெருக்கம் செய்து மிகவிரைவாக பல்கிப்பெருகுவதுடன், இவை வாழ்கின்ற சூழலின் வெளியே இவற்றினை உணவாக்கிக்கொள்ள எதிரிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய ஆண்டுகளில், இந்த மீனினங்கள் அவற்றின் வழமையான சுதேச வாழிடங்களினை விடவும் மேலும் சில பிராந்தியங்களில் அதாவது கரீபியன், தென் அமெரிக்க முருகைக்கற் சூழற்றொகுதியில் பாரியளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

இந்த மீன்களின் அறிமுகமானது கரீபியன் பிராந்திய முருகைக்கற் சூழற்தொகுதியில் புதுமையினை , விந்தையினை ஏற்படுத்திவிடக்கூடும். இது சுற்றுலாத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும்.

இதனால் மெக்சிக்கோ, பெலிஸ் போன்ற சில நாடுகள் சுழியோடிகளுக்கு, பிடிக்கின்ற மீன்களின் தொகைக்கேற்ப பணத்தினை வழங்கி இவற்றினை கட்டுப்படுத்த முனைகின்றன. ஆனாலும் இவை பாரியளவில் காணப்படுகின்றன என்பது சுழியோடிகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தொகையிலிருந்து புலப்படுகின்றனது என்பது கவலைதரும் செய்தியாகும். பாரம்பரிய மீன்பிடிமுறைகளான வலைகளைப் பயன்படுத்தி இவற்றினை கட்டுப்படுத்தமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சில பகுதிகளில் மிகப்பிரபலமான உணவாக இந்த மீனினங்கள் விளங்கினாலும், அலங்கார மீன் தொழிற்துறையில் மிக அதிகமான விலை கொண்ட மீனினமாகவும் இந்த மீனினங்கள் விளங்குகின்றன.

கடல் சூழற்றொகுதிகளினை பாதுகாப்பதற்காக இந்த மீனினங்களை அதிகளவில் உணவாக்கிகொள்ள மக்களுக்கு விஞ்ஞானிகள் அழைப்புவிடுகின்றனர்.


Lionfish தொடர்பான பொதுவான தகவல்கள்

ஸ்கோப்பியன் மீன் குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மீனினங்களின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் ~ 5-10 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இந்த மீனினங்கள் 15 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.

இந்த மீனினங்கள் வெளிப்புறமாக ஊசி போன்ற முற்கள் 18இனைக் கொண்டுள்ளன. இவை அதிக விஷமுடையவை ஆகும்.

இந்த மீனினங்கள் தனது ஊசி போன்ற முற்களால் மனிதனை தாக்குகின்றபோது மிகக் கடுமையான வலிகள் ஏற்படுத்துவதுடன், வாந்தி, சுவாசப்பிரச்சினைகள், பாரிச வாதம் அத்துடன் அரிதாக மரணத்தினையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

***

Wednesday, December 22, 2010

கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதல் தபால்நிலையம்....




உலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது.

இந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.

கடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




1965ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட 5 ஷில்லிங் பெறுமதியான முத்திரை






அதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், முத்திரைகளும் வழங்கப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

***

Thursday, September 16, 2010

கரையே இல்லாத கடற்கரை.....!!!



அடடா...... என்னா? கரையே இல்லாத கடற்கரையா?.... ஆமாங்க.... சர்காசோ கடல்தான் இந்த சிறப்புக்குக்குரிய கடலாகும். சர்காசோ கடலானது வட அத்திலாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிராந்தியமாகும். இந்தக் கடலானது சமுத்திர நீரோட்டங்களினால் சூழப்பட்டு, கரையினைக் கொண்டிராத ஒரே கடலாக விளங்குகின்றது. இதன் எல்லைகளாக மேற்கே வளைகுடா சூடான சமுத்திர நீரோட்டமும் , வடக்கே வட அத்திலாண்டிக் சமுத்திர நீரோட்டமும், கனேரி சமுத்திர நீரோட்டமும், தெற்கே வட அத்திலாண்டிக் பூமத்தியரேகை சமுத்திர நீரோட்டமும் விளங்குகின்றன.


சர்காசோ கடலானது, அத்திலாண்டிக்கில் ஒரு பாகமாக 20o - 35o வட அகலாங்கிலும், 30o - 70o மேற்கு நெட்டாங்குக்கும் இடையே விசாலமாக பரந்து காணப்படுகின்றது. இந்தக் கடலின் மேற்கு எல்லைக்கு அண்மையில் பெர்முடா முக்கோணப் பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..

சர்காசோ கடலானது 700 கடல்மைல்கள்(1100கி.மீ) அகலமானதுடன், 2000 கடல்மைல்கள்(3200கி.மீ) நீளமானதுமாகும்.

15ம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேய கடற்படையினரால் முதன்முதலில் இந்த பிராந்தியம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



பாரியளவில் சர்காசோம் கடல் தாவரங்கள் மிதந்தவண்ணம் காணப்படுகின்றமை இந்தக் கடலின் சிறப்பம்சமாகும்.

தென் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இனவிருத்திக்காகவும், முட்டை இடுவதற்காகவும் சர்காசோ கடலினை நோக்கி ஈல்கள் நீந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இந்த ஈல்கள் தமது நீண்ட தூர கடற்பயணத்தினை தமது பழைய வாழிடங்களான தென் அமெரிக்கா, ஐரோப்பாவினை நோக்கி சென்றுவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தினைப்போல சர்காசோ கடலிலும் பல படகுகள் காணாமல்போனதாக வரலாற்றுச் சம்பவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


***
Blog Widget by LinkWithin