
அடடா...... என்னா? கரையே இல்லாத கடற்கரையா?.... ஆமாங்க.... சர்காசோ கடல்தான் இந்த சிறப்புக்குக்குரிய கடலாகும். சர்காசோ கடலானது வட அத்திலாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிராந்தியமாகும். இந்தக் கடலானது சமுத்திர நீரோட்டங்களினால் சூழப்பட்டு, கரையினைக் கொண்டிராத ஒரே கடலாக விளங்குகின்றது. இதன் எல்லைகளாக மேற்கே வளைகுடா சூடான சமுத்திர நீரோட்டமும் , வடக்கே வட அத்திலாண்டிக் சமுத்திர நீரோட்டமும், கனேரி சமுத்திர நீரோட்டமும், தெற்கே வட அத்திலாண்டிக் பூமத்தியரேகை சமுத்திர நீரோட்டமும் விளங்குகின்றன.
சர்காசோ கடலானது, அத்திலாண்டிக்கில் ஒரு பாகமாக 20o - 35o வட அகலாங்கிலும், 30o - 70o மேற்கு நெட்டாங்குக்கும் இடையே விசாலமாக பரந்து காணப்படுகின்றது. இந்தக் கடலின் மேற்கு எல்லைக்கு அண்மையில் பெர்முடா முக்கோணப் பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..
சர்காசோ கடலானது 700 கடல்மைல்கள்(1100கி.மீ) அகலமானதுடன், 2000 கடல்மைல்கள்(3200கி.மீ) நீளமானதுமாகும்.
15ம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேய கடற்படையினரால் முதன்முதலில் இந்த பிராந்தியம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாரியளவில் சர்காசோம் கடல் தாவரங்கள் மிதந்தவண்ணம் காணப்படுகின்றமை இந்தக் கடலின் சிறப்பம்சமாகும்.
தென் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இனவிருத்திக்காகவும், முட்டை இடுவதற்காகவும் சர்காசோ கடலினை நோக்கி ஈல்கள் நீந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இந்த ஈல்கள் தமது நீண்ட தூர கடற்பயணத்தினை தமது பழைய வாழிடங்களான தென் அமெரிக்கா, ஐரோப்பாவினை நோக்கி சென்றுவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தினைப்போல சர்காசோ கடலிலும் பல படகுகள் காணாமல்போனதாக வரலாற்றுச் சம்பவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***
No comments:
Post a Comment