Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Thursday, July 15, 2021

ஒலிம்பிக்கில் இந்தியா

தனி ஒருவராக மைக்கல் பெல்ப்ஸ் வென்ற பதக்கங்கள் 28  (23 golds, 3 silvers, 2 bronzes) . ஒரு நாடாக இந்தியா பெற்ற பதக்கங்களும் 28.


தடகள போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே வீரர் நார்மன் பிரிட்சர்ட். 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாக இருந்தாலும், இந்தியாவில் வளர்ந்து பணி புரிந்தவர்.


1928-1980 முதல் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அசைக்க முடியாத பலமாக இருந்துள்ளது. 8 முறை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளியும், 2 வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

சுதந்திர இந்தியாவில் பதக்கம் வென்ற முதல் தனி நபர் கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சின்க்கி (ஃபின்லாந்து) ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா வென்ற வெண்கலப் பதக்கங்கள் மொத்தம் 9.

5 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர். முதல் பதக்கம் வென்ற பெருமை பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியைச் சேரும்.


மொத்தமாக இந்தியா இதுவரை 22 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது.

இந்தியா பங்கேற்ற 24 ஒலிம்பிக்குகளில், பதக்கமின்றி நாடு திரும்பிய ஒலிம்பிக்குகள் 6. (1920,1924,1976,1984,1988,1992)

                                                                        (@Vikatan)

Tuesday, August 14, 2012

நீங்கியது ஒலிம்பிக் காய்ச்சல்.......


கடந்த ஜூலை மாதம் 27ம் திகதியிலிருந்து ஆகஸ்ட்  மாதம் 12ம் நாள்வரை லண்டன் நகரில் அரங்கேறிய 30வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து முதல் தடவையாக தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பிரேசில் ரிஜோ டி ஜெனிரோ நகரில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 5-21ம் திகதி வரை அரங்கேறக் காத்திருக்கின்றது.


2012 லண்டன் ஒலிம்பிக் தொடர்பிலான சில சிறப்பு அம்சங்கள்...........

Ø  ஒலிம்பிக் வரலாற்றில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக அதிகூடிய மொத்தப் பதக்கங்களை வெற்றிகொண்டவர் என்கின்ற சாதனையினை ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ்(22 பதக்கங்கள்) தனதாக்கிக்கொண்டார். இதற்கு முன்னர் இந்தச்சாதனை சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லற்னினா(18 பதக்கங்கள்)  வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  உலகில் அதிவேகமான மனிதரான ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் 100m, 200m குறுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக 2 தடவைகள்(2008 பீஜிங் & 2012 லண்டன்) தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்ட உலகின் ஒரே வீரர் என்ற பெருமையினை தனதாக்கிக்கொண்டார்.



Ø  5000m, 10000m ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்ட பிரிட்டனின் ஒரே வீரர் மற்றும் உலகளவில் 7வது வீரர் என்ற பெருமையினை மோ ஃபரஹ் தனதாக்கிக்கொண்டார்.

Ø  100m, 200m குறுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக 2 தடவைகள்(2008 பீஜிங் & 2012 லண்டன்) தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்ட உலகின் ஒரே வீரர் என்ற பெருமையினை தனதாக்கிக்கொண்டார்.

Ø  4×100 m பெண்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஐக்கிய அமெரிக்கா 40.82 செக்கன்களில் ஓடிமுடித்து, 41.37செக்கன்களில் கிழக்கு ஜேர்மனி அணி 1985ம் ஆண்டு நிகழ்த்திய உலக சாதனையினை முறியடித்தது.

Ø  4×100 m ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஜமைக்கா அணி 36.84 செக்கன்களில் ஓடிமுடித்து, புதிய உலக சாதனையினை  நிலைநாட்டியது.

Ø  ஒலிம்பிக் வரலாற்றில், முதல்முறையாக போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து நாடுகளிலிருந்தும்(204) பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக சவூதி அரேபியா, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் முதல்முறையாக பங்குபற்ற வாய்ப்பளித்தது.

Ø  ஒலிம்பிக் வரலாற்றில், முதல்முறையாக மகளிர்க்கான குத்துச்சண்டை போட்டியில் பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்த நிக்கோலா அடம்ஸ் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டார். வெண்கலப்பதக்கத்தினை இந்தியாவினைச் சேர்ந்த மேரி கோம் வெற்றிகொண்டார்.

Ø  கென்யாவின் டேவிட் ருடிஷா, 800m ஓட்டப்பந்தயத்தில் புதிய உலகசாதனையினை 1 நிமிடம், 40.91 செக்கன்கள் என்கின்ற நேரப்பெறுதியில்  படைத்ததுடன், 3 உலக சாதனைகளை முறியடித்த ஒரே வீரராக பதிவாகினார். மேலும் 36வருடமாக கியூபா நாட்டினைச் சேர்ந்த அல்பேர்ட்ரோ ஜூவான்ரொரேனா வசமிருந்த 800m ஒலிம்பிக் சாதனையினையும் முறியடித்தார். 



Ø  2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 86 நாடுகள் பதக்கங்களை வென்றிருந்தன, ஆனால் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 85 நாடுகளே பதக்கங்களை வெற்றிகொண்டன. இதில் 54 நாடுகள் தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Ø  ஒலிம்பிக் வரலாற்றில், பெரிய பிரித்தானியா 2வது முறையாக அதிகபட்சமாக 65பதக்கங்களை(29 தங்கம்) வெற்றிகொண்டது 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலாகும். இதில் இதற்குமுன்னர் அதிகபட்சமாக, 1908 ஒலிம்பிக்கில் 136 பதக்கங்கள்(55 தங்கம்)

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை(தலா 04) பெற்ற தங்க மகன் மைக்கல் பெல்ப்ஸ்(USA), தங்க மங்கை மிஸ்ஸி ப்ராங்ளின்(USA).

Ø  கனடா நாட்டினைச் சேர்ந்த இயன் மில்லர் 10வது தடவையாக ஒலிம்பிக் குதிரையேற்ற சவாரியில் போட்டியிட்டு சாதனை படைத்தார்.



Ø  ஒலிம்பிக் மகளிர் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை(12) அடித்த வீராங்கனையாக பிரேசில் நாட்டினைச் சேர்ந்த கிரிஸ்ரெய்ன் சாதனை படைத்தார்.

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வயது குறைந்தவராக லித்துவேனிய மங்கை ரூடா மெய்ல்ரைட் சாதனை படைத்தார். (15 ஆண்டுகள், 133 நாட்கள்)

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்(வெள்ளி) வென்ற வயது குறைந்தவராக மெக்ஸிக்கோ மங்கை அலேஜன்ட்ரா ஒரொஸ்கோ சாதனை படைத்தார். (15 ஆண்டுகள், 103 நாட்கள்)

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்(வெண்கலம்) வென்ற வயது கூடியவராக  நியூசிலாந்தின் மார்க் ரொட் சாதனை படைத்தார். (56 ஆண்டுகள்)

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வயது வயது கூடியவராக  பெரிய பிரித்தானியாவின் நிக் ஸ்கெல்டோன் சாதனை படைத்தார். (45 ஆண்டுகள்)

Ø  ஐக்கிய அமெரிக்காவானது வெளிநாட்டு மண்ணில் அதிக தங்கப் பதக்கங்களை(46) வெற்றிகொண்டது 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலாகும்.

Ø  ஒலிம்பிக் வரலாற்றில், பஹ்ரைன், பொட்ஸ்வானா, சைப்பிரஸ், காபோன், கிரினடா, கெளதமாலா, மொன்ரினிக்ரோ ஆகிய நாடுகள் தமது முதல் பதக்கத்தினை பதிவுசெய்துகொண்டது 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலாகும். இதில் கிரினடா, மொன்ரினிக்ரோ ஆகிய நாடுகள் தமது முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டன.

Ø  ஐக்கிய அமெரிக்க அணி நைஜீரியாவுக்கெதிரான கூடைப்பந்தாட்டப்போட்டியில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று புதிய சாதனை படைத்தது. (156-73)

Ø  2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப்பதக்கங்கள், 4 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 6 பதக்கங்களைப் பெற்று பதக்க தரவரிசையில் 34ம் இடத்தினைப் பிடித்துக்கொண்டது.



***

Sunday, August 12, 2012

ஒலிம்பிக் வரலாற்றில் அதிகூடிய பதக்கங்களை வெற்றிகொண்டவர்கள்...


லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 30வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினத்துடன்(12/08/2012) நிறைவடைய இருக்கின்றது.

இந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அந்தவகையில் மிகமுக்கியமான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற, ஒலிம்பிக் வரலாற்றில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக அதிகூடிய மொத்தப் பதக்கங்களை வெற்றிகொண்டவர் என்கின்ற சாதனையினை ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனதாக்கிக்கொண்டார். இதற்கு முன்னர் இந்தச்சாதனை சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லற்னினா வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக அதிகூடிய மொத்தப் பதக்கங்களை வெற்றிகொண்டவர்கள் வருமாறு...

1)     மைக்கல் பெல்ப்ஸ்(ஐக்கிய அமெரிக்கா)
நீச்சல்(2004-2012 ஒலிம்பிக்)
தங்கம் – 18; வெள்ளி – 02; வெண்கலம் – 02
மொத்தம் – 22 பதக்கங்கள்



2) லரிசா லற்னினா(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1956-1964 ஒலிம்பிக்)
தங்கம் – 09; வெள்ளி – 05; வெண்கலம் – 04
மொத்தம் – 18 பதக்கங்கள்



3) நிகோலி அன்ரினோவ்(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1972-1980 ஒலிம்பிக்)
தங்கம் – 07; வெள்ளி – 05; வெண்கலம் – 03
மொத்தம் – 15 பதக்கங்கள்
                                             
4) பொரிஸ் ஷக்லின்(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1956-1964 ஒலிம்பிக்)
தங்கம் – 07; வெள்ளி – 04; வெண்கலம் – 02
மொத்தம் – 13 பதக்கங்கள்

5) எடோர்டோ மங்கியாரொர்டி(இத்தாலி)
வாள் சண்டை(1936-1960 ஒலிம்பிக்)
தங்கம் – 06; வெள்ளி – 05; வெண்கலம் – 02
மொத்தம் – 13 பதக்கங்கள்

6) பாவோ நுர்மி(பின்லாந்து)
தடகளம்(1920-1928 ஒலிம்பிக்)
தங்கம் – 09; வெள்ளி – 03  
மொத்தம் – 12 பதக்கங்கள்

7) ப்ஜோர்ன் டக்லிய்(நோர்வே)
பனிச்சறுக்கல்(1992-1998 குளிர்கால ஒலிம்பிக்)
தங்கம் – 08; வெள்ளி – 04
மொத்தம் – 12 பதக்கங்கள்

8) பிர்கிட் பிஸ்செர்(ஜேர்மனி)
படகோட்டம்(1980-2004 ஒலிம்பிக்)
தங்கம் – 08; வெள்ளி – 04
மொத்தம் – 12 பதக்கங்கள்

9) சாவோவ் காடோ(ஜப்பான்)
ஜிம்னாஸ்டிக்(1968-1976 ஒலிம்பிக்)
தங்கம் – 08; வெள்ளி – 03; வெண்கலம் – 01
மொத்தம் – 12 பதக்கங்கள்

10) ஜென்னி தொம்ப்சன்(ஐக்கிய அமெரிக்கா)
நீச்சல்(1992-2004 ஒலிம்பிக்)
தங்கம் – 08; வெள்ளி – 03; வெண்கலம் – 01
மொத்தம் – 12 பதக்கங்கள்

***

Saturday, August 4, 2012

வெற்றுக் கால்களுடன் ஒலிம்பிக் மரதனில் தங்கப்பதக்கத்தினை வென்றெடுத்தவர்.....


ஒலிம்பிக் வரலாற்றில் வெற்றுக் கால்களுடன் மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தினை வென்றெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் உகண்டா நாட்டினைச் சேர்ந்த அபேபே பிகிலா ஆவார்.
இவர்1960ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு 2:16:15.2  நேரப்பெறுதியில் உலகசாதனையுடன் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்ட முதல் கறுப்பின ஆபிரிக்க தேசத்தவர் என்ற பெருமையினை பிகிலா பெற்றுக்கொண்டார்.

உகண்டா தேசத்தின் பின்தங்கிய குக்கிராமத்தினை சேர்ந்த அபேபே பிகிலா ரோம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆரம்பத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் தனது நாட்டினைச் சேர்ந்த ஓட்டவீரரொருவர் உபாதைக்குள்ளாகியமையடுத்து அவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிகிலா 1964ம் ஆண்டு டோக்கியோ  ஒலிம்பிக் மரதன் ஓட்டப்போட்டியில் பாதணிகளுடன் கலந்துகொண்டு 2:12:11.2  நேரப்பெறுதியில் உலகசாதனையுடன் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டார்.
இதன்மூலம் ஒலிம்பிக் மரதன் ஓட்டப்போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்ட ஒரே வீரர் என்ற சாதனையினை பிகிலா படைத்தார்.

பிகிலா 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ சிட்டி  ஒலிம்பிக் மரதன் ஓட்டப்போட்டியிலும் கலந்துகொண்டார், ஆனாலும் அவரின் பாதத்தில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக 17கிலோமீற்றர் தூரத்தினை மாத்திரமே அவரினால் பூர்த்திசெய்யமுடிந்தது.

இவர் 1969ம் ஆண்டு வீதிவிபத்தில் சிக்கி காயத்துக்குள்ளாகியதுடன், 1973ம் ஆண்டு மூளை இரத்த ஒழுக்கு நோயின் காரணமாக தனது 41வது வயதில் காலமானார். இவரின் இறப்பினை தேசிய துக்க தினமாக உகண்டா நாட்டு மன்னர் அறிவித்தார்.

 ****************************************************
குறிப்பு - லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற இந்தகாலகட்டத்தில் ஒலிம்பிக் தொடர்பிலான பல்வேறு சுவாரஷ்சியமான துணுக்குகளினை  நாளாந்தம் எனது பேஷ்புக் பக்கத்திலும் (www.facebook.com/kklogan2) இட்டுவருகின்றேன்.  அதனையும் நண்பர்கள் படித்து அறிந்துகொள்ளலாம்.

***

Sunday, July 15, 2012

ஒலிம்பிக் மரதன் ஓட்டத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்திய நிகழ்வு.....

ஒலிம்பிக் போட்டிகளில் முக்கியத்துவமான விளையாட்டாக மதிக்கப்படுகின்ற நிகழ்வாக "மரதன்" ஓட்டப்போட்டிகள் விளங்குகின்றன. அந்தவகையில் 2004ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமான ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பரபரப்பினை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றது.

 
மதுபோதையில்வந்த சமூகவிரோதியால் தடுத்துநிறுத்தப்படும் 
வன்டெர்லெய் டீ லிமா

ஆம்.... ஒலிம்பிக் போட்டிகளில் நிறைவு அம்சமாக மரதன் ஓட்டப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன. வழமைபோன்று 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் நிகழ்விலும் மரதன் ஓட்டப்போட்டி நிறைவு அம்சமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போட்டியின் நிறைவுத்தூரத்திற்கு 4 மைல்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோது முதலாவதாக ஓடிவந்துகொண்டிருந்த பிரேசில் நாட்டின் வன்டெர்லெய் டீ லிமா சற்றும் எதிர்பாராதவிதமாக, அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த முன்னாள் பாதிரியார் கொர்னீலியுஸ் ஹொரன் அவர்களினால் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்படுகின்றார். இதனால் நிலைகுலைந்த வன்டெர்லெய் டீ லிமாவினை பின்தள்ளி இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்ரிப்னோ பல்டினி(2hr 10:54Secs), தங்கப்பதக்கத்தினை தட்டிச்செல்ல, வெள்ளிப்பதக்கத்தினை ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த மெவ்ரஹ்ரொம் கெப்லிசிக்ஹி(2hr 11:29Secs) தட்டிச்செல்ல வன்டெர்லெய் டீ லிமா(2hr 12:11Secs) வெண்கலப்பதக்கத்தினையே பெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட மரதன் ஓட்டப்போட்டியில் 20km,25km,30km,35km ஆகிய தூரங்களில் வன்டெர்லெய் டீ லிமாவே முன்னிலையில் ஓடிக்கொண்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கதாகும்.

ஆனாலும் இவரின் உயரிய தன்மைக்கும், நேர்மைத் தன்மைக்கும் மதிப்பளித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் உயரிய விருதாகிய "பியர் டீ கூபடின்" பதக்கத்தினை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வழங்கி கெளரவமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Tuesday, July 3, 2012

ஒலிம்பிக் ஹொக்கியில் சாதனை படைத்த இந்திய அணி….


ஹொக்கி என்றால் அதன் மறுபெயர் இந்தியாதான் என்றொரு காலமிருந்தது. ஆம்…. இந்தியா இதுவரை ஆடவர் ஹொக்கியில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 11 பதக்கங்களினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ச்சியாக அதிக தடவை(06) தங்கப்பதக்கம் வென்ற நாடு இந்தியாதான். 


ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி தங்கப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø  1928 – ஆம்ஸ்ரடாம்
Ø  1932 – லொஸ் ஏஞ்சல்
Ø  1936 – பேர்லின்
Ø  1948 – லண்டன்
Ø  1952 – ஹெல்சிங்கி
Ø  1956 – மெல்பேர்ன்
Ø  1964 – டோக்கியோ
Ø  1980 - மொஸ்கோ

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்ற ஆண்டு
Ø  1960 – ரோம் (பாகிஸ்தான் தங்கப்பதக்கம்)

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø  1968 – மெக்சிக்கோ (பாகிஸ்தான் தங்கப்பதக்கம்)
Ø  1972 – மூனிச் (மேற்கு ஜேர்மனி தங்கப்பதக்கம்)

அறிந்து கொள்வோம்......

Ø  ஒலிம்பிக் விளையாட்டில் ஆடவருக்கான ஹொக்கி முதன்முதலில் அறிமுகமாகியது 1908ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியிலாகும். இதன் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து அணி, அயர்லாந்து அணியினை 08 – 01 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி ஹொக்கியில் முதல் தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  1912, 1924ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டிகளில் ஹொக்கி விளையாட்டானது சேர்த்துக்கொள்ளப்படவில்லை.


இந்தியா, 32 ஆண்டுகளின்பின் ஒலிம்பிக் ஹொக்கியில்  சாதனை படைக்குமா?.....


******************************************************

"கிரிக்கெட்டில் 199".....!!!

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்களை பெற்ற சோகமான சாதனைக்குரியவராக தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அன்டி பிளவர்[சிம்பாப்வே] திகழ்ந்தார்.


இந்தப் பட்டியலில் இறுதியாக இணைந்துகொண்டவர் இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆவார். இலங்கை மண்ணில் நடைபெறுகின்ற இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 1வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ்சில் குமார் சங்கக்கார 199 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனுடன் தொடர்புடைய முந்தைய என் பதிவு.........

***
Blog Widget by LinkWithin