Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Friday, April 25, 2014

ஏப்ரல் 25 – உலக பென்குவின் தினம்


உலகளாவியரீதியில் ஏப்ரல் 25ம் திகதி உலக பென்குவின் தினமாக கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், பென்குவின்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…!

v உலகில் 17 வகையான பென்குவின் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 13 வகையான பென்குவின் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

v பென்குவின்கள் பறக்கமுடியாத பறவை இனங்களைச் சேர்ந்தவையாகும்.

v அதிகளவான பென்குவின்கள் தென் துருவத்திலேயே வசிக்கின்றன. ஆனால் வட துருவத்தில் பென்குவின்கள் இல்லையாம்.

v பென்குவின்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளாவன நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி, ஆர்ஜென்ரீனா மற்றும் தென்னாபிரிக்கா.

v பென்குவின் இனங்களில் மிகப்பெரிய இனமாக பேரரசர் பென்குவின் (Emperor Penguins) இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 1.2m (4’) ஆகும்.  அவற்றின் நிறை சராசரியாக 45kg ஆகும்.

v பென்குவின் இனங்களில் மிகச்சிறிய இனமாக சிறிய நீல பென்குவின் (Little Blue Penguins) இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 33 cm (13”) ஆகும்.

v உலகில் அதிகளவில் காணப்படும் பென்குவின் இனமாக மகரோனி பென்குவின் இனங்கள் விளங்குகின்றன.


v பென்குவின்களின் சாதாரண உடல் வெப்பநிலை 100°F (38°C) ஆகும்.

v பென்குவின்கள் கடல் நீரினையும் குடிக்கின்றன. அவற்றின் கண் குழிகளை சுற்றியுள்ள விசேட சுவை அரும்புகளினால் அவை கடல் நீரின் உவர்ப்பு சுவையினை மாற்றிக்கொள்கின்றன.


v பென்குவின்கள் 10 – 15 நிமிடங்கள் வரையில் நீரின் அடியில் தங்கியிருக்ககூடிய இயலுமை கொண்டவையாகும். ஆனால் நீரின் அடியில் அவைகளினால் சுவாசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


v பென்குவின்கள் மணிக்கு 5 – 6 மைல்கள் வேகத்தில் நீந்தக்கூடியவையாகும். 1.7mph – 2.4mph வேகத்தில் நடக்கக்கூடியவையாகும்.


v பென்குவின்களின் பாலின இயல்புகளைக் கொண்டு ஆண், பெண் இனங்களினை அடையாள கண்டுகொள்ள முடியாது. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவையாகும்.

v பென்குவின்கள் தனது வாழ்க்கையில் 75% இனை கடலிலேயே கழிக்கின்றன.




***

Saturday, December 15, 2012

பறவைகள் தொடர்பிலான சுவாரஷ்சியத் தகவல்கள்...



♫ பறவை இனங்களில், மிக நீளமான அலகினைக் கொண்ட பறவை இனம் "அவுஸ்திரேலியன் பெலிகன்" ஆகும். இதன் அலகின் நீளம் சராசரியாக 18.5 அங்குலங்கள் (47 சென்ரிமீற்றர்கள்).
இந்த நீர்வாழ்ப் பறவை இனங்கள் பொதுவாக அவுஸ்திரேலியா, நியூ கினியா, பிஜி, இந்தோனேசியாவின் சில பகுதிகள், மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகின்றன.



♫ பறவை இனங்களில், அதிக நிறையினைக் கொண்ட பறக்கும் பறவை இனம் "பஸ்ராட்" ஆகும். இதன் நிறையினை குறிப்பிடுவதாயின் சராசரியாக ஒரு ஆறு வயது மனிதக் குழந்தையின் நிறையினை ஒத்ததாகும்.



♫ பறவை இனங்களில், வருடாந்தம் அதிக தூரம் இடம்பெயரும் பறவை இனம் "ஆர்ட்டிக் ரேன்" ஆகும். இவை வருடாந்தம் 20000 – 25000மைல்கள் (32000 - 40000கிலோமீற்றர்) தூரம் ஆர்ட்டிக் பிராந்தியத்திலிருந்து அந்தாட்டிக்கா பிராந்தியத்திற்கு பயணித்து மீண்டும் திரும்பி வருகின்றன.



♫  "ஹம்மிங் பேர்ட்" பறவைகள் செயற்பாட்டிலிருக்கும்போது நிமிடமொன்றுக்கு 300 – 500 தடவைகள் சுவாசிக்கும். "ஹம்மிங் பேர்ட்" பறவையின் உடற்பருமனில் அண்ணளவாக 20% வகிபாகத்தினை இதயம் பெறுகின்றது. பறவைகளினையும், அதன் செயற்பாட்டினையும் பொறுத்து "ஹம்மிங் பேர்ட்" பறவைகளின் இதயத்துடிப்பு நிமிடமொன்றுக்கு 30 – 1500 தடவைகள் ஆகும். "ஹம்மிங் பேர்ட்" பறவைகள் 10 நிமிடத்திற்கொரு தடவை சாப்பிட்டுக்கொண்டே இருக்குமாம். இவை நாளாந்தம் அதனது உடல் நிறையில் மூன்றில் இரண்டு பங்களவான உணவினை உட்கொள்கின்றதாம்.
"ஹம்மிங் பேர்ட்" பறவைகள் வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. "ஹம்மிங் பேர்ட்" பறவைகள் கியூபா நாட்டின் தேசியப் பறவை ஆகும்.



♫ பறவை இனங்களில்,  நீச்சல் மூலம் இடம்பெயரும் ஒரே பறவை இனம் "மகலன் பென்குவின்" ஆகும். ஆர்ஜென்ரீனா மாகாணமான ரியாரா டெல் பியுகோவிலிருந்து, பிரேசில் கரையினை நோக்கி இவை 5000மைல்கள் தூரம் நீரில் பயணம் செய்கின்றன.



***

Saturday, August 25, 2012

ஈமு பறவைகள்...!!!


அண்மைய நாட்களில் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஈமு பண்ணைகளை நடாத்திவந்த பண்ணையாளர்கள் பெருமளவு பணத்தினை சுருட்டிக்கொண்டு தலைமறைவாக ஈமு பறவைகள் உணவின்றி செத்துமடிவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஈமு பறவைகள் தொடர்பான சிறு பார்வை.........



அவுஸ்திரேலிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட ஈமு பறவைகள் அந்த நாட்டின் தேசியப் பறவையும் ஆகும். தீக்கோழிகளினையடுத்து உலகில் மிக உயரமான பறவை வகையினைச் சேர்ந்தவை ஈமு பறவைகள் ஆகும். இவை சராசரியாக 6 - 6.5 அடி (1.5 - 2 மீற்றர்) உயரம் வரை வளரக்கூடியவை அத்துடன் இவற்றின் சராசரி நிறை 50 - 55 கிலோகிராமிற்கும் அதிகமானதாகும். ஈமு பறவைதான் பின்னோக்கி நடக்கமுடியாத ஒரே பறவை வகை ஆகும்.

ஈமு(Emu) என்ற வார்த்தை அரபு மொழியிலிருந்து பிறந்ததாகும், இதற்கான அர்த்தம் மிகப் பெரியவை என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் Dramaius Novahollandiae ஆகும்.

அவுஸ்திரேலியாவின் குளிர் மலைப் பிரதேசங்கள், புதர் மற்றும் மரங்கள் நிறைந்த வரண்ட நிலப்பகுதி மற்றும் சமவெளிகளில் ஈமு பறவைகள் 80 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றன. பொதுவாக இவை அடர் வனங்கள், பாலைவனங்களில் வசிப்பதனை தவிர்த்துவருகின்றன. 



தீக்கோழி, கிவி பறவைகளினைப் போன்றே பறக்கமுடியாத பறவை வகையினைச்(Ratites) சேர்ந்த  ஈமு பறவைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை ஆகும், இவற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 31 மைல்களுக்கும்(50கிலோமீற்றர்) அதிகமாகும். அத்துடன் ஈமு பறவைகள் வேகமாக நீந்தக்கூடிய ஆற்றல் கொண்டவையுமாகும்.

ஈமு பறவைகளுக்கு  நீர் நிறைந்த குட்டைகளில் விளையாடுவது ரொம்ப பிடித்தமானதாகும்.


கம்பளிப்பூச்சிகளே இவற்றின் விருப்பமான உணவாகும், அத்துடன் வெட்டுக்கிளிகள், புற்கள், பூக்கள், பழங்கள், விதைகள், தளிர்கள் , வண்டுகள் ஆகியவற்றினையும், சில வேளைகளில்  இவை கற்களையும் உட்கொள்ளும்.
சில வேளைகளில் ஈமு பறவைகள் உணவினைத்தேடி 15 – 25 கிலோமீற்றர் தூரம் பயணிக்குமாம்.

ஈமு பறவைகள் ஒரு ஒழுங்குமுறைக்கமைய நீரினை குடிக்கின்றன. அவை நீரினை வீணாக்குவதில்லை,  அவை ஒரு நாளில் 3 கலன்கள் நீரினையும் அருந்தும் தன்மையும் கொண்டவையாகும்.

ஈமு பறவைகளில் ஆண் பறவைகளினைவிடவும் பெண் பறவைகள் உயரமானவையாகும். காடுகளில் வாழ்கின்ற ஈமு பறவைகளின் சராசரி ஆயுட்காலம் 5 – 10 ஆண்டுகளாகும்.

ஈமு பறவைகளின் எதிரிகள் டிங்கோ, கழுகுகள், பூனைகள், நரிகள், நாய்கள் மனிதர்கள் ஆகியனவாகும். இதன் முட்டைகளுக்கு பல்லிகளே எதிரிகளாகும்.

ஆண் ஈமு பறவைகள்  நிலத்தில் குழி தோண்டி மரப்பட்டைகள், புற்கள், மரக் குச்சிகள், இலைகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி சொரசொரப்பான கூட்டினை அமைக்கின்றன.  ஈமு பறவைகளின் கூடுகள் 1.5 மீற்றர் அகலம் கொண்டதாகும்.

பெண் ஈமு பறவைகள் 2 – 3 வயதினை அடையும்போது முட்டையிட  ஆரம்பிக்கும். பொதுவாக 2 - 4 நாட்களுக்கொரு தடவை 1 முட்டை வீதம் சராசரியாக 20 – 30 முட்டைகளினை மார்ச் - ஒக்டோபர் வரையான முட்டையிடும் காலப்பகுதியில் கருமைப்பச்சை நிறத்தில் முட்டைகளையிடுகின்றன. இதன் முட்டையொன்று 0.4 – 0.9 கிலோகிராம் நிறையுடையதாகும்.

பெண் ஈமு பறவைகள் 5 – 11 முட்டைகளை கூட்டில் இட்ட பின் , ஆண் ஈமு பறவைகள் முட்டை மேலேறி அமர்ந்து அடைகாக்கும், இதன் போது அவை உணவின்றி, நீரின்றி குஞ்சு பொரிக்கும்வரை 8 வாரங்களாக அடைகாக்கும் ஆற்றல்கொண்டவையாகும். குஞ்சுகள் பொரித்து 24  மணித்தியாலத்திற்குள் அவை நடக்கும் ஆற்றலை பெற்றுவிடுகின்றன. 



முட்டையிட்ட பின் பெண் ஈமு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேறுதிசை நாடிச் சென்றுவிடுவதனால் ஆண் ஈமு பறவைகளே அடைகாப்பது முதல் அதன் குஞ்சுகளை 18 மாதங்கள்வரையும் தன்னுடன் பராமரித்துக்கொள்கின்றன.

மாமிசத்திற்காகவும், எண்ணெய் உற்பத்திக்காகவும், தோல் பொருட்கள் உற்பத்திக்காகவும், இதன் முட்டைக்கோதுகள் அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பங்களிப்பதால் உலகின் பல நாடுகளில் ஈமு பறவைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

***
Blog Widget by LinkWithin