Showing posts with label ஹொக்கி. Show all posts
Showing posts with label ஹொக்கி. Show all posts

Monday, December 27, 2010

2010இல் விளையாட்டு உலகம்......

இந்த வருடம் பல்வேறு உலகக் கிண்ண நிகழ்வுகளும், அதிகளவான நாடுகள் கலந்துகொண்ட பாரியளவான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

அந்தவகையில் 2010ம் ஆண்டின் சில முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு இதோ........

குளிர்கால ஒலிம்பிக்... (பெப்ரவரி 12-28)



21வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவின் வான்கூவரில் பெப்ரவரி 12-28 வரை நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்ப நிகழ்வுகள் மூடிய அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா(9/15/13), கனடா(14/7/5),ஜேர்மனி(10/13/7)ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.




சச்சின் சாதனை... (பெப்ரவரி 24)


சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் முதல் இரட்டைச்சதம் பெற்ற வீரராக சச்சின் சாதனை படைத்தார். (200* Vs தென்னாபிரிக்கா).



ஆடவர் உலகக் கிண்ண ஹொக்கி... (பெப்ரவரி 28-மார்ச் 13)

12 நாடுகள் பங்குபற்றிய 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பெப்ரவரி28ம் திகதி முதல் மார்ச் 13வரை இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஜேர்மனி அணியினை 2-1 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.

 T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்... ( ஏப்ரல் 30 – மே 16)

மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 3வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி புதிய சாதனையினைப் படைத்தது.

மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.


உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூன் 10-ஜூலை 11)




2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட்... (ஜூன் 15-24)

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்ட 10வது ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில், இந்தியா, இலங்கையினை 81 ஓட்டங்களால் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் வெற்றிகொண்டு 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.


முரளி ஓய்வு...



ஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கட் மைல்கல்லினை அடைந்த ஒரேவீரர் முரளிதரன் ஆவார்.

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூலை 13 - ஆகஸ்ட் 1)

ஜேர்மனியில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 5வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மனி, நைஜீரியாவினை இறுதிப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு 2வது தடவையாக சாம்பியனாகியது.


மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி... (ஆகஸ்ட் 29-செப்டெம்பர் 11)

12 நாடுகள் பங்குபற்றிய 12 வது மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி, ஆர்ஜென்டீனா நாட்டில் ரொசாரியோ நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்து அணியினை 4-2 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.

 மகளிர் உலகக் கிண்ண றக்பி... (ஆகஸ்ட் 20-செப்டெம்பர் 5)
12 நாடுகள் பங்குபற்றிய 4 வது மகளிர் உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி, இங்கிலாந்து, லண்டன் நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியினை 13-10 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.




 1வது இளையோர் ஒலிம்பிக்... (ஆகஸ்ட் 14-26)




வரலாற்றில் முதல் தடவையாக இளையோர் ஒலிம்பிக்
சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 14-18வயது வரையிலான 3600 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.


மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (செப்டெம்பர் 5-25)

ரினிடாட் & ரொபாக்கோவில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 2வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் தென்கொரியா, ஜப்பானினை இறுதிப்போட்டியில் 5-4(3-3) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு முதல் தடவையாக சாம்பியனாகியது.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள்... (ஒக்டோபர் 3-14)

19வது பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றன.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா(74/55/48), இந்தியா(38/27/36), இங்கிலாந்து(37/59/46) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டன.

ஆசிய விளையாட்டு போட்டிகள்... ( நவம்பர் 11-27)



16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்றது.

ஆசிய விளையாட்டு நிகழ்வில் சீனா(199/119/98), தென்கொரியா(76/65/91), ஜப்பான்(48/74/94) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.


ஆசிய விளையாட்டு வரலாற்றில் சீனா 1000+ தங்கப் பதக்கங்களைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


கிரிக்கெட்டில் .....

இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பெற்றமை, அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினை இழந்தமை, பங்களாதேஷ் அணி~ நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் முழுமை வெற்றியைப் பெற்றமை etc…..


***

Wednesday, September 29, 2010

ஹிட்லரை வியக்கவைத்த இந்திய ஹொக்கி அணி....

ஒரு காலத்தில் ஹொக்கி விளையாட்டு என்றால் இந்திய அணிதான் என்ற நிலையிருந்துவந்தது. ஆனால் இந்த நிலைமை தற்சமயம் மாற்றமடைந்துவிட்டது என்றால் மிகையில்லை எனலாம்.

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி இதுவரை 8 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1928ம் ஆண்டு நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹொக்கி அணி முதன்முதலில் தங்கப்பதக்கம் வென்றது.


"மந்திரக்கோல் மன்னர்" என அழைக்கப்பட்ட தயான் சந்

1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்றன. இதில் 1928 மற்றும் 1932ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தயான் சந் தலைமையிலான இந்திய ஹொக்கி அணி, இறுதிப்போட்டியில் ஜேர்மனியினை 8-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தமது தேச ஹொக்கி அணி தோல்வியடைந்த காரணத்தினால் அப்போதைய ஜேர்மனியின் அரசதலைவராகவிருந்த ஹிட்லர், இந்திய ஹொக்கி அணி தலைவரின் மட்டை மந்திரக்கோலா என சந்தேகித்து அதனை பரிசோதிக்கும்படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தயா சந்தின் மட்டை ஹொக்கி மட்டைதான் என உறுதிசெய்யப்பட்டபின்னர் அதனை தான் வாங்குவதாக ஹிட்லர் கூறினார். அந்த ஹொக்கி மட்டையில் தயா சந்தின் ஆட்டோகிராப்பினையும் ஹிட்லர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் ஹொக்கியில் 6 முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி 1960ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.


இந்தியா 1980ம் ஆண்டு ரஷ்சியாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கியில் தமது இறுதி தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது கனவாகவே இருக்கின்றது.

=======================================

உங்களுக்குத் தெரியுமா?....

19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு சர்சைகளுக்குப் பின்னர் இந்தியாவின், புதுடில்லி நகரில் ஆரம்பமாகவுள்ளன. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளே கலந்துகொண்டாலும் வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டனின் ஆளுகைக்குட்படாத நாடொன்று இந்தமுறை போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த நாடு ஆபிரிக்க கண்டத்தினை சேர்ந்த பெல்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட றுவாண்டா நாடாகும்.

றுவாண்டா நாடானது 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநலவாய அமையத்தில் 54வது நாடாக சேர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Wednesday, January 6, 2010

12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி

சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் ஏற்பாட்டில் 12 நாடுகள் பங்குபற்றுகின்ற 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இந்தியாவில் வருகின்ற பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியானது 1971ம் ஆண்டு ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. 1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியே குறைந்த நாடுகள்(10) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும். 10வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியே அதிக நாடுகள்(16) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும்.

உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிகமாக 4 தடவைகள் கிண்ணத்தினை(1971, 1978, 1982, 1994) வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1975, 1990) , ஒரு தடவை 4ம் இடத்தையும் (1973) தனதாக்கிக் கொண்டுள்ளது.

நெதர்லாந்து அணி 3 தடவைகள் கிண்ணத்தினை (1973, 1990, 1998)வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1978, 1994) , ஒரு தடவை 3ம் இடத்தையும்(2002) மற்றும் ஒரு தடவை 4ம் இடத்தையும்(1982) தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்தியா(1975) மற்றும் அவுஸ்ரேலியா(1986) அணிகள் தலா ஒரு தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்டுள்ளன.

ஜேர்மனி அணி மூன்று தடவை 3ம் இடத்தையும்(1973, 1975, 1986) மற்றும் நான்கு தடவை 4ம் இடத்தையும்(1978, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.

அவுஸ்ரேலிய அணி அதிக பட்சமாக 5 தடவைகள் 3ம் இடத்தை (1978, 1982, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் அதிக தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்ட அணியாக நெதர்லாந்து அணி 2தடவைகள் கிண்ணத்தினை (1973, 1998) வெற்றி கொண்டுள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்ட நாடுகள் தலா 5 தடவைகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஓசியானியா கண்ட நாடுகள் ஒரு தடவையே சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் ஒரு தடவையேனும் சாம்பியன் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆபிரிக்கா கண்டத்தில் கென்யா ஒரு தடவை 4ம் இடத்தையும்(1971) , அமெரிக்க கண்டத்தில் ஆர்ஜென்ரினா ஒரு தடவை 6ம் இடத்தையும்(1986) பெற்றமையே அதிகபட்சமான வெற்றியாகும்.

ஒலிம்பிக்கில் ஹொக்கி விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இந்திய அணியானது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் இதுவரை ஒரு தடவையே சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையானது ஹொக்கி உட்பட ஏனைய விளையாட்டுக்கு கொடுப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஹொக்கி விளையாட்டில் இந்திய அணி வெற்றிக் கொடி கட்டிய காலங்கள் மீண்டும் வருமென்பது தற்சமயம் கனவாகவே தென்படுகின்றதெனலாம்? இந்திய மண்ணில் நடைபெறுகின்ற இச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி சாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...............

உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் பெற்ற நாடுகள் தொடர்பான விபரம்

· 1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 2-1 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1971)



· 2வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி நெதர்லாந்து, அம்ஸ்ரெல்வீனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, இந்திய அணியை 4-2 (2-2) என தண்டனை உதையில் வீழ்த்தி சாம்பியனானது.(1973)



· 3வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1975)



· 4வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஆர்ஜென்ரினா, புவனோ அயர்ஸ்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை 3-2 என வீழ்த்தி சாம்பியனானது.(1978)



· 5வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இந்தியா, மும்பாயில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மே.ஜேர்மனி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, மே.ஜேர்மனி அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1982)



· 6வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1986)



· 7வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பாகிஸ்தான், லாகூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1990)



· 8வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி அவுஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை தண்டனை உதை மூலம் 4-3 (1-1) என வீழ்த்தி சாம்பியனானது.(1994)



· 9வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி நெதர்லாந்து, உட்ரெஹ்ட்ரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 3-2 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1998)



· 10வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(2004)



· 11வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஜேர்மனி, மொன்சின்கிளட்வச்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 4-3 என வீழ்த்தி சாம்பியனானது.(2008)


***

Blog Widget by LinkWithin