Wednesday, January 6, 2010

12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி

சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் ஏற்பாட்டில் 12 நாடுகள் பங்குபற்றுகின்ற 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இந்தியாவில் வருகின்ற பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியானது 1971ம் ஆண்டு ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. 1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியே குறைந்த நாடுகள்(10) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும். 10வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியே அதிக நாடுகள்(16) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும்.

உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிகமாக 4 தடவைகள் கிண்ணத்தினை(1971, 1978, 1982, 1994) வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1975, 1990) , ஒரு தடவை 4ம் இடத்தையும் (1973) தனதாக்கிக் கொண்டுள்ளது.

நெதர்லாந்து அணி 3 தடவைகள் கிண்ணத்தினை (1973, 1990, 1998)வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1978, 1994) , ஒரு தடவை 3ம் இடத்தையும்(2002) மற்றும் ஒரு தடவை 4ம் இடத்தையும்(1982) தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்தியா(1975) மற்றும் அவுஸ்ரேலியா(1986) அணிகள் தலா ஒரு தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்டுள்ளன.

ஜேர்மனி அணி மூன்று தடவை 3ம் இடத்தையும்(1973, 1975, 1986) மற்றும் நான்கு தடவை 4ம் இடத்தையும்(1978, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.

அவுஸ்ரேலிய அணி அதிக பட்சமாக 5 தடவைகள் 3ம் இடத்தை (1978, 1982, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் அதிக தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்ட அணியாக நெதர்லாந்து அணி 2தடவைகள் கிண்ணத்தினை (1973, 1998) வெற்றி கொண்டுள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்ட நாடுகள் தலா 5 தடவைகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஓசியானியா கண்ட நாடுகள் ஒரு தடவையே சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் ஒரு தடவையேனும் சாம்பியன் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆபிரிக்கா கண்டத்தில் கென்யா ஒரு தடவை 4ம் இடத்தையும்(1971) , அமெரிக்க கண்டத்தில் ஆர்ஜென்ரினா ஒரு தடவை 6ம் இடத்தையும்(1986) பெற்றமையே அதிகபட்சமான வெற்றியாகும்.

ஒலிம்பிக்கில் ஹொக்கி விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இந்திய அணியானது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் இதுவரை ஒரு தடவையே சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையானது ஹொக்கி உட்பட ஏனைய விளையாட்டுக்கு கொடுப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஹொக்கி விளையாட்டில் இந்திய அணி வெற்றிக் கொடி கட்டிய காலங்கள் மீண்டும் வருமென்பது தற்சமயம் கனவாகவே தென்படுகின்றதெனலாம்? இந்திய மண்ணில் நடைபெறுகின்ற இச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி சாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...............

உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் பெற்ற நாடுகள் தொடர்பான விபரம்

· 1வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 2-1 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1971)



· 2வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி நெதர்லாந்து, அம்ஸ்ரெல்வீனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, இந்திய அணியை 4-2 (2-2) என தண்டனை உதையில் வீழ்த்தி சாம்பியனானது.(1973)



· 3வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1975)



· 4வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஆர்ஜென்ரினா, புவனோ அயர்ஸ்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை 3-2 என வீழ்த்தி சாம்பியனானது.(1978)



· 5வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இந்தியா, மும்பாயில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மே.ஜேர்மனி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, மே.ஜேர்மனி அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1982)



· 6வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1986)



· 7வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பாகிஸ்தான், லாகூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1990)



· 8வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி அவுஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை தண்டனை உதை மூலம் 4-3 (1-1) என வீழ்த்தி சாம்பியனானது.(1994)



· 9வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி நெதர்லாந்து, உட்ரெஹ்ட்ரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 3-2 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1998)



· 10வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(2004)



· 11வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி ஜேர்மனி, மொன்சின்கிளட்வச்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 4-3 என வீழ்த்தி சாம்பியனானது.(2008)


***

No comments:

Blog Widget by LinkWithin