Wednesday, December 1, 2010
உலகில் மிகப்பெரிய மணல் தீவு.......
உலகில் மிகப்பெரிய மணல் தீவாக அவுஸ்திரேலியாவின் பிரேசர் தீவு விளங்குகின்றது. பிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் 6 வது மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது. அத்துடன் பிரேசர் தீவு, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மிகப்பெரிய தீவாகவும், அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது.
பிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் பிறிஸ்பேன் நகருக்கு வடக்காகவும் அமைந்து காணப்படுகின்றது.
பிரேசர் தீவு, அண்ணளவாக 123 கிலோமீற்றர் நீளமானதுடன், 22கிலோமீற்றர் அகலமானதுமாக 184,000 ஹெக்டெயர்கள்(1840 km²) பரந்து காணப்படுகின்றது.
வர்ணமயமான பல்வேறு மணற் குன்றுகள் பிரேசர் தீவுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரேசர் தீவில் அமைந்துள்ள மணற் குன்றுகள், கடல் மட்டத்திலிருந்து 240மீற்றரிலும் அதிகமான உயரம் கொண்டவையாகும்.
200 மீற்றருக்கும் அதிகமான உயரமுடைய மணற் குன்றுகளில் உயரமான மழைக்காடுகள் காணப்படுகின்ற உலகின் ஒரெயொரு இடம் பிரேசர் தீவுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரேசர் தீவில், தங்குதடையற்ற நீண்ட வெள்ளை மணற்கரைகள், ஆச்சரியத்தக்க நிறமுள்ள மணல் குன்றுகளினால் அசாதாரணமான அழகு நிறைந்த இடமாக காட்சியளிக்கின்றன.
பிரேசர் தீவில் 100இற்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகள் அமைந்துள்ளதுடன், உலகில் காணப்படுகின்ற தூய்மையான ஏரிகளில் சில, பிரேசர் தீவிலேயே அமைந்துள்ளன. இங்கே காணப்படுகின்ற சில ஏரிகள் வெள்ளை மணற் கரைகள் சூழ தேயிலையின் நிறத்திலும், ஏனையவை தெளிவாகவும், நீல நிறத்திலும் அமைந்துள்ளன.
மத்திய நிலப்பகுதியிலிருந்து பிரேசர் தீவானது, பிரமாண்டமான மணற்பாங்கான ஜலசந்தியினால் பிரிக்கப்படுகின்றது. இந்த பிரதேசமானது ராம்சார் பிரகடனத்தில் ஈர நிலங்களில் மிக முக்கிய இடமாக குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு சுதேச உயிரினங்களின் வாழ்விடமாகவும் பிரேசர் தீவானது விளங்குகின்றது. இங்கே பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, ஈரூடக வாழிகள், பறவைகள், மீனினங்கள் வாழ்கின்றன.
மேலும், பிரேசர் தீவில் வாழ்கின்ற டிங்கோ(Dingo) நாய்கள் பொதுவான சிறப்பிடம் பெறுகின்றன. டிங்கோ நாய்களின் எண்ணிக்கையானது தற்சமயம் வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயற்கை சுற்றுலா இடமாக விளங்கும் பிரேசர் தீவு 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமையத்தினால் உலகப் பாரம்பரிய / மரபுரிமை இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நண்பர்களே, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தால் பிரேசர் தீவுக்கும் மறக்காமல் ஒருதடவையேனும் சென்றுதான் பாருங்களேன்.... (எனக்கும் ஆசைதான்.......)
***
Labels:
உலக பாரம்பரிய இடம்,
உலகம்,
மணல் தீவு,
மிகப்பெரியவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் பதிவு இடத்தை இப்பொழுதே பார்க்க வேண்டுமென தூண்டுகிறது...
நன்றிகள் பிரபாகரன்.....
Post a Comment