2010ம் ஆண்டுக்கான பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் புதுடில்லியில் ஒக்டோபர்3ம் திகதி முதல் 14ம்திகதி வரை நடைபெறவுள்ளன. இது 19வது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஆகும். இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்தடவையாகும், என்பதுடன் இது ஆசியாவுக்கு 2வது முறையாகும். முதற்தடவையாக ஆசியாவில் 1998ல் கோலாலம்பூர், மலேசியாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுநலவாய போட்டிகள் என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகள் மாத்திரம் பங்குபற்றுகின்ற விளையாட்டு போட்டிகள் ஆகும்.
பொதுநலவாய போட்டிகளின் சிறப்பம்சமாக, பல்தேசியம் மற்றும் பல்வகை விளையாட்டு நிகழ்வுகள் என்பன திகழ்கின்றன. பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு தடவை நடைபெறுகின்றன.
பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரச போட்டிகள் என முதற்தடவையாக 1930ம் ஆண்டு கனடா, ஹமில்டன், ஒன்ராரியோவில் நடைபெற்றது. அதன்பின்னர் இந்தப் போட்டிகள் பிரிட்டிஷ் அரச மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என 1954ம் ஆண்டும், மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என 1970ம் ஆண்டும் , 1978ம் ஆண்டுக்குப்பிற்பாடு தற்போது நடைமுறையிலுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் நடைபெற்றுவருகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் பெரிய பிரித்தானியா என ஒரே அணியாக களமிறங்குகின்ற இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகள் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் தனித்தனி அணியாக பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் பங்குபற்றிய நாடுகளாக 06 நாடுகள் விளங்குகின்றன. அவையாவன; அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியனவாகும்.
1930ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பெண்கள் நீச்சல் போட்டிகளில் மாத்திரமே போட்டியிட்டனர். 1934ம் ஆண்டிலிருந்து தடகளப் போட்டிகளிலும் பெண்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக் போட்டிகள் போன்றே பொதுநலவாய விளையாட்டு போட்டிகளும் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கியதுண்டு. நைஜீரியாவானது, நியூசிலாந்து நாடானது நிறவெறி நாடாக விளங்கிய தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணுகின்றது என்ற காரணத்தைக்காட்டி 1978ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளைப் பகிஷ்கரித்தது. மேலும் 1986ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை ஆபிரிக்கா, ஆசியா, கரீபியன் பிராந்தியங்களைச் சேர்ந்த 59 நாடுகளில் 32 நாடுகள் போட்டிகளை பகிஷ்கரித்தன. இதற்கான காரணம் இங்கிலாந்து பிரதமராக ஆட்சிசெய்த மாக்கிரட் தட்சரின் அரசாங்கமானது தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணியது என்பதனாலாகும். மேலும் தென்னாபிரிக்காவின் நிறவெறியின் காரணமாக 1974,1982,1990ம் ஆண்டுகளிலும் நாடுகளின் பகிஷ்கரிப்புக்கள் அச்சுறுத்தலாக அமைந்தன.
இந்தமுறை மொத்தமாக 31வகையான விளையாட்டுக்கள் அரங்கேறுகின்றன. இதில் 71 நாடுகளின் 7000க்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
19வது பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான தொனிப்பொருள் "வெளியே வாருங்கள்; விளையாடுங்கள்" என்பதாகும்.
20வது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் 2014ம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளன.
===============================================
பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் ஒழுங்காக நடைபெறுமா?...
இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவித்த நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் இந்தியாவினை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. போட்டி தொடர்பிலான ஊழல் சர்ச்சைகள், போட்டிக்கான அரங்கு நிர்மாணப்பணிகளின் மந்தநிலை, வீரர்களுக்கான தங்குமிட குடியிருப்புக்களின் சுகாதார சீர்கேடுகள், டெங்கு நோய் அச்சுறுத்தல் ஆகியவை இந்தியாவினை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலும் அண்மைய பிரச்சினையாக வீரர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை பல்வேறு நாடுகளும் காரணம் காட்டத்தொடங்கியுள்ளன. ஏனெனில் அண்மையில் டில்லியில் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவமொன்றில் 2 தாய்வான் நாட்டவர்கள் காயமுற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைவிட நேற்று இடம்பெற்ற பிறிதொரு சம்பவமாக, போட்டி நடைபெறுகின்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற மேம்பாலமானது சரிந்துவிழுந்ததில் 23தொழிலாளர்கள் காயமுற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னணி வீர, வீராங்கனைகள் பலரும் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமையும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் சுவாரஷ்சியத்தினை குறைக்கத்தொடங்கியுள்ள இந்தத் தருணத்தில் போட்டி நடைபெறுகின்ற காலகட்டத்தில் மழைபெய்யக்கூடுமென இந்திய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளமை போட்டிகள் ஒழுங்காக நடைபெறுமா? என்கின்ற வினாவினை பலரின் மனதிலும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கின்ற இந்தியாவானது தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பினை சீரற்ற நிருவாக முகாமை, திட்டமிடல் குறைபாடுகள், ஊழல் போன்ற பல்வேறு காரணங்களினால் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் போன்ற பெரியளவான நிகழ்வுகளினை சமாளிக்கமுடியாதாத நாடாகவா விளங்குகின்றது?........
***