விதித்தன செய்தல் விலக்கின ஒழிதல்
சுருக்க மாகநாம் அறமெனக் கூறலாம்.
விரிவு வேண்டுமேல் வேதநன் னூற்களும்
நல்லன என்று விரிப்பன அனைத்தும்
அறமே யாகும் அவைகளைக் கொள்க.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்
எனபன முதலா அறத்தினைக் கொண்டு
நூல்வழி கடமைகள் ஆற்றல் நல்லறமே
அமைவுடை மனத்தில் அறமே வளருமே
அமைவோ ஒழுக்க அடிப்படை உடையது.
இல்லறம் நல்லறம் என்னே அற்புதம்
அறவழிச் செல்வம் ஆழிபோல் பெருகும்
அறமுறை தருவது அமைவுடைச் செல்வம்
அளவாய் உண்டு அளவாய் வாழ்வதே
ஆண்டவன் விதித்த அற்புத அறமே
உண்ணும் உணவு உடலை வளர்ப்ப போல்
செய்யும் அறமே வாழ்வை வளர்க்கும்.
அறம் வளரப் பாவம்தேயும் அதனால்
அறியாமை ஒழிந்து பற்றும் அற்றிடும்
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
இன்னா செய்யாமை இனியவை கூறல்
அவா அறுத்தல் அனைத்தும் அறமே
அறத்தை அனுதினம் காத்தல் வேண்டும்
சிறிது பிசகிடில் தீவினை சாருமே
ஆதலின் அறத்தை அறிவுறு நாள்முதல்
வளர்த்துப் பெருக்குதல் நல்வழி ஆகும்.
***