
இமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதன் காரணமாக 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
1 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் தமக்கான நீர் வளத்துக்காக இமய மலை சிகரங்களிலேயே தங்கியுள்ளனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் இமய மலை சிகரங்களில் அச்சுறுத்துகின்ற வேகத்தில் பனி உருகுவதன் காரணமாக ஆசியக் கண்டத்தில் அதிகப்படியான வரட்சி நிலையினை இது ஏற்படுத்தலாம் என எச்சரிக்கைச் செய்திகள் விடப்படுகின்றன.
2400 கி.மீற்றருக்கும் அதிகமான தூரம் இமயமலை சிகரங்கள்; பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பரந்து காணப்படுகின்றது. ஆசியாவின் பிரதான 9 மிகப்பெரிய ஆறுகளுக்கு இமயமலை சிகரங்களே பிரதான நீர் வழங்கும் ஊற்றாக காணப்படுகின்றது. இந்த ஆறுகளை நம்பி 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இந்தப் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலையானது 0.15 தொடக்கம் 0.6 டிகிரி செல்சியஸ் வரை [0.27- 1.08 டிகிரி பரனைற்] அதிகரித்தவண்ணமுள்ளது. இதன் காரணமாக சிகரங்கள் சுருங்கும் வேகமானதும் அதிகரித்தவண்ணமுள்ளது.
காலநிலை மாற்றங்களின் காரணமாக எதிர்வருகின்ற 40 வருடங்களில் அதிகமான பனிச்சிகரங்கள் இல்லாமல் மறைந்துபோய்விடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பிரதான ஐ.நா நிறுவனமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவினர் [IPCC] கருத்துத்தெரிவிக்கையில் இமயமலை பனிச்சிகரங்கள் 2035ம் ஆண்டளவில் பிரதான மாறுதல்களை வெளிப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் உலகவெப்பமயமாதலின் விளைவுகளை இந்தப் பிராந்தியத்தில் உணரக்கூடியதாக தெரிவிக்கின்றனர்.

ஆய்வுகளின் பிரகாரம், அதிகரித்த வேகத்தில் சிகரங்கள் உருகுவதன் காரணமாக சீனா தேசத்தில் குறுகிய காலத்தில் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கலாம் என சிங்குவா செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், நீண்ட காலத்தில் ஆறுகளின் நீர்ப்பிரவாகத்தில் குறைவுகள் ஏற்பட்டு மேற்கு சீனாவின் பெருமளவான பகுதிகள் பாதிப்பினை எதிர்நோக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்ப் பற்றாக்குறை காரணமாக உலக அதிகளவு சனத்தொகையினை கொண்ட சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் பங்களாதேஷ் நாட்டின் பிரதான நதிகள் வரட்சி நிலையினை அடையலாம் என IPCC தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படலாம்.
இமயமலையின் பனிச்சிகரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நீண்ட காலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனவே உலகவெப்பமயமாதலுக்கு காரணமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் விரைந்து செயற்பட வேண்டுயதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றது எனலாம்.
***
