Tuesday, March 15, 2011

நில அதிர்வு நாளொன்றுக்கான நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவது எப்படி?.....



ஜப்பான் தேசத்தினை 8.9ரிச்டர் அளவில் தாக்கி பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பத்தினால், புவியின் தனது அச்சுப் பற்றியதான சுழற்சி சற்றுவேகமடைந்து சாதாரண நாளொன்றின் நேரம் சற்றே குறைவடைந்துவிட்டதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவி தனது அச்சுப்பற்றி குறிப்பிட்டதொரு கோணவேகத்தில் தன்னைத்தானே சுற்றுகின்றது. இந்த இயல்பினால் தான், இரவு-பகல் ஏற்படுகிறது. இச்சுழற்சி காரணமாக பூமியானது ஒரு மாறாத கோண உந்தத்தினைக் கொண்டுள்ளது. உயர் நில அதிர்வுகள் புவியை உலுப்பும்போது அதன் மேற்பரப்புத் திணிவுகள் மீள்பரம்பலடைகிறது. அவ்விதம் நிகழும்போது அதன் திணிவுமையம் மற்றும் மற்றும் சுழற்சி அச்சு என்பன சற்றே மாற்றமடைந்து புவியின் சடத்துவத்திருப்பம் என்ற புதியதொரு பெறுமானத்தினைப் பெறுகிறது. புதிய சடத்துவத்திருப்ப பெறுமானத்திற்கு ஏற்ப, மொத்த கோண உந்தம் மாறாதிருக்கும் வகையில் புதியதொரு கோணவேகத்தினைப் புவி பெறுகிறது. இதுவே நாளொன்றின் நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

நில அதிர்வினால் புவியின் சடத்துவத்திருப்பம் குறைவடைந்திருந்தால் அதன் கோணவேகத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. இதனால் புவி விரைவாக தன்அச்சுப்பற்றி சுழல்கிறது. இவ்வாறான சம்பவமே அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வின் பின்னர் ஏற்பட்டதாகும். இதனால் நாளொன்று 1.60 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென் அமெரிக்க நாடான சிலியினை 8.8ரிச்டர் அளவில் தாக்கிய நில அதிர்வினால் நாளொன்று 1.26 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டது. 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையை ஏற்படுத்திய நில அதிர்வு 6.8 மைக்ரோ செக்கன்கள் குறைவினை ஏற்படுத்தியதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் கணிப்பிட்டிருந்தது.

மைக்ரோ செக்கன் என்பது 1 செக்கனின் 1 000 000 இன் ஒரு பங்கு அளவானது, மிகமிகச் சிறியது. புவியின் திணிவு மிகவும் பெரியது (5.7942 x 1024 kg) புவியின் நில அதிர்வு தவிர சமுத்திர நீரோட்டங்கள், சூறாவளிகளினால் ஏற்படும் வளிமண்டல நகர்வுகள், புவி வெப்பமடைந்து பனிக்கட்டிகள் உருகுதல் என்பனகூட தாக்கத்தினை ஏற்படுத்துமெனினும், புவியின் சடத்துவப்திருப்பத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடமுடியாது. ஆயினும் நாளொன்றுக்கான இந்நுண்ணிய மாறல்கள் காலப்போக்கில் சேர்ந்து பெரிதாகும். அது, நவீன உபகரணங்களை நம்பியிருக்கும் மனித வாழ்க்கையில் பாரிய அனர்த்ததினை ஏற்படுத்திவிடும்.

***

Saturday, March 12, 2011

ஜப்பானினை தாக்கிய சுனாமி…...


நேற்று (11.03.2011)அதிகாலை ஜப்பான், ஹொன்ஷு பிரதேசத்தில் 8.9 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 1000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஜப்பான் நாட்டினை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் 24கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை கடற்கரையோரங்களினைத் தாக்கிய 20அடி உயரத்துக்கு மேலெழுந்த ஆழிப்பேரலையினால் பல கட்டிடங்கள், வாகனங்கள் நீரோடு அள்ளுண்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பயணிகள் கப்பலொன்றும், புகையிரதமொன்றும் ஆழிப்பேரலையினால் நீரோடு இழுத்துச்செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பூகம்பத்தினால் சில எரிபொருள் நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், அணு சக்தி நிலையத்திலிருந்து அணிக்கசிவு ஏற்படலாம் என்கின்ற அச்சத்தின் காரணமாக ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் 1923ம் ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை தாக்கிய 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 143,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த பூகம்பமானது 1900ம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பங்களில் 5ம் இடத்தினை வகிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இதேவேளை கடந்த 2010ம்வருடம் ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், 2010ம்வருடம் பெப்ரவரி 27ம் திகதி, சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பமும் தாக்கியமை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.


உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்[ரிச்டர் அளவின் பிரகாரம்] தொடர்பான விபரமறிய கீழே சொடுக்கவும்......

"உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்"

***

Tuesday, March 8, 2011

நோபல் பரிசினை பெற்ற தாயும், மகளும்.......

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினமானது, நூற்றாண்டாவது மகளிர் தினம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய தாய், மகள் ஜோடிகள் சிலரினைப் பார்ப்போம்.

 நோபல் பரிசினை பெற்ற தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், பிரெஞ்சு தேசத்தினைச் சேர்ந்த மேரி கியூரி மற்றும் ஐரீன் ஜோலியட் கியூரி ஆகியோராவர். மேரி கியூரி அம்மையாரே நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட முதற்பெண்மணியும் ஆவார், அத்துடன் இவரே இரண்டு வெவ்வேறான துறைகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேபெண்மணியும் ஆவார்.



மேரி கியூரி ~ (இரசாயனவியல்~1911, பெளதிகவியல்~1903)
ஐரீன் ஜோலியட் கியூரி ~ (இரசாயனவியல்~1935)

 ஒரே காலப்பகுதியில் ஒரு நாட்டின் உயர்மட்ட அரச தலைவர்களாகப் பதவிவகித்த தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோராவர்.(1994-2000)

 முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த தாயும், மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த “Churl Burt” மற்றும் “Nicky” (23 வயது) ஆகியோராவர். இவர்கள் 2008ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி எவரெஸ்ட் சிகரத்தினை ஒன்றாக அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உங்களுக்குத் தெரியுமா?...

10வது உலகக்கிண்ண கிரிக்கெட் ~ 2010, தற்சமயம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1975ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பதும் நீங்கள் அறிந்ததே....

ஆனால், மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1973ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?....

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

***

Sunday, March 6, 2011

இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனம்.....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.

 நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.

 ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.

 சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.

 மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.

 பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.

 உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.




 இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.

 குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.

 உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.

***

Thursday, March 3, 2011

உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....

மக்கள் போராட்டங்களினால் அண்மைய நாட்களாக ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும், அரபுலகின் சில நாடுகளிலும் ஆட்சியதிகாரத்திலிருக்கின்ற ஆட்சியாளர்கள் பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளனர். தினியூசிவாவில் தொடங்கிய மக்கள் புரட்சி எகிப்து, யேமன், மொராக்கோ, பஹ்ரெயின், அல்ஜீரியா, அங்கோலா, ஈரான், ஈராக், லிபியா தேசம்வரையும் பரந்துவியாபித்துள்ளது.

அந்தவகையில், உலகில் நீண்டகாலம் பதவிவகித்த/வகிக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் சிலரினைப் பார்ப்போம் ....

பிடல் காஸ்ட்ரோ ~ கியூபா



கியூபா நாட்டினை ஆட்சிசெய்த சர்வாதிகாரியினை ஆட்சியதிகாரத்திலிருந்து புரட்சிமூலம் தூக்கியெறிந்து கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியினை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். 1959ம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிடல் காஸ்ட்ரோ, உடல்நல பாதிப்புக்குள்ளாகியதையடுத்து 2008ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியதிகாரத்தினை கையளித்தார்.


கேணல் முஅம்மர் கடாபி ~ லிபியா


வாழ்வா...! சாவா...! போராட்டத்தில் கடாபி

லிபிய நாட்டின் மன்னராக விளங்கிய இதிரிஸ் வைத்திய பரிசோதனைக்காக துருக்கிக்கு சென்றிருந்தவேளை, 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் கடாபி லிபியா நாட்டின் தலைவராக முடிசூடிக்கொண்டார்.

லிபியா நாட்டில் கேணல் கடாபி 41 ஆண்டுகளாக தனது சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டுவருகின்றார். அண்மைய நாட்களில் லிபியாவில் உக்கிரம் பெற்றிருக்கின்ற மக்கள் போராட்டங்களினால் சர்வாதிகாரி கடாபி பதவியிலிருந்து அகற்றப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம்.


கலிபா பின் சுல்மான் அல் கலிபா ~ பஹ்ரெய்ன்
பஹ்ரெய்ன் நாடானது பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பஹ்ரெய்ன் நாட்டின் பிரதமராக கலிபா பின் சுல்மான் அல் கலிபா 1971ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் பிரதமராக ஆட்சியிலிருக்கின்றார். 40 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஹொஸ்னி முபாரக் ~ எகிப்து




எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக விளங்கிய அன்வர் எல் சதாத் 1981ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து 1981ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி எகிப்து நாட்டின் ஜனாதிபதி பதவியினை கைப்பற்றிக்கொண்டார். சுமார் 30 ஆண்டுகளாக எகிப்தினை ஆட்சிசெய்துவந்த ஹொஸ்னி முபாரக், மக்கள் போராட்டங்களினால் தொடர்ந்து 2011ம் ஆண்டு பெப்.-11ம் திகதி தனது பதவியினை இராஜிநாமா செய்தார்.

றொபட் முகாபே ~ சிம்பாப்வே
1980ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து சிம்பாப்வே நாட்டின் அரச தலைவராக றொபட் முகாபே இன்றுவரையும் பதவிவகிக்கின்றார். முகாபே 1980ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டுவரை பிரதமராகவும், 31 டிசம்பர் 1987இலிருந்து இன்றுவரையும் சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிசெய்துவரும் முகாபேக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களினை தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் மோகன் தஸ்வான்கிராய் பிரதமராக 2009ம் ஆண்டு பதவியேற்றார். உலகில் பணவீக்கம் உயர்ந்தபட்சத்தில் உள்ள நாடாக சிம்பாப்வே விளங்குவதற்கு முகாபேயின் 31 ஆண்டு கால ஆட்சியே காரணமாகும்.

அலி அப்துல்லா சாலெஹ் ~ யேமன்
அலி அப்துல்லா சாலெஹ், யேமன் நாட்டின் ஜனாதிபதியாக 1978ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் ஆட்சி செய்துவருகின்றார். 33 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஜோஸ் சன்டோஸ் ~ அங்கோலா
ஜோஸ் சன்டோஸ், அங்கோலா நாட்டின் ஜனாதிபதியாக 1979ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் ஆட்சி செய்துவருகின்றார். 32 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஒமர் பொங்கோ ~ காபொன்
1967ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி காபொன் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒமர் பொங்கோ, தான் இறக்கும்வரையும்(2009ம் ஆண்டு ஜூன், 8) காபொன் நாட்டினை 42 ஆண்டுகளாக ஆட்சிசெய்தார்.

சுகார்ட்டோ ~ இந்தோனேசியா
1967ம் ஆண்டு சுகர்னோவிடமிருந்து ஆட்சியினை கைப்பற்றி 1998ம் ஆண்டுவரை இந்தோனேசியாவினை 31 ஆண்டுகள் ஆட்சிசெய்த சுகார்டோ மக்கள் எதிர்ப்பினையடுத்து பதவிவிலகினார். சுகார்ட்டோ 2008ம் ஆண்டெ பெப்ரவரியில் காலமானார்.


***

Tuesday, March 1, 2011

உலகில் மிக விலையுயர்ந்த புத்தகம்.......



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய "Birds of America" ~ (அமெரிக்கப் பறவைகள்) என்கின்ற தலைப்பிலான புத்தகத்தின் முழுமையான அரிய பிரதியொன்று £7.3 மில்லியன் ($11.5 மில்லியன் ~ 126 கோடி இலங்கை ரூபாய்) பெறுமதிக்கு லண்டனில் ஏலத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது. 19ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்த புத்தகத்தின் 119 பிரதிகளே உள்ளதாக அறியப்படுகின்றது. இவற்றில் 108 பிரதிகள் காட்சியகங்களுக்கும், நூலகங்களுக்கும் சொந்தமானதாகும்.



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன்((1785-1851) பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் மட்டுமன்றி சிறந்த ஓவியரும் ஆவார். ஜோனின் கைவண்ணத்தில் உருவாகிய பறவைகளின் ஓவியங்கள், "Birds of America" என்கின்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோன் ஜேம்ஸ் ஆடவொன், பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியபோது தன்னை சுற்றியிருந்த சூழலில் பறவைகளின் வாழ்க்கை நடத்தையினை அவதானித்து அவற்றினை ஓவியமாகத் தீட்டினார். ஆரம்பத்தில் இவர் வரைந்த பறவைகளின் படங்களினை அமெரிக்கப் பதிப்பாளர் எவரும் பிரசுரிக்க முன்வரவில்லை.
கடைசியாக, அவர் வரைந்த ஓவியங்கள் "Birds of America" என்ற பெரியளவான தொகுப்பாக உருவாகியது.

இதற்கு முன்னர், 1989ம் ஆண்டு ஆடவொனின் ஒரு முழுமையான தொகுப்பு $3.96 மில்லியனுக்கு ஏலம் போனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் நினைவாக ஆடவொன் கழகம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin