Tuesday, March 15, 2011

நில அதிர்வு நாளொன்றுக்கான நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவது எப்படி?.....



ஜப்பான் தேசத்தினை 8.9ரிச்டர் அளவில் தாக்கி பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பத்தினால், புவியின் தனது அச்சுப் பற்றியதான சுழற்சி சற்றுவேகமடைந்து சாதாரண நாளொன்றின் நேரம் சற்றே குறைவடைந்துவிட்டதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவி தனது அச்சுப்பற்றி குறிப்பிட்டதொரு கோணவேகத்தில் தன்னைத்தானே சுற்றுகின்றது. இந்த இயல்பினால் தான், இரவு-பகல் ஏற்படுகிறது. இச்சுழற்சி காரணமாக பூமியானது ஒரு மாறாத கோண உந்தத்தினைக் கொண்டுள்ளது. உயர் நில அதிர்வுகள் புவியை உலுப்பும்போது அதன் மேற்பரப்புத் திணிவுகள் மீள்பரம்பலடைகிறது. அவ்விதம் நிகழும்போது அதன் திணிவுமையம் மற்றும் மற்றும் சுழற்சி அச்சு என்பன சற்றே மாற்றமடைந்து புவியின் சடத்துவத்திருப்பம் என்ற புதியதொரு பெறுமானத்தினைப் பெறுகிறது. புதிய சடத்துவத்திருப்ப பெறுமானத்திற்கு ஏற்ப, மொத்த கோண உந்தம் மாறாதிருக்கும் வகையில் புதியதொரு கோணவேகத்தினைப் புவி பெறுகிறது. இதுவே நாளொன்றின் நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

நில அதிர்வினால் புவியின் சடத்துவத்திருப்பம் குறைவடைந்திருந்தால் அதன் கோணவேகத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. இதனால் புவி விரைவாக தன்அச்சுப்பற்றி சுழல்கிறது. இவ்வாறான சம்பவமே அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வின் பின்னர் ஏற்பட்டதாகும். இதனால் நாளொன்று 1.60 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென் அமெரிக்க நாடான சிலியினை 8.8ரிச்டர் அளவில் தாக்கிய நில அதிர்வினால் நாளொன்று 1.26 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டது. 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையை ஏற்படுத்திய நில அதிர்வு 6.8 மைக்ரோ செக்கன்கள் குறைவினை ஏற்படுத்தியதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் கணிப்பிட்டிருந்தது.

மைக்ரோ செக்கன் என்பது 1 செக்கனின் 1 000 000 இன் ஒரு பங்கு அளவானது, மிகமிகச் சிறியது. புவியின் திணிவு மிகவும் பெரியது (5.7942 x 1024 kg) புவியின் நில அதிர்வு தவிர சமுத்திர நீரோட்டங்கள், சூறாவளிகளினால் ஏற்படும் வளிமண்டல நகர்வுகள், புவி வெப்பமடைந்து பனிக்கட்டிகள் உருகுதல் என்பனகூட தாக்கத்தினை ஏற்படுத்துமெனினும், புவியின் சடத்துவப்திருப்பத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடமுடியாது. ஆயினும் நாளொன்றுக்கான இந்நுண்ணிய மாறல்கள் காலப்போக்கில் சேர்ந்து பெரிதாகும். அது, நவீன உபகரணங்களை நம்பியிருக்கும் மனித வாழ்க்கையில் பாரிய அனர்த்ததினை ஏற்படுத்திவிடும்.

***

1 comment:

jothi said...

ப‌திவு மிக‌ அருமை,..

த‌மிழாக்க‌மும் மிக‌ அருமை (கூட‌வே கீழே அத‌ற்கு இணையான‌ ஆங்கில‌ வார்த்தையையும் போட்டிருந்தால் இன்னும் ந‌ச்சென்று இருந்திருக்கும்)

Blog Widget by LinkWithin