Showing posts with label பூகம்பம். Show all posts
Showing posts with label பூகம்பம். Show all posts

Monday, October 29, 2012

புராதன இலங்கையை சின்னாபின்னமாக்கிய பூகம்பம்......


அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வுத்தகவல்களின் பிரகாரம், பூகம்ப அபாய எல்லை, இலங்கையினை நெருங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறிப்பாக இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு அப்பால் இந்தோ – ஆஸி புவித்தட்டானது 500 – 700 கிலோமீற்றர் பிளவடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக புதியதொரு  நிலத்தட்டு தோற்றம்பெற்றிருப்பதாகவும் இதனால் இலங்கைக்கு பாரியளவிலான பூகம்ப அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பூகோளவியல் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1615ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் காரணமாக மிகப்பெரும் உயிரழிவு ஏற்பட்டிருந்தது. அதைப்போன்ற பூகம்பமே வரக்கூடும் என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.

உங்களுக்குத் தெரியுமா?......
போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் இலங்கையினை பாரியளவிலான பூகம்பம் தாக்கி சின்னாபின்னமாக்கியது.



ஆம்...! 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் மாலை வேளை இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தில் 6.5 ரிச்டர் என மதிப்பிடப்பட்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 200இற்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்ததுடன், 2000 இற்கும் அதிகமான மக்களும் பலியானதாகவும் வரலாற்றுத்தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.  விசேடமாக, கொழும்பு கோட்டைப் பிராந்தியமானது இப்பூகம்பத்தின் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பூகம்பத்தின் காரணமாக கொழும்பு கோட்டைச்சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், கோட்டைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கற்பாலமும் இடிந்து வீழ்ந்ததாகவும், மேலும் நிலத்தில் பாரியளவிலான பிளவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிந்துகொள்வோம்....
Ø  1814ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மட்டக்களப்பின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, பாரியளவிலான கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதாம்.

குறிப்பு - கடந்த 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் நாள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, இதனை என்னால் உணரமுடிந்தது இன்றும் என் நினைவுகளில்  நிற்கின்றது.

***

Tuesday, March 15, 2011

நில அதிர்வு நாளொன்றுக்கான நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவது எப்படி?.....



ஜப்பான் தேசத்தினை 8.9ரிச்டர் அளவில் தாக்கி பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பத்தினால், புவியின் தனது அச்சுப் பற்றியதான சுழற்சி சற்றுவேகமடைந்து சாதாரண நாளொன்றின் நேரம் சற்றே குறைவடைந்துவிட்டதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவி தனது அச்சுப்பற்றி குறிப்பிட்டதொரு கோணவேகத்தில் தன்னைத்தானே சுற்றுகின்றது. இந்த இயல்பினால் தான், இரவு-பகல் ஏற்படுகிறது. இச்சுழற்சி காரணமாக பூமியானது ஒரு மாறாத கோண உந்தத்தினைக் கொண்டுள்ளது. உயர் நில அதிர்வுகள் புவியை உலுப்பும்போது அதன் மேற்பரப்புத் திணிவுகள் மீள்பரம்பலடைகிறது. அவ்விதம் நிகழும்போது அதன் திணிவுமையம் மற்றும் மற்றும் சுழற்சி அச்சு என்பன சற்றே மாற்றமடைந்து புவியின் சடத்துவத்திருப்பம் என்ற புதியதொரு பெறுமானத்தினைப் பெறுகிறது. புதிய சடத்துவத்திருப்ப பெறுமானத்திற்கு ஏற்ப, மொத்த கோண உந்தம் மாறாதிருக்கும் வகையில் புதியதொரு கோணவேகத்தினைப் புவி பெறுகிறது. இதுவே நாளொன்றின் நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

நில அதிர்வினால் புவியின் சடத்துவத்திருப்பம் குறைவடைந்திருந்தால் அதன் கோணவேகத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. இதனால் புவி விரைவாக தன்அச்சுப்பற்றி சுழல்கிறது. இவ்வாறான சம்பவமே அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வின் பின்னர் ஏற்பட்டதாகும். இதனால் நாளொன்று 1.60 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென் அமெரிக்க நாடான சிலியினை 8.8ரிச்டர் அளவில் தாக்கிய நில அதிர்வினால் நாளொன்று 1.26 மைக்ரோ செக்கன்கள் குறைவு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டது. 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையை ஏற்படுத்திய நில அதிர்வு 6.8 மைக்ரோ செக்கன்கள் குறைவினை ஏற்படுத்தியதாக நாஸாவில் இயங்கும் Jet Propulsion ஆய்வு மையம் கணிப்பிட்டிருந்தது.

மைக்ரோ செக்கன் என்பது 1 செக்கனின் 1 000 000 இன் ஒரு பங்கு அளவானது, மிகமிகச் சிறியது. புவியின் திணிவு மிகவும் பெரியது (5.7942 x 1024 kg) புவியின் நில அதிர்வு தவிர சமுத்திர நீரோட்டங்கள், சூறாவளிகளினால் ஏற்படும் வளிமண்டல நகர்வுகள், புவி வெப்பமடைந்து பனிக்கட்டிகள் உருகுதல் என்பனகூட தாக்கத்தினை ஏற்படுத்துமெனினும், புவியின் சடத்துவப்திருப்பத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடமுடியாது. ஆயினும் நாளொன்றுக்கான இந்நுண்ணிய மாறல்கள் காலப்போக்கில் சேர்ந்து பெரிதாகும். அது, நவீன உபகரணங்களை நம்பியிருக்கும் மனித வாழ்க்கையில் பாரிய அனர்த்ததினை ஏற்படுத்திவிடும்.

***
Blog Widget by LinkWithin