Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Thursday, April 12, 2012

4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி.........

                                   
2004ம் ஆண்டு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சுனாமி தமிழகத்தைத் தாக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தைச் சுனாமி தாக்கியது இது முதல் முறையல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் சுனாமி தாக்கியிருக்கிறது. பின்னர் கி.பி 2ம் நூற்றாண்டிலும் பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைப் கடல் கொள்ளை கொண்டு போயிருக்கிறது.

அந்தக் காலத்தில் சுனாமியை இலக்கியம் "கடல்கோள்" என்று குறிப்பிடுகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்பகுதி, பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இப்போதைய இலங்கை, மாலைதீவு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவையெல்லாம் ஒன்றாக இணைந்திருந்த அந்த நிலப்பரப்பை மேற்குலகத்தினர் "லெமூரியா" என்று குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் பண்டைய இலக்கியம் அந்த நிலப்பரப்பைக் "குமரிக் கண்டம்" என்று குறிப்பிடுகின்றது.

இப்போதைய இந்தியாவின் வட எல்லையில் உள்ள இமய மலையைப் போல் உயர்ந்த மலை அங்கு இருந்தது. குமரிக்கோடு (கோடு என்றால் மலை என்பது பொருள்) என அந்த மலை அழைக்கப்பட்டது. அதைப்போல் குமரியாறு, பஃறுளியாறு ஆகியவை கங்கை, யமுனை நதிகளைப் போல் பரந்து விரிந்து நீண்ட தூரம் ஓடின. அந்த நிலப்பகுதியில் இருந்த தென் மதுரை நகரில்தான் முதல் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த நிலப்பகுதி முழுவதையும் கடல் கொள்ளை கொண்டு விழுங்கிவிட்டது.

அதன்பிறகு, மிஞ்சிய தமிழ் நாட்டின் தலை நகராக கபாடபுரம் இருந்தது. அதுவும் சில நூறு ஆண்டுகளில் கடலால் விழுங்கப்பட்டது. அதையடுத்து, இப்போதைய மதுரையைத் தலை நகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அங்கே மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடைபெற்று வந்தது.

தென் தமிழகப் பகுதி கடலால் கொள்ளை கொள்ளப்பட்ட தகவல்களை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது. பஃறுளியாறும் மிக நீண்ட குமரி மலையும் கொடுமையான கடலால் கொள்ளை கொள்ளப்பட்டதையடுத்து, வடக்கு திசையில் கங்கையும் இமயமும் உருவான பின் தென் திசையை ஆண்ட மன்னன் என்று பாண்டிய மன்னனைப் பாடுகின்றது சிலப்பதிகாரம்.

இதனுடன் தொடர்புடைய இன்னொரு பதிவு..........


குறிப்பு நேற்றைய தினம் இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திமிக்க பூகம்பங்களைத் தொடர்ந்து இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 



நேற்றைய தினம், இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் எதிரொலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


*** நேற்றைக்கு முதல் தினமே "4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி" என்கின்ற இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்தேன் என்பதையும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றேன்.

++++++++++++---------++++++++++++++++++++


"நந்தன" சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!!!


 

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும்  "நந்தன" சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


மேலும், மலரப்போகும் "நந்தன" புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

பிறக்கின்ற "நந்தன" புதுவருடம் எங்கள் வாழ்க்கை நந்தவனமாக பூத்துக்குலுங்க வழிவகை செய்வாயாக.........

***

Monday, December 26, 2011

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாமி.....

இந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.



நில அமைப்புக்கள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்ஃபீல்டு ஆராய்ச்சி செய்துவருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பதுபோல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய "டிரயாசிக்" காலத்தின் போது "லாரேசியா", "கோண்டுவானா" என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. "டேதிஸ்" கடலால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த "டேதிஸ்" கடலில் இருந்து எழுந்த ஆழிப்பேரலை, "குரியுல்" கணவாய் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கின்றது. "டேதிஸ்" கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்தியப் பெருங்கடலாக மாறியது.



காஷ்மீரின், "குரியுல்" பள்ளத்தாக்கு பகுதியில் இவை தொடர்பிலான பல்வேறு படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கடற்கோள் வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென பேராசிரியர் ப்ரூக்ஃபீல்டு தெரிவித்தார்.

------------------------------------------------------------

உங்களுக்குத் தெரியுமா?.....

 உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1985ம் ஆண்டு லிதுயாபேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524மீற்றர்(1742அடி)

 இதுபோன்ற இரண்டாவது உயரமான சுனாமி அலை 1963ம் ஆண்டு வெஜோன்டாமில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 250மீற்றர்(750அடி)

-------------------------------------------------------------

இன்றும் என் மனக்கண் முன்னால்........!!!



2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளினைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப்பேரலையினை நம்மால் எளிதில் மறந்துவிடமுடியாது.

கடற்கரையோரங்களில் வீற்றிருந்த தென்னை மரங்களின் உயரத்திற்கும் மேலாக மேலெழுந்த ஆழிப்பேரலைகள் கரையோரங்களினைத் தாக்கிய துவம்சம் செய்தது, அந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினை சில கிலோமீற்றர் தூரத்திலிருந்து நேரடியாகப் பார்த்தது இன்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.


-----------------------------------------------------

புதியதொரு மைல்கல்லினை நோக்கி..........!!!



பதிவுலகில் மீண்டுமொரு மைல்கல்லினை கடக்க காத்திருக்கின்றேன். ஆம்..... எதிர்வருகின்ற பதிவு எனது 300வது பதிவாகும் என்கின்ற நற்செய்தியுடன்
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக......


***

Saturday, March 12, 2011

ஜப்பானினை தாக்கிய சுனாமி…...


நேற்று (11.03.2011)அதிகாலை ஜப்பான், ஹொன்ஷு பிரதேசத்தில் 8.9 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 1000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஜப்பான் நாட்டினை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் 24கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை கடற்கரையோரங்களினைத் தாக்கிய 20அடி உயரத்துக்கு மேலெழுந்த ஆழிப்பேரலையினால் பல கட்டிடங்கள், வாகனங்கள் நீரோடு அள்ளுண்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பயணிகள் கப்பலொன்றும், புகையிரதமொன்றும் ஆழிப்பேரலையினால் நீரோடு இழுத்துச்செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பூகம்பத்தினால் சில எரிபொருள் நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், அணு சக்தி நிலையத்திலிருந்து அணிக்கசிவு ஏற்படலாம் என்கின்ற அச்சத்தின் காரணமாக ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் 1923ம் ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை தாக்கிய 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 143,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த பூகம்பமானது 1900ம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பங்களில் 5ம் இடத்தினை வகிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இதேவேளை கடந்த 2010ம்வருடம் ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், 2010ம்வருடம் பெப்ரவரி 27ம் திகதி, சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பமும் தாக்கியமை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.


உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்[ரிச்டர் அளவின் பிரகாரம்] தொடர்பான விபரமறிய கீழே சொடுக்கவும்......

"உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்"

***
Blog Widget by LinkWithin