Showing posts with label இயற்கை அனர்த்தங்கள். Show all posts
Showing posts with label இயற்கை அனர்த்தங்கள். Show all posts

Saturday, March 12, 2011

ஜப்பானினை தாக்கிய சுனாமி…...


நேற்று (11.03.2011)அதிகாலை ஜப்பான், ஹொன்ஷு பிரதேசத்தில் 8.9 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 1000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஜப்பான் நாட்டினை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் 24கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை கடற்கரையோரங்களினைத் தாக்கிய 20அடி உயரத்துக்கு மேலெழுந்த ஆழிப்பேரலையினால் பல கட்டிடங்கள், வாகனங்கள் நீரோடு அள்ளுண்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பயணிகள் கப்பலொன்றும், புகையிரதமொன்றும் ஆழிப்பேரலையினால் நீரோடு இழுத்துச்செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பூகம்பத்தினால் சில எரிபொருள் நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், அணு சக்தி நிலையத்திலிருந்து அணிக்கசிவு ஏற்படலாம் என்கின்ற அச்சத்தின் காரணமாக ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் 1923ம் ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை தாக்கிய 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 143,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த பூகம்பமானது 1900ம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பங்களில் 5ம் இடத்தினை வகிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இதேவேளை கடந்த 2010ம்வருடம் ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், 2010ம்வருடம் பெப்ரவரி 27ம் திகதி, சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பமும் தாக்கியமை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.


உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்[ரிச்டர் அளவின் பிரகாரம்] தொடர்பான விபரமறிய கீழே சொடுக்கவும்......

"உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்"

***

Thursday, February 3, 2011

அன்னைக்கு கெளரவம்.....!!!



நலிவுற்றோருக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து சேவையாற்றிய அன்னை தெரேசாவுக்கு, அமெரிக்க தபால் சேவைகள் ஞாபகார்த்த தபால் முத்திரையினை(44சதம்) வெளியிட்டு கெளரவப்படுத்தியது.

2010ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் அன்னை தெரேசாவின் 13ம் ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு விருது பெற்ற ஓவியக் கலைஞர் தோமஸ் ப்ளக்‌ஷெர் II அவர்களினால் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1996ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்கா அன்னை தெரேசாவுக்கு கெளரவ அமெரிக்க பிரஜாவுரிமை வழங்கி கெளரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அன்னை தெரேசாவுக்கு வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.


++++++++++++++++++++++++++++++++++++++


இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்.....

தற்பொழுது, கிழக்கிலங்கை மட்டுமின்றி நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீரற்ற காலநிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கிலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த அடைமழை மீண்டும் ஆரம்பித்து பல நாட்களாக தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்ற அடைமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.

கடந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக பூச்சி தாக்கங்கள், யானைகளின் தொல்லைகளினால் பாதிப்படைந்த விவசாயிகள் மீண்டும் தொடர்ந்துபெய்கின்ற அடைமழையினால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர்.

15 வருடங்களின் பின் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சேனாநாயக்க சமுத்திரம் 110 அடி வரை நீரை கொள்ளக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. பெரும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஜசி சூறாவளி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகத்தினை தொடர்ந்து அச்சுறுத்துகின்ற இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகள் பாரதூரமானவையாகும்.

"காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" என்கின்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகிய எனது ஆக்கத்தினை உங்களுடன் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.



(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***

Tuesday, November 23, 2010

மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........



மின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........

 மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)

 மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.

 இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.

 இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.

 சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.

 புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.

 சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.

 மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.

 ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.

 உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.

==================================

இலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெய்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது???....)

***

Wednesday, November 10, 2010

உலகில் மிகப்பெரிய எரிமலை.............



உலகில் மிகப்பெரிய எரிமலையானது அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது. "மௌவ்னா லோ" என்றழைக்கப்படும் இந்த எரிமலைக்கு ஹவாய் மொழியில் "உயரமான மலை" என்ற பொருளாகும்.



ஹவாய் தீவுகள் உருவாகுவதற்கு காரணமான 5 எரிமலைகளில் ஒன்றாக " மௌவ்னா லோ" எரிமலையானது விளங்குகின்றது.

இந்த எரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து 4170 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் இந்த எரிமலையின் அத்திவாரமானது கடலின் அடிமட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் " மௌவ்னா லோ" எரிமலையின் மொத்த உயரமானது 17000 மீற்றரிலும் (56000 அடி) அதிகமாகும். அவ்வண்ணம், பூமியில் மிக உயரமான மலைகளிலொன்றாகவும் " மௌவ்னா லோ" எரிமலையினைக் குறிப்பிடலாம்.

" மௌவ்னா லோ" எரிமலையானது ஹவாய் தீவுகளின் அரைப்பங்கிற்கு(50.5%) பரந்து வியாபித்து காணப்படுகின்றது. மௌவ்னா லோ எரிமலையின் பரப்பு 5271 km2 அத்துடன் இதன் கொள்ளளவு 80000 km3. அவ்வண்ணம் பரப்பளவிலும், கொள்ளளவிலும், உலகில் மிகப்பெரிய எரிமலையாக "மௌவ்னா லோ" விளங்குகின்றது.

உலகில் மிகவும் தொழிற்படு நிலையில் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மௌவ்னா லோ" எரிமலையானது, 1843ம் ஆண்டிலிருந்து இதுவரை 33 தடவைகள் வெடித்துக் குமுறியுள்ளது. இந்த எரிமலையின் அண்மைய வெடிப்புச் சம்பவமாக 1984 மார்ச் 24 - ஏப்ரல் 15 வரை வெடித்தமை பதிவாகியுள்ளது.

" மௌவ்னா லோ" எரிமலையானது, செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாமல் மிகவும் மென்மையான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டுள்ளதனால் பாதுகாப்பான எரிமலையாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இதிலிருந்து வெளியேறுகின்ற எரிமலைக் குழம்பானது (லாவா) குறைந்தளவான சிலிக்காவினைக் கொண்டிருப்பதுடன், பெருமளவில் திரவ நிலையிலும்[குறைந்தளவான பாகு நிலைமையினை கொண்டிருப்பதனால் ஆகும்] காணப்படுவதனாலாகும்.

செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாததன் காரணமாக " மௌவ்னா லோ" எரிமலைக் குமுறல்கள் அரிதாகவே பாரிய விபரீதங்களினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளனவாம்.

எரிமலை தீவாக விளங்கும் ஹவாய் தீவுகளானது, பசுபிக் பூமித் தட்டில் அமைந்து காணப்படுகின்றது. இந்தப் பிராந்தியமானது எரிமலைகள், சுனாமிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பாதிப்புக்களின் அபாய மையமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


============================================


உயிர் சேதங்களினை ஏற்படுத்திய " மெராபி" எரிமலை வெடிப்புச் சம்பவம்.....



உலகில் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மெராபி" எரிமலை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அதிகளவில் மக்கள் வாழ்கின்ற பிராயந்தியத்தில் அமைந்து காணப்படுகின்றது,



கடந்த வாரம் முதற்கொண்டு " மெராபி" எரிமலை குமுற ஆரம்பித்ததிலிருந்து இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 200,000 இலும் அதிகமாகும்.

================================================

எரிமலை தொடர்பிலான எனது முன்னைய பதிவு.......

Wednesday, October 13, 2010

உலகின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற இயற்கை அனர்த்தங்கள்

1989ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி ஒன்றுகூடிய ஐ. நா பொதுச்சபையானது, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 2வது புதன்கிழமையினை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியது. அத்துடன் இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தசாப்தமாக 1990-1999ம் ஆண்டு காலப்பகுதியினை ஐ. நா பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவியரீதியில், இயற்கை அனர்த்தங்களினை குறைப்பது, அனர்த்தங்களினை தடுத்தல், தணித்தல், முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகளினை மக்கள்மத்தியில் ஏற்படுத்துவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளமை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமானது பிரகடனப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும்.

பூகம்பங்கள், சுனாமிப் பேரலைகள், வரட்சி, வெள்ளப்பெருக்கு, சூறாவளிகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத் தீ, நிலச்சரிவு, மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் உலகில் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வாதாரங்களினை, வசிப்பிடங்களை, உயிர் மற்றும் உடைமைகளை இழக்கின்றனர். மேலும் இயற்கை அனர்த்தங்களினால் உலக நாடுகளின் பொருளாதாரங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.

2010ல் உலகில் அழிவுகளை ஏற்படுத்திய சில இயற்கை அனர்த்தங்கள்........

இந்த வருட ஜனவரி மாதத்தில் ஹெய்ட்டி நாட்டினை உலுக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000 – 300,000 அதிகமானோர் பலியாகியதுடன் பல்லாயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த வருட ஜனவரி மாதத்தில் சொலமன் தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்விடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த பெப்ரவரி 27ம் திகதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டினை தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிலி, ஜப்பான், ஹவாய் தீவுகள், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளினை பூகம்பத்தினை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த மார்ச் மாதம், ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எரிமலை வெடிப்பினால் பல நாட்களுக்கு ஆயிரக்கணக்கான விமானப்போக்குவரத்து மார்க்கங்கள் தடைப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம், சீனாவின் சிங்காயில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக 1000க்கும் அதிகமானோர் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பாகிஸ்தானில் கடந்த 81 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மிகப் பாரிய வெள்ளப்பெருக்கின் காரணமாக 1000 க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன், பலர் தமது வாழ்வாதரங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



கடந்த செப்டம்பர் மாதம், ரஷ்சியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 174,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு வரை பரவி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்சியாவின் விளை நிலங்கள் பல இத்தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இதனால் பாரிய பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.




அண்மைய வாரங்களில் ஏற்பட்ட மெக்சிக்கோ, காஷ்மீர் நிலச்சரிவு, சீனா,தாய்வானை தாக்கிய சூறாவளியின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அதிகளவான நாடுகளில் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், சூறாவளி, நிலச்சரிவு போன்றவற்றின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற சேதங்கள் அதிகரிப்பதற்கு மனிதனின் திட்டமிடப்படாத அபிவிருத்திச் செயற்பாடுகள், இயற்கைச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும்.

இலங்கையில் மின்னல் காரணமாக அண்மைய வாரங்களில் சிலர் மரணமாகியமை கவலைக்குரிய செய்தியாகும். மின்னல் தொடர்பிலான ஆய்வுத்தகவலொன்றினை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.


( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 19.04.2009)
***
Blog Widget by LinkWithin