Friday, January 28, 2011

பூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது....? ~ விடை பகருகின்ற ஆய்வுத்தகவல்.....





உயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் "பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது" என்கின்ற தகவலினை குறிப்பிட்டிருந்தேன். பூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது..? இதற்கு விடை பகருகின்றது இந்த ஆய்வுத்தகவல்.........

முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.

புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், "எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது" , "எனது பூனை கேக் சாப்பிடுகின்றது" என்கின்றார்களே... இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில், அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


*---**---**---**---**---**---**---**---**---**---**



உயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் "இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது" என்கின்ற தகவலினையும் குறிப்பிட்டிருந்தேன். அப்படியாயின் இறால்களுக்கு மூளை எங்கே அமைந்துள்ளது?.... இறால்களுக்கு தலையிலேயே மூளை அமைந்துள்ளது"... அதாவது அவற்றின் கண்களுக்கு சற்று கீழ்ப்புறமாக அமைந்துள்ளது.


*---**---**---**---**---**---**---**---**---**---**

பி.கு :- பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா....?என்கின்ற தலைப்பிலான பதிவில் உயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்களினை குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவுக்கு நண்பர் ஜெயதேவ் தாஸ் வழங்கிய பின்னூட்டங்களே இந்த பதிவினை எழுதத் தூண்டியது. அந்தவகையில் நண்பர் ஜயதேவ் தாஸ் அவர்களுக்கு விசேட நன்றிகள்.


***

Wednesday, January 26, 2011

ஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......!!!




உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.............

 ஐக்கிய நாடுகள் சபையின் அடையாளச் சின்னத்தினை[Logo] வடிவமைத்த பெருமைக்குரியவர் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த டொனால் மெக்லாஃப்லின்( 1907 - 2009) ஆவார். யுத்த தந்திரோபாய சேவைகள் நிலையத்துக்காக(OSS) பணியாற்றிய இவர், CIAயின் முன்னாள் அதிகாரியும் ஆவார். ஐ.நா சபை இலச்சினையானது, ஆடையின் முன்புறத்தில் அணிகின்ற சின்னமாகவே முதன்முதலில் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

+ இவர் சிறந்த கட்டிடக்கலைஞரும் ஆவார்.

 ஐக்கிய அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் எஃப் கென்னடி, உலகின் அதிவேக பேச்சாளராக விளங்கினார். இவர் 1 நிமிடத்திற்கு 350இற்கும் அதிகமான சொற்களினை பேசக்கூடியவராக விளங்கினார்.

 பிரபல விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன், இங்கிலாந்து தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டவராவார்.

 ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபல கறுப்பின தடகள வீரராக விளங்கிய ஜெசி ஓவன்ஸ் 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக்கில் பல சாதனைகளை நிலை நாட்டி 4 தங்கப்பதக்கங்களை வென்றவராவார்.

+ ஜெசி ஓவன்ஸ் 1935ம் ஆண்டு 45 நிமிடங்களில் 4 உலக சாதனைகளினை முறியடித்தவராவார்.

 உலகின் முதல்நிலை பணக்காரராக விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த Microsoft நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், முதன்முதலில் கணனி நிகழ்ச்சி நிரல்களினை உருவாக்கியபோது அவரின் வயது 13 ஆகும்.

***

Monday, January 24, 2011

பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா ?.....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.

• டெல்மேசன் நாய்க்குட்டிகள் பிறக்கும்போது தூய வெள்ளையாகவே இருக்கும். அவை வளர்ச்சியடைந்த பின்பே அவற்றின் உடம்பில் புள்ளிகள் உருவாகின்றன.




• பூனைகளில் 100இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

• கிவி பறவைகளுக்கு கண் பார்வை இல்லை. இதன் காரணத்தினால் இவை மோப்பசக்தியினைக் கொண்டே உணவினை தேடிக்கொள்கின்றன.

• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.

• ஆர்மடில்லோக்கள், ஒரு தடவையில் நான்கு குட்டிகளினை ஈன்கின்றபோது அந்த நான்கு குட்டிகளும் ஒரே பாலினத்தினை சேர்ந்தவையாகவே இருக்கும்.

• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.

• உலகில், 350இற்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன.

• உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.

• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.




• பாலூட்டிகளின் இரத்தத்தின் நிறம் சிவப்பு & பூச்சிகளின் இரத்தத்தின் நிறம் மஞ்சள் ஆகும்.

***

Saturday, January 22, 2011

பெயர் வரக் காரணம் என்ன?..... # 03


நான் இந்த சினிமா நடிகரின் FAN, நான் அந்த சினிமா நடிகரின் FAN என்று கூறித்திரிபவர்கள் பலருண்டு... இவ்வாறு சினிமா முதல் விளையாட்டு வரையான பல்வேறுபட்ட துறைகளில் பிரசித்திபெற்றவர்களுக்கு FANS உண்டு.

அந்தவகையில், ரசிகர்களை விசிறிகள்(FANS) என்று சொல்கின்றார்கள். ரசிகருக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு?.....

1933ம் ஆண்டு அமெரிக்காவில் சில நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது அபிமான நடிகர்களின் ஆடை அலங்காரங்கள், சிகையலங்காரங்களை அப்படியே பின்பற்றினர்.

ரசிகர்களின் இந்த வெறிச்செயலைக் கண்ட சில பெரியவர்கள், அவர்களை FANATICS(பைத்தியக்காரர்கள்) என்று வேடிக்கையாக அழைத்தனர். இது சுருங்கி FAN என்றும் தமிழில் விசிறி என்றும் மாறிவிட்டது.

எல்லாம்சரி, என் FANS ?... (சும்மா தமாஸூக்கு....)


********************************************

உங்களுக்குத் தெரியுமா?.....

 மனிதனின் கண்கள், 10மில்லியன் நிறங்களினை பிரித்தறியக்கூடிய இயலுமை கொண்டவையாகும்.

விநோத சட்டம்:- இங்கிலாந்து நாட்டிலுள்ள எல்லா அன்னப் பறவைகளும் மகாராணி & மன்னருக்கு சொந்தமானவையாகும்

***

Tuesday, January 18, 2011

தேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?.......




சுவரில் தொங்குகின்ற அல்லது புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வரைபடத்தினைப் பாருங்கள், அந்த வரைபடத்தில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே காட்டப்பட்டிருக்கும்.

தேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?.......

இந்த செயற்பாட்டுக்கு எந்தவிதமான விஞ்ஞானக் காரணங்களும் கிடையாது. உலகில் தேசப்படங்களினை வரையத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நடைமுறையே தொடர்ந்துவருவதனால் அதனையே நாம் இன்றுவரையும் பின்பற்றிவருகின்றோம்.

உலகில் முதன்முதலில் தேசப்படத்தினை வரைந்தவர் புராதன எகிப்து நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானி தொலமி ஆவார்.



உலகத்தின் மையத்தில் எகிப்து தேசம் அமைந்திருப்பதாக தொலமி நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த காலப்பகுதியில் எகிப்து தேசமானது தனக்கு வடபுறத்தே அமைந்திருந்த மத்திய தரைக்கடல் நாடுகளுடனும், கிரேக்கத்துடனும் மிகச்சிறந்த நல்லுறவினைக் கொண்டிருந்தது.

இதன் காரணத்தினால் தொலமி, தனது தேசப்படத்தில் கிரேக்கம் & மத்திய தரைக்கடல் நாடுகளை மேற்புறத்தில் குறித்துக்காட்டினார். தொலமி, தான் வரைந்த தேசப்படத்தில் வடக்கு திசையினை மேற்புறத்திலேயே குறித்துக் காட்டினார்.




இதனாலேயே தேசப்படங்களில் வடக்கு திசையினை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படும் போக்கு இன்றுவரையும் தொடர்ந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புராதன யுத்தங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் சில இராணுவ அதிகாரிகள், கிழக்கு திசையினை மேற்புறத்தில் குறித்தே வரைபடங்களினை வரைந்தனர்.ஆனாலும் இந்த நடைமுறை குறிப்பிட்ட சில காலங்களுக்கே நிலைத்திருந்ததுடன், இந்தப் போக்கு உலகளாவியரீதியில் ஒருபோதும் பிரபல்யம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

Friday, January 14, 2011

வரலாறுகாணாத வெள்ளமும், நெற்செய்கையும்.......

கடந்த பல வாரங்களாகப் பொழிந்த அடைமழை நேற்று ஓய்ந்ததனால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்தோடிவருகின்றது. ஆனாலும் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பவில்லை. அத்துடன் கடும் குளிரினால் மக்கள் அவதியுறுகின்றனர்.

ïவரலாறுகாணாத வெள்ளப் பெருக்கினால் னங்காடு தில்லையாறு பாரியளவில் பெருக்கெடுத்து பிரதான பாதையினை ஊடறுத்துப் பாய்ந்த காட்சி....




படம் 1 ~ ஜனவரி 10, 2011, 12:01 PM



படம் 2 ~ ஜனவரி 11, 2011, 11:39 AM



இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஒத்துழைக்கின்ற ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பதிவர் குழாமுக்கு பாராட்டுக்கள்.

உழவுத் தொழிலுக்கு உதவிசெய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக பொங்கலிட்டு வழிபாடு செய்கின்ற திருநாளே தைப்பொங்கல் பண்டிகையாகும்.

ஆனாலும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த இழப்பினை சந்தித்துள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் இந்த வருட தைப்பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.



நெல் தொடர்பிலான சுவையான தகவல்கள்.........




 உலகில் நெல்லானது (குடும்பப் பெயர் ~ ஒறைசா சற்றைவா) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.

 உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.

 பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.

 1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.

 உலக அரிசி உற்பத்தியானது 430 மில். மெற்றிக் தொன்களாக இருப்பதோடு இதில் 90% இற்கும் அதிகமான உற்பத்தியும், நுகர்வும் ஆசிய நாடுகளைச் சார்ந்ததாகும். அத்துடன் உலக மக்களின் அரைவாசிப் பங்கினரின் அடிப்படை உணவாகவும் அரிசி விளங்குகின்றது.

 உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.

 உலகில் அதிக சனத்தொகையினைக் கொண்ட 4 நாடுகளில் 3 நாடுகள் அரிசியினை மையப்படுத்திய சமூகத்தினையே கொண்டிருக்கின்றது. அவையாவன, மக்கள் சீனக் குடியரசு, இந்தியா & இந்தோனேசியா.... இந்த நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகை அண்ணளவாக 2.5 பில்லியன் ஆகும்.

 சராசரியாக ஆசிய நாட்டவரொருவர், வருடாந்தம் 150கிலோகிராம் அரிசியினை நுகர்கின்ற அதேவேளை சராசரியாக ஐரோப்பிய நாட்டவரொருவர், வருடாந்தம் 5கிலோகிராம் அரிசியினையே நுகர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஆசியாவின் சனத்தொகையில்(3.5பில்லியன்) வருடாந்தம் 50 மில்லியன் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

 ஆசியாவின் நெல் விளைநிலங்களில் ¾ பங்கான நிலங்களில் மேம்படுத்தப்பட்ட நெல்லினங்களே பயிரிடப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஆசியாவில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.

 ஆசிய நாடுகளில் 250 மில்லியன் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 1 ஹெக்டெயருக்கும் குறைவாகவே கொண்டுள்ளனராம்.

 உலகில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் 80 நாடுகளுள் தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஏற்றுமதிக்கான மிகையுற்பத்தி காணப்படுகின்றது.

 உலகில் வெளி நாட்டு வர்த்தகத்திற்காக 5% இற்கும் குறைவான அரிசி உற்பத்தியே கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை நிலையற்றதாகவே காணப்படுகின்றது.

 தற்போது ஆபிரிக்க நாடுகளிலும் அரிசியின் நுகர்வில் முன்னேற்றம் காணப்படுவதால் அதிகரிக்கும் கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் அந்நாடுகள் தமது கண்டத்தினுள்ளேயே அரிசியினை உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளன.

 உலகில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற அரிசியானது ஒருவருக்கு தலா 65 கிலோகிராம் ஆகும்.

 பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)

 திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.

 அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

***





***

Wednesday, January 12, 2011

நூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2

கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..

எங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.

மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..

நண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........



























***

Monday, January 10, 2011

பேரவலத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம்......!!! ~ படப்பதிவு

கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.


வானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.

எங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........


வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......

நீரிலும் வீதி சமிஞ்ஞை?....!!!






நெற் காணிகள் வெள்ளத்தில்...!!!









கால்நடைகளின் தங்குமிடம்?...!!!






கரைபுரண்டோடும் வெள்ளம்...!!!













***

Saturday, January 8, 2011

ஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.......



எதிர்வருகின்ற பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெறுகின்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரினை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்ற சிறப்புக்கட்டுரை......

ஓட்டங்கள்

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 413/5 ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007

 ஒரு அணி பெற்ற குறைந்தபட்ச ஓட்டங்கள் 36 ~ கனடா எதிர் இலங்கை, 2003

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை கடந்தது வெற்றிபெற்ற சந்தர்ப்பம் 313/7 ~ இலங்கை எதிர் சிம்பாப்வே 1992, நியூபிளைமொத்

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 257 ஓட்டங்கள் ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 01 ஓட்டம், அவுஸ்திரேலியா எதிர் இந்தியா(1987,1992)

 உலகக்கிண்ணப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 188* ~ கரி கேர்ஸ்டன் தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 1996, ராவல்பிண்டி

 உலகக்கிண்ண இறுதிப்போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 149 ~ அடம் கில்கிரிஸ்ட்( அவுஸ்திரேலியா எதிர் இலங்கை), 2007

 உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் ~ 318 ஓட்டங்கள்/2வது விக்கட் இணைப்பாட்டம் ( ராகுல் ராவிட் & சவ்ரவ் கங்குலி ) இந்தியா எதிர் இலங்கை ~ 1999

அணிகள்




 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அணி ~ 23, அவுஸ்திரேலியா 1999-2007

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக தோல்வியுற்ற அணி ~ 18, சிம்பாப்வே 1983-1992

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தினைக் கொண்ட அணி ~ அவுஸ்திரேலியா 74.63% ( விளையாடிய போட்டிகள் ~ 69, வெற்றி ~ 51)

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் வெற்றிகளைப் பெற்ற அணி ~ அவுஸ்திரேலியா(51)

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தோல்வியுற்ற அணி ~ சிம்பாப்வே(33), இலங்கை(30)

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் சாம்பியனாகிய அணி ~ அவுஸ்திரேலியா (04தடவைகள்) ~1987 ,1999,2003,2007

துடுப்பாட்டம்

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 1796 ஓட்டங்கள்

 உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள், 11 இன்னிங்ஸ் ~ 2003 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில்

 அதிவேக சதம் பெற்ற வீரர் ~ மத்தியூ ஹெய்டன், 66 பந்துகள், அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா

 அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் ~ பிறண்டன் மெக்கலம், 20 பந்துகள், நியூசிலாந்து எதிர் கனடா

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச strike rate (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ கபில் தேவ்(இந்தியா), 115.14

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச சராசரியினை (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ விவ் ரிச்சட்ஸ்(மே.தீவுகள்), 63. 31

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக சதங்களைப் பெற்ற வீரர்கள் ~ சவ்ரவ் கங்குலி, மார்க் வோ, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ~ 04 சதங்கள்

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் 50+ பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் ~ 17

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக தடவைகள் டக் அவுட்(0 ஓட்டங்கள்) ஆகியவீரர்கள் ~ நாதன் அஸ்லே ( நியூசிலாந்து) & இஜாஸ் அஹமட்(பாகிஸ்தான்) ~ 05 தடவைகள்

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக 06 ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங் ~30

 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சவ்ரவ் கங்குலி 110 ஓட்டங்கள் (இந்தியா எதிர் இலங்கை~1999)

பந்துவீச்சு

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 71விக்கட்கள்

 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 7/15 எதிர் நமீபியா

 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர் ~ லசித் மாலிங்க (இலங்கை), 4 பந்துகளில் 4 விக்கட்கள் எதிர் தென்னாபிரிக்கா

 உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 26 விக்கட்கள்

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகக்குறைந்த Economy rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ அண்டி ரொபர்ட்ஸ் ( மே.தீவுகள்), 3.24

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு strike rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 27.5

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக்(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 18.19

களத்தடுப்பு

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 24 பிடிகள்

 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 52 ஆட்டமிழப்புக்கள்

 உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ முஹம்மட் கைப் ( இந்தியா), 4 பிடிகள்

 உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 6 ஆட்டமிழப்புக்கள்

 உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 11 பிடிகள்

 உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 12 ஆட்டமிழப்புக்கள்

***

Tuesday, January 4, 2011

பெயர் வரக் காரணம் என்ன?..... # 02

பட்ஜெட்..........



வரவு செலவுத் திட்டத்தினை ஆங்கிலத்தில் "பட்ஜெட்"(Budget) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......

"பட்ஜெட்டி" என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்துதான் "பட்ஜெட்"(Budget) என்ற சொல் உருவாகியது. "பட்ஜெட்டி" என்றால் நிதி அமைச்சர் தமது ஆவணங்களை வைக்கும் பெட்டி என்று பொருள்.


********************************************

உங்களுக்குத் தெரியுமா....



புதிதாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு பல்வேறு அடிப்படைகளில் எமக்கு பிடித்தமான பெயரினை நாம் சூட்டுகின்றோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... ஆனால் ஜேர்மனி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியினைப் பெறவேண்டுமாம்...

 நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு விளக்கினை 1815ம் ஆண்டு கண்டுபிடித்து பல தொழிலாளர்களின் உயிரினை பாதுகாத்த பெருமைக்குரியவர் சேர் ஹம்பேரி டேவி ஆவார்.

***

Monday, January 3, 2011

டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்.......

மலர்ந்திருக்கின்ற 2011ம் ஆண்டில் எனது முதல் பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.... .

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல் தொடர்பான பதிவு உங்களுக்காக.......



இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியூயோர்க் நோக்கி தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்த "டைட்டானிக்"கப்பல்[SS Titanic], 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், அத்திலாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.

"டைட்டானிக்" கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்கன் றொபட்சன் என்பவர் வெளியிட்ட நாவலொன்றில் இது போன்றதொரு விபத்துச் சம்பவமொன்றினைக் குறிப்பிட்டிருந்தார், அந்தப் புத்தகத்தில் டைட்டானிக் கப்பலின் அளவுடைய கப்பலானது தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது ஏப்ரல் மாத இரவொன்றில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்தார்.

பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்த , மோர்கன் றொபட்சனின் கற்பனைக் கப்பலின் பெயர் "டைட்டன்" ஆகும்.



அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் சிதைவு...


***
Blog Widget by LinkWithin