இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, விடிவுக்கு தமது கண்டுபிடிப்புக்களின் மூலம் புகழ் சேர்த்த விஞ்ஞானிகள், தமது வாழ்நாட்களினை தமது கண்டுபிடிப்புக்க ளுக்காகவே இழந்திருக்கின்றார்கள்.
இன்று நாம் பயன்படுத்துகின்ற, பயன்பெறுகின்ற பலவற்றுக்கு இத்தகைய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணமாகும்.
உலகத்தின் விடிவுக்காக பாடுபட்டு, தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் தொடர்பிலான ஆக்கத்தின் முதற்பாகம் உங்களுக்காக........(01) கலிலியோ கலிலி(1564-1642)
இத்தாலி நாட்டினைச் சேர்ந்த கலிலியோ கலிலி சிறந்ததொரு வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் ஆவார். தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சத்தினை பற்றிய கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய பல்வேறு கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவர் கலிலி ஆவார்.
சூரியனை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலிலி, தொலைநோக்கியின் மூலம் அதிக நேரம் அண்டவெளியினை உற்றுப்பார்ப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயற்பாடு அவரின் கண்பார்வையில் கடுமையான பாதிப்புக்களினை ஏற்படுத்தியதன் விளைவால் தன் வாழ்நாளின் இறுதி 4 வருடங்களினையும் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் கழித்தார்.
உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த கலிலியோ கலிலி,
"நவீன இயற்பியலின் தந்தை" என அழைக்கப்படுகின்றார்.
(02) மேரி கியூரி அம்மையார்(1867-1934)
பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் மேரி கியூரி அம்மையார்(போலந்தில் நாட்டில் பிறந்தவர்) தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1898ம் ஆண்டு ரேடியத்தினைக் கண்டுபிடித்தார். கதிரியக்க ஆய்வில் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேரி கியூரி அம்மையார் கதிரியக்கத்தின் பாதிப்பினால் லூக்கேமியா நோயின்(இரத்தப் புற்று நோய்) காரணமாக 1934ம் ஆண்டு மரணமடைந்தார்.
விஞ்ஞானத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளான இரசாயனவியல்[1911], பெளதிகவியல்[1903] ஆகிய பிரிவுகளில்
நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் மேரி கியூரி அம்மையார் ஆவார்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்கின்ற பெருமை மேரி கியூரி அம்மையாருக்கே உரியது.
(03) சேர் ஹம்பேரி டேவி(1778-1829)
இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சேர் ஹம்பேரி டேவி மிகச்சிறந்த இரசாயனவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.சேர் ஹம்பேரி டேவி, இளம் உதவியாளராக மருத்துக்கடைக்காரர் தொழில் ஈடுபட்டபோது பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் தீக்காயங்களுக்குள்ளாகினார். இரசாயனவியல் துறையில் ஆய்வுகளினை மேற்கொள்கின்றபோது பல்வேறுவகையான வாயுக்களினை உட்சுவாசிக்கும் பழக்கத்தினை டேவி கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் நைதரசன் ஒட்சைட்(சிரிப்பூட்டும் வாயு) மூலக்கூறுகளினை கொண்டு வலி நிவாரணிகளை கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. துரதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் அவரினை பலதடவைகள் மரணித்தின் விளிம்பிற்கே கொண்டுசென்றது.
அடிக்கடி நச்சு இரசாயன பாதிப்புக்குள்ளாகிய, இவரின் வாழ்வின் இரண்டு தசாப்தகாலத்தினை கடுமையான இரசாயன பாதிப்புடனேயே கழித்தார்.
நைதரசன் குளோரைட் [Ncl3] வெடிப்புச் சம்பவத்தில் இவரின் கண்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(04) மைக்கல் பரடே(1791-1867)
இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த மைக்கல் பரடே பிரபலமான இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் ஆவார். சேர் ஹம்பேரி டேவியின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தினால், பரடே அவரின் உதவியாளரானார். சேர் ஹம்பேரி டேவியின் மின் பகுப்பு முறைமையினை மேம்படுத்தி, மின் காந்தவியல் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவராவார். சேர் ஹம்பேரி டேவியின் துரதிர்ஷ்டமோ, பரடேயினையும் இரசாயனப் விபத்துச் சம்பவங்கள் விட்டுவைக்கவில்லை. நைதரசன் குளோரைட் வெடிப்புச் சம்பவம் பரடேயின் கண்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தியது. மைக்கல் பரடே, தன் வாழ்நாளில் இறுதி நாட்களினை நீடித்த இரசாயன நச்சு பாதிப்பினுடனேயே கழித்தார்.
***