Wednesday, October 27, 2010

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை....




நாளை (28.10.2010) அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு 124வது பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு பிரசுமாகும் கட்டுரை....

அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் வானளாவ உயர்ந்து நின்று 124ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் விடுதலையினை வெளிப்படுத்தி புகழ் பரப்பி நிற்பதுதான் சுதந்திரதேவி சிலை(Liberty Enlightening the World)
.
அமெரிக்கப் புரட்சியின்போது ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்குமிடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும்முகமாக பிரான்ஸ் தேசத்தினால் ஐ.அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுதான் இந்த சுதந்திரதேவி சிலை ஆகும்.

சுதந்திரதேவி சிலையானது, சர்வதேச ரீதியில் நட்புறவினையும், விடுதலையினையும், ஜனநாயகத்தினையும் வெளிப்படுத்துகின்ற சின்னமாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக அமெரிக்காவும், பிரான்ஸ் தேசமும் ஒன்றிணைந்து சிலையொன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. இதன்பிரகாரம், பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதுடன், சிலையினை பிரான்ஸ் தேசத்து மக்கள் நிர்மாணிப்பது எனவும் முடிவுசெய்தனர்.

சிலையினை நிர்மாணிக்க ஒத்துக்கொண்ட இரண்டு தரப்பினரையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. இதனால் பிரான்ஸ் தேசம் நிதியினை திரட்ட களியாட்டங்கள், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்கள் போன்ற முறைகளின் மூலம் நிதியினை திரட்டியதுடன், அமெரிக்க தேசம் நிதியினை திரட்ட கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், இன்னபிற நிகழ்வுகள் மூலம் நிதியினை திரட்டி நிதிப்ப்பற்றாக்குறையினை ஈடுசெய்தன.


பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி

சுதந்திரதேவி சிலையினை வடிவமைத்தவர் பிரான்ஸ் தேசத்தினைச் சேர்ந்த பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி[Frederic Auguste Bartholdi] ஆவார். பார்தொல்டி, சுதந்திரதேவி சிலையினை வடிவமைக்க பிரபல பொறியியலாளர் அலெக்சாண்டிரி குஸ்டாப் ஈபிள்[Alexandre Gustave Eiffel~ ஈபிள் கோபுரத்தினை வடிவமைத்தவர்] அவர்களின் ஆலோசனையினையும், உதவியினையும் உள்வாங்கிக் கொண்டார். பிரான்ஸ் தேசத்தில் சுதந்திரதேவி சிலை நிர்மாணிப்பு 1884ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.

ஆனால், அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலையின் பீடத்துக்கான வேலைகள் மிகமெதுவாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. இதன் காரணத்தினால் ஜோசப் புலிட்ஸர்(புலிட்ஸர் பரிசு இவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றது.) தன்னுடைய " உலகம்" ["The World" ] என்கின்ற பத்திரிகையின் ஊடாக அமெரிக்க மக்களிடம் இதற்கான நன்கொடை நிதி திரட்டும் செயற்பாட்டினை ஊக்குவிப்பதில் பெரிதும் பாடுபட்டார். இதன்மூலம், சுதந்திரதேவி சிலையின் பீட நிர்மாணிப்புச் செயற்பாடுகள் 1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நிறைவடைந்தன.


பிரான்ஸ் தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 151அடி & 1 அங்குலம் உயரமானதும், 225 தொன் நிறையுடையதுமான சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் போர்க்கப்பலில் 1885ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நியூயோர்க் துறைமுகத்தினை வந்தடைந்தது. 4 மாதகாலத்துக்குள் புதிய பீடத்தில் சுதந்திரதேவி சிலையானது நிலைநிறுத்தப்பட்டு 1886ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரதேவி சிலையின் புதிய உயரம் 305 அடி & 1 அங்குலமாகும். இதன் உட்புறமாக 354 படிகளும், அதன் கிரீடத்தில் 25 ஜன்னல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திரதேவி சூடியிருக்கின்ற கிரீடத்தில் 7 கதிர்கள் உள்ளன. இது 7 சமுத்திரங்களையும், 7 கண்டங்களையும் குறிக்கின்றது. சுதந்திரதேவி இடது கையில் வைத்திருக்கின்ற நூலில் ஜூலை 4, 1776 என ரோமன் இலக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக சுதந்திரதேவி சிலை நிர்மாணிக்கப்பட்டாலும் இந்தச் சிலையானது நூற்றாண்டு விழா நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரே சுதந்திர தினப் பரிசாக அமெரிக்க மக்களுக்கு கிடைத்தது.

அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலினைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி வரை சுதந்திரதேவி சிலையானது பொது மக்களின் பார்வைக்கு தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா யுனெஸ்கோ அமையமானது சுதந்திரதேவி சிலையினை 1984ம் ஆண்டு உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

Sunday, October 24, 2010

சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......

 ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.

 மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.

சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.

சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.

 சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.

 சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.

சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.

 புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.

 தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.

 உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.

 ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.




இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...

 19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.

 பின்னிரவு நேர விமானப் பறப்பினை "Red Eye" என்கின்றனர்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.

 நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.

நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........

அப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....



***

Wednesday, October 20, 2010

மாவீரன் நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்......



பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.

ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன் நெப்போலியன் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.
நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.

***

Sunday, October 17, 2010

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய சந்தர்ப்பங்கள்...

கிரிக்கெட்டில் ஒரு அணியின் சார்பில் 11 வீரர்கள் விளையாடுவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு அணியின் 11 வீரர்களும்(விக்கட் காப்பாளர் உட்பட) பந்துவீசிய 04 சந்தர்ப்பங்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளன.

இதன் முதல் சந்தர்ப்பம் 1884ம் ஆண்டு, இங்கிலாந்து த ஓவலில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், ஆஸியின் 1வது இன்னிங்ஸ்சில்(551ஓட்டங்கள்/10) இங்கிலாந்து அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் அல்பிரட் லிட்ரால்ரோன் மிகச்சிறப்பாக பந்துவீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 04 விக்கட்களை வீழ்த்தினார்.

1979-80 பருவகாலத்தில் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, பாகிஸ்தான்(382ஓட்டங்கள்/2) அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட் போட்டியில் underarm பந்துவீச்சுப் புகழ் கிறேஸ் இடையிடையே விக்கட் காப்பாளராகவும் பணியாற்றினாராம். மழையினால் பாதிக்கப்பட்டு வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் தஸ்லிம் ஆரிப் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை பெற்றதுடன் டெஸ்ட் போட்டிகளில் அற்பமாகவே பந்துவீசுகின்ற ஆஸியின் விக்கட் காப்பாளர் ரொட் மார்ஷ் 10ஓட்டமற்ற ஓவர்களினை வீசினாராம்.




2001-02 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின்(629/9) 2வது இன்னிங்ஸ்சில் இந்திய அணியின் 11 வீரர்களும் பந்துவீசினராம். இந்த டெஸ்ட்டில் விக்கட்காப்பாளர் அஜய் ரட்ரா ஒரு ஓவர் பந்துவீசினார். முன்னதாக இந்த டெஸ்ட்டில் அஜய் ரட்ரா இளவயதில் சதம்பெற்ற விக்கட்காப்பாளராக சாதனை படைத்தமை நினைவில் நிற்கின்றது.




டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய அண்மைய சந்தர்ப்பமாக 2004-05 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின் 1வது இன்னிங்ஸ்சில் தென்னாபிரிக்க அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர். இந்த டெஸ்ட் போட்டியில் மே.தீவுகளின் கிறிஸ் கெய்ல் முச்சதம்(317) பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Friday, October 15, 2010

Facebook அடையாளக்குறி ஏன் நீல நிறம்...


சமூக இணையத்தளங்களில் பிரதான இடம் வகிக்கின்ற Facebook இணையத்தளமானது 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்க் சூக்கேர்பேர்க்(Mark Zuckerberg) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

உலகளாவியரீதியில் Facebook இணையத்தளத்தில் 524 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்துள்ளனர், அத்துடன் உலக மக்களில் 14பேரில் ஒருவர் Facebook இணையத்தளத்தில் இணைந்துள்ளனர் என்பது அண்மைய புள்ளிவிபரமாகும்.



Mark Zuckerberg இளம் பணக்காரர்களில் ஒருவராகவும், பில்லியனராகவும் உயர் ஸ்தானத்தினை அடைந்தமைக்கு Facebook இணையத்தளமே பிரதான காரணமாகும்.

"Vanity Fair" சஞ்சிகையின் ஒக்டோபர் மாத வெளியீட்டில் Google தலைமைத்துவத்துவத்தினை வகிக்கின்ற Steve Jobs, Rupert Murdoch ஆகியோரினைவிடவும் அதிகாரம்பொருந்தியவராக Facebook ஸ்தாபகர் Mark Zuckerberg முதன்மை ஸ்தானத்தினை வகிப்பவராகப் தரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Mark Zuckerberg ஊடகங்களிடம் அரிதாகவே கருத்துக்களைப் பகிர்வராகவும், பொதுமக்களிடையே அதிகம் பிரசன்னமாவதை தவிர்க்கவிரும்புவராகவும் உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



Facebook சமூக இணையத்தளத்தின் அடையாளக்குறியினை(Logo) நீல நிறத்தில் Mark Zuckerberg வடிவமைத்தமை ஏனெனில் அவருக்கு சிவப்பு - பச்சை நிறக்குருடு என்பதனாலாகும்.

Facebook இணையத்தளத்தில் நானும் இணைந்திருக்கின்றேன் Mark.........


=======================================


இன்று உலக கைகழுவுதல் தினமாகும்....



ஐ.நா உலக கைகழுவுதல் தினமானது 2008ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்தியாவில், வாந்திபேதி காரணமாக 5வயதிற்கிடப்பட்ட 1000 குழந்தைகள் நாளாந்தம் மரணமடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவர்காரத்தினைக் பயன்படுத்தி கைகழுவுவதன் மூலம் குறைந்தது 40% வாந்திபேதி காரணமாக மரணிக்கின்ற குழந்தைகளின் உயிர்களினைக் காப்பாற்றமுடியுமென யுனிசெப் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவர்காரத்தினைக் பயன்படுத்தி கைகழுவுவதன் மூலம், சுவாசம் மூலம் பரவுகின்ற தொற்றுநோய்களின் காரணமாக மரணிக்கின்ற 30% குழந்தைகளின் உயிர்களினைக் காப்பாற்றமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகாளவியரீதியில் வாந்திபேதி, சுவாசம் மூலம் பரவுகின்ற தொற்றுநோய்களின் காரணமாக 5வயதிற்கிடப்பட்ட 3.5மில்லியன் குழந்தைகள் நாளாந்தம் மரணமடைவதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

***

Wednesday, October 13, 2010

உலகின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற இயற்கை அனர்த்தங்கள்

1989ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி ஒன்றுகூடிய ஐ. நா பொதுச்சபையானது, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 2வது புதன்கிழமையினை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியது. அத்துடன் இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தசாப்தமாக 1990-1999ம் ஆண்டு காலப்பகுதியினை ஐ. நா பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவியரீதியில், இயற்கை அனர்த்தங்களினை குறைப்பது, அனர்த்தங்களினை தடுத்தல், தணித்தல், முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகளினை மக்கள்மத்தியில் ஏற்படுத்துவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளமை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமானது பிரகடனப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும்.

பூகம்பங்கள், சுனாமிப் பேரலைகள், வரட்சி, வெள்ளப்பெருக்கு, சூறாவளிகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத் தீ, நிலச்சரிவு, மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் உலகில் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வாதாரங்களினை, வசிப்பிடங்களை, உயிர் மற்றும் உடைமைகளை இழக்கின்றனர். மேலும் இயற்கை அனர்த்தங்களினால் உலக நாடுகளின் பொருளாதாரங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.

2010ல் உலகில் அழிவுகளை ஏற்படுத்திய சில இயற்கை அனர்த்தங்கள்........

இந்த வருட ஜனவரி மாதத்தில் ஹெய்ட்டி நாட்டினை உலுக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000 – 300,000 அதிகமானோர் பலியாகியதுடன் பல்லாயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த வருட ஜனவரி மாதத்தில் சொலமன் தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்விடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த பெப்ரவரி 27ம் திகதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டினை தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிலி, ஜப்பான், ஹவாய் தீவுகள், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளினை பூகம்பத்தினை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த மார்ச் மாதம், ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எரிமலை வெடிப்பினால் பல நாட்களுக்கு ஆயிரக்கணக்கான விமானப்போக்குவரத்து மார்க்கங்கள் தடைப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம், சீனாவின் சிங்காயில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக 1000க்கும் அதிகமானோர் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பாகிஸ்தானில் கடந்த 81 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மிகப் பாரிய வெள்ளப்பெருக்கின் காரணமாக 1000 க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன், பலர் தமது வாழ்வாதரங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



கடந்த செப்டம்பர் மாதம், ரஷ்சியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 174,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு வரை பரவி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்சியாவின் விளை நிலங்கள் பல இத்தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இதனால் பாரிய பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.




அண்மைய வாரங்களில் ஏற்பட்ட மெக்சிக்கோ, காஷ்மீர் நிலச்சரிவு, சீனா,தாய்வானை தாக்கிய சூறாவளியின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அதிகளவான நாடுகளில் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், சூறாவளி, நிலச்சரிவு போன்றவற்றின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற சேதங்கள் அதிகரிப்பதற்கு மனிதனின் திட்டமிடப்படாத அபிவிருத்திச் செயற்பாடுகள், இயற்கைச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும்.

இலங்கையில் மின்னல் காரணமாக அண்மைய வாரங்களில் சிலர் மரணமாகியமை கவலைக்குரிய செய்தியாகும். மின்னல் தொடர்பிலான ஆய்வுத்தகவலொன்றினை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.


( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 19.04.2009)
***

Sunday, October 10, 2010

உலகின் மிக நீளமான நேரான புகையிரதபாதை




அவுஸ்திரேலியாவின் ட்ரான்ஸ் – அவுஸ்திரேலியன் புகையிரதபாதைதான்(Trans-Australian Railway) உலகின் மிக நீளமான நேரான புகையிரதபாதையாகும். 478கிலோமீற்றர்(297மைல்) நீளமான இந்த ரயில்பாதையானது தென் அவுஸ்திரேலியாவின் நியூரினா, லுங்கானா நகரங்களினையும், மேற்கு அவுஸ்திரேலியாவின் ஓல்டி, வாட்சன் ஆகிய நகரங்களினை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பாதையின் நிர்மாணப்பணிகள் 1917ம் ஆண்டு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


உலகின் மிக நீளமான புகையிரதபாதை



ரஷ்சியாவின் ட்ரான்ஸ் - சைபீரியன் புகையிரதபாதைதான்(Trans-Siberian Railway) உலகின் மிக நீளமான புகையிரதபாதையாகும். 9259கிலோமீற்றர்(5777மைல்) நீளமான இந்த ரயில்பாதையானது தலைநகர் மொஸ்கோவையும், ஆசியப்பகுதி ரஷ்சியாவின் கடற்துறைமுக நகராகிய விலாடிவொஸ்டொக் ஆகியவற்றினை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1898ல் புகையிரதமானது முதன்முதலில் சேவையில் ஈடுபட்டது.


========================================

உலகில் மிகப்பெரிய தேநீர்க் கோப்பை



2009ம் ஆண்டு அமெரிக்காவின் கன்ஸாஸில் மாபெரும் தேநீர்க் கோப்பைக்காக படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை இலங்கையில் 9.10.2010ல் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1000 கலன் (4546 லீற்றர்) நீர் விசேட நீர்சூடாக்கும்கருவிமூலம் கொதிக்க வைக்கப்பட்டு, 64 கி.கிராம் தேயிலை, 160 கி.கிராம் சீனி மற்றும் 875 கி.கிராம் வீவா பால்மா சேர்க்கப்பட்டு மிகப் பிரமாண்டமான தேநீர்க் கோப்பை நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் தற்போதைய உலக சாதனையானது மேலதிக 340 கலன்களினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

***

Thursday, October 7, 2010

முத்தான முத்திரைகள்.......!!!

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தபால் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையில் முத்திரைகள் தனிச்சிறப்பிடத்தினை வகிக்கின்றன.

முத்திரைகள் தொடர்பான சில அரிய தகவல்கள்....

 உலகில் முதன்முதலில் தபால் முத்திரைகள் 1840ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிரிட்டன் அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும், இந்த தபால் முத்திரைகள் "பென்னி ப்ளக்" (Penny Black) என்றழைக்கப்பட்டன. இந்த முத்திரைகள் கறுப்பு பின்னணியில் 15 வயதான இளமையான விக்டோரியா மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு 1பென்னி(சதம்) பெறுமதியினைக் கொண்டதாக அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய கால முத்திரைகளைப்போல் இந்த முத்திரையில் பின்புறம் ஒட்டுவதற்கான பசை சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



 முதன்முதலில் வெளியிடப்பட்ட பென்னி ப்ளக் முத்திரையின் அளவு 3/4″ & 7/8″.

 முத்திரைகளில் தமது நாட்டின் பெயரினை அச்சிடாத ஒரே நாடு – பிரிட்டன்; ஏனெனில் பிரிட்டன் நாடுதான் தபால் முத்திரைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதன் காரணத்தினாலாகும்.

 தெற்காசிய நாடுகளில் ஒன்றாகிய பூட்டான் நாடானது 1973ல் வெளியிட்ட 7 முத்திரைகளில் இசைப்பதிவு கருவியினை இணைத்து வெளியிட்டது. இந்த இசைக் கருவி பூட்டான் நாட்டின் தேசிய கீதத்தினை இசைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

 பசுபிக் தீவுகளினைச் சேர்ந்த டொங்கா நாடானது வாழைப்பழ வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஆப்கானிஸ்தான் நாடானது வட்ட வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவானது மணம்வீசும் முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அமெரிக்காவில் மிகப் பிரபலமான முத்திரையாக கருதப்படுவது ; 1993ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரபல "றொக்" இசைப் பாடகர் எல்விஸ் பிறிஸ்லியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள். இந்த முத்திரைகள் 120 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாம்.

 நீங்கள் கீழே காண்கின்ற இந்த தபால் முத்திரையின் சிறப்பியல்பு யாது தெரியுமா? இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தபால் முத்திரை



***

Monday, October 4, 2010

உலகில் மிக அரிதான மான் – பிலிப்பைன்ஸ் புள்ளி மான்



உலகில் மிக அரிதான மானினங்களில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் புள்ளி மான்(Rusa Alfredi) விளங்குகின்றது. இது மிகச் சிறிய மானினமாகும். இதன் உயரம் 60 – 80 சென்ரிமீற்றர், அத்துடன் இவை அண்ணளவாக 130 சென்ரிமீற்றர் நீளமானதாகவும், 8 – 13 சென்ரிமீற்றர் அளவினைக் கொண்ட குறுகிய வாலினையும் கொண்டதுதான் இந்த பிலிப்பைன்ஸ் புள்ளி மான் இனங்களாகும். குறிப்பாக இந்த புள்ளி மானினங்கள் மத்திய பிலிப்பைன்ஸ்சிலுள்ள இரண்டு விஸ்ய்ன் தீவுகளான நிக்ரோஸ் மற்றும் பனய் ஆகிய தீவுகளின் காடுகளிலேயே மட்டும் வாழ்கின்றன.

இந்த மானினங்களின் உடம்பானது கருமையான பிறவுண் நிறத்தில் மிருதுவான தோலினையும், அத்துடன் மஞ்சள்-மெல்லிய பிறவுண்(Yellowish-beige) நிறப்புள்ளிகளினை உடலின் பக்கங்களிலும் கொண்டிருக்கின்றன.

ஆண் மானினங்கள் பெண் மானினங்களினைவிட உயரமானதாகவும், அத்துடன் அவை அண்ணளவாக 4.5 சென்ரிமீற்றர் உயர கொம்பினையும் கொண்டிருக்கின்றன.

பெண் பிலிப்பைன்ஸ் புள்ளி மான்களின் கர்ப்பக்காலம் 8 மாதங்களாகும். பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் புள்ளி மான்கள், தமது குட்டிகளினை மார்ச்,மே,ஜுன் மாதங்களிலேயே ஈனுகின்றனவாம் என்பது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிலிப்பைன்ஸ் புள்ளி மான்களின் வாழ்நாட்கள் 20 வருடங்களிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிலிப்பைன்ஸ் புள்ளி மான்கள், பெரும்பாலும் 3 மான்களினைக் கொண்ட கூட்டம்கூட்டமாக சுற்றுவதையே விரும்புகின்றன. ஆண் மானினங்கள் தனியாகவே சுற்றுமாம். அவை வழமையில் இரவு நேரங்களில் செயற்பாட்டுடன் இருக்கும், அந்தவேளையில் காடுகளில் தமக்குத் தேவையான புற்கள், இலைகள், மொட்டுக்களை தேடிப் பெற்றுக்கொள்ளுமாம்.
இந்த மானினங்கள் 300இற்கும் குறைவாகவே காடுகளில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரிய மானினங்களினை பாதுக்காப்பதற்காக உள்ளூர் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், அதேபோல் வனவிலங்கு பாதுகாப்புக் குழுக்கள் ஒன்றிணைந்து தமது தொடர்ச்சியான செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

================================================

இன்று உலக விலங்குகள் தினமாகும்...........



***

Friday, October 1, 2010

பறிக்கப்பட்ட கெளரவ “சேர்” பட்டம்......

உலகப்புகழ் பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக..............

 ஐக்கிய அமெரிக்காவின் 8வது ஜனாதிபதியாக பதவிவகித்தவர் மார்ட்டின் வான் வுரென் ஆவார். இவர் அவரின் சுயசரிதையில் தன்னுடைய மனைவியினைப் பற்றி ஒரு வார்த்தையினைக்கூட எழுதவில்லையாம்.

 சிறு வயதிலேயே இசை மேதையாக விளங்கி உலகப்புகழ்பெற்ற மொசார்ட் பள்ளிக்கு சென்றதே இல்லையாம்.

 சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபேக்கு பிரித்தானிய அரசாங்கமானது 1994ம் ஆண்டு கெளரவ “சேர்” பட்டத்தினை வழங்கி கெளரவித்தது, ஆனாலும் அந்த கெளரவ “சேர்” பட்டத்தினை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய அரசாங்கமானது 2008ம் ஆண்டு அறிவித்தது.



 கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் தனது ஜனாதிபதிப் பொறுப்பினை 2008ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் என்பது நீங்கள் அறிந்ததே. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நீண்ட நேரம் உரையாற்றிவர் என்ற பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் திகதி ஐ.நா பொதுச்சபையில் 4 மணித்தியாலங்கள் 29 நிமிடங்கள் உரையாற்றி சாதனை படைத்தார்.

 சார்பியல் கொள்கையின் தந்தை அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார். இவரின் அருகாமையிலிருந்த தாதிக்கு ஜேர்மனி மொழி தெரியாதனால், இவரின் மரணத்துடன் இவரின் இறுதிவார்த்தையும் மரணித்துவிட்டதாம்.

================================================

இன்று சர்வதேச சிறுவர் தினம்......





ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளில் "சர்வதேச சிறுவர் தினம்" நவம்பர் மாதம் 20ம் திகதி கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியே சிறுவர் தினமாகும். உலகில் 1954ம் ஆண்டு முதல் ஐ.நா உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் சிறுவர்களின் மீதான வன்கொடுமைகள் கவலையினை ஏற்படுத்துகின்ற விடயமாகும். மகிழ்ச்சியாக வாழவேண்டிய குழந்தைகள் இளம்வயதிலே பல்வேறு கஷ்டங்களினை அனுபவிக்கின்றனர். சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் சிறுவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

உலக தொழிலாளர் அமையத்தின் தகவல்களின் பிரகாரம் 5-14 வயதிற்கிடைப்பட்ட 165மில்லியன் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் வாழ்வில் சந்தோசங்களே தொடரவேண்டும்.

"சிறுவர்களுக்கு மதிப்பளிப்போம்"


===============================================

இன்று சர்வதேச முதியோர் தினம்......



உலகில்1990ம் ஆண்டு முதல் ஐ.நா "சர்வதேச முதியோர் தினம்" கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய உலக சனத்தொகையில் 10பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2050ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 5பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2150ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 3பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும் விளங்குவர் என எதிர்வுகூறப்படுகின்றது.

அந்தவகையில் முதியோர்தொகையின் அதிகரிப்பானது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவில் 60 அல்லது 60 வயதினை தாண்டிய முதியோர் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடாக இலங்கையே விளங்குகின்றது.


முதியோரின் தேவைகளினை பூர்த்திசெய்ய எம்மால் இயன்றவரை பங்களிப்புச் செய்வோம்......


***
Blog Widget by LinkWithin