நேற்று செவ்வாய்கிழமை ராஜ்கோட்டில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இறுதிப் பந்து வீசப்படும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. இந்தப் போட்டியில் காணப்பட்ட விறுவிறுப்புக்கு காரணம் இரண்டு அணிகளும் 400 க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றமையாகும்.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 102 பந்துகளை எதிர்கொண்டு 146 (4’s-14 & 6’s-6) ஓட்டங்களைப் பெற்றார். மேலும் அணித்தலைவர் டோனி 72 (4’s-7 & 6’s-3) ஓட்டங்களையும் சச்சின் டெண்டுல்கர் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணி 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இறுதி ஓவரில் 11 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை இலங்கை அணிக்கு காணப்பட்டது. நெஹ்ரா இறுதி ஓவரினை வீச குலசேகர முதல் பந்தில் 1 ஓட்டத்தினைப் பெற மத்தியூஸ் அடுத்த இரண்டு பந்துகளிலும் 2 ஓட்டங்கள் வீதம் பெற்று நான்காம் பந்தில் ஆட்டமிழக்க, நான்காம் பந்தில் வெல்கெதர 1 ஓட்டத்தினைப் பெற இலங்கை அணி இறுதிப் பந்தில் 5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது. இறுதிப் பந்தில் குலசேகர ஒரு ஓட்டம் மாத்திரம் பெறப்பட இலங்கை அணி 3 ஓட்டங்களால் பரிதாபகரமாக தோல்வியினை தழுவிக்கொண்டது. இலகுவாக பெறப்பட வேண்டிய வெற்றியினை இலங்கை அணியின் மத்திய , பின் வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெற்றியானது கைநழுவிப்போய்விட்டது.
மேற்படி ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள்
- இந்தியா எந்தவொரு அணிக்கெதிராகவும் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாக 414 பதியப்பட்டது. இதற்கு முன்னர் 2007 உலகக் கிண்ணப் போட்டியில் பெர்மூடா அணிக்கெதிராகப் பெற்ற 413 ஓட்டங்களே அதிகமாகவிருந்தது.
- இந்திய அணி ராஜ்கோட் மைதானத்தில் முன்னர் 2008ல் இங்கிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 387/5 ஓட்டங்களை நேற்றைய போட்டியில் முறியடித்து 414 ஓட்டங்களாகப் பதிவுசெய்தது.
- இலங்கை அணி இந்திய அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 320/8 கொழும்பு(RPS) 2009
- இந்திய அணி இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 373/6 ரவுண்டன் -1999
- இந்திய அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 387/5 VS இங்கிலாந்து 2008
- இலங்கை அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 302/8 Vs பங்களாதேஸ், மொகாலி -2006
- இந்திய அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. =>திலகரத்ன டில்சான் 160 ஓட்டங்கள். முன்னர் இந்த சாதனை சனத் ஜயசூரிய வசமிருந்தது -151* மும்பாய்-1997.
- இலங்கை அணியின் இரண்டாவது அதிகவேக அரைச்சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>குமார் சங்ககார 24 பந்துகள். முதலாவது சாதனை சனத் ஜயசூரிய (17பந்துகள்) வசமிருக்கின்றது.
- திலகரத்ன டில்சான் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(160) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் 137* vsபாகிஸ்தான் 2009
- விரேந்தர் சேவாக் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(146) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் vs நியூஸிலாந்து 2003
- ராஜ்கோட் போட்டியில் இலங்கை அணியும் , இந்திய அணியும் 400 ஓட்டங்களைப் இரண்டு தடவை கடந்த அணிகளாக தென்னாபிரிக்காவுடன் தமது பெயரை பதிவு செய்து கொண்டன.
- இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா 438 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்ரேலிய அணியை வெற்றி பெற்ற ஜோகனர்ஸ்பேர்க் போட்டி விளங்குகின்றது.
- இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்றும் தோல்வியடைந்த போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் இந்தியா 347 Vs அவுஸ்ரேலியா -2009 (ஹைதராபாத்)
- இரண்டு அணிகளும் இணைந்து அதிகபட்ச ஓட்டங்களைப்(825) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(872)
- 4 ஓட்டங்கள்(80) அதிகம் பெறப்பட்ட 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(87)
- இலங்கை அணியின் வீரர் இந்தியாவுக்கெதிராக வேகமான சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>திலகரத்ன டில்சான் 73 பந்துகள். முன்னர் சாதனை சனத் ஜயசூரிய (79பந்துகள்-கராச்சி 2008) வசமிருக்கின்றது.
***
No comments:
Post a Comment