சுற்றுலா இலங்கை அணியின் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் 2-0 என இந்திய அணியினால் கைப்பற்றப்பட்டது. இந்த டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினரால் ஓரளவு முதன்மை பெற முடிந்தாலும் இலங்கை அணியின் பந்து வீச்சு எடுபடாததால் அந்த டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவடைய முக்கிய பங்கு வகித்தது எனலாம்.
மேலும் 2ம்,3ம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தின் முன்னால் இலங்கை அணியினரால் தாக்குப்பிடிக்க முடியாமல் பரிதாபகரமாக இன்னிங்ஸ் தோல்வியினை தழுவிக்கொண்டது. இலங்கை அணியினர் நின்று நிலைத்து ஆட வேண்டிய தருணங்களில் தமது விக்கட்களை தாரைவார்த்தமையும் தோல்விக்கு காரணமாக அமைந்தன. நடுவர்களின் சில தவறான தீர்ப்புகளும் இந்த டெஸ்ட் தொடரினை பாதித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சேவாக், காம்பீர், ராவிட், தோனி, டெண்டுல்கர், லக்ஸ்மன், விஜய் ஆகியோரின் துடுப்பாட்ட பெறுதிகள் கைகொடுத்தன. மேலும் பந்துவீச்சில் இந்திய அணியின் வெற்றிக்கு சிறிசாந்த், ஹர்பஜன் சிங், சாகிர் கான், ஓஜா ஆகியோரின் பந்துவீச்சுப் பெறுதிகள் கைகொடுத்தன.
இலங்கை அணியின் சார்பில் முதல் டெஸ்ட்டில் டில்சான்,மஹேல ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோரும் இரண்டாவது டெஸ்ட்டில் சமரவீரவும், மூன்றாவது டெஸ்ட்டில் டில்சான், மத்தியூஸ், சங்கக்கார ஆகியோர் கைகொடுத்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை கரைசேர்க்கின்ற உலகசாதனைப் பந்துவீச்சாளர் முரளிதரனின் பந்துவீச்சு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் எடுபடாமல் போய்விட்டது. (97/3&124/0,175/2,195/4) முரளியின் பந்துவீச்சு எடுபடாமல் போனதும் இலங்கை அணியின் வெற்றியினைப் பாதித்தது என்றாலும் மிகையல்ல எனலாம்.
மேலும் ரங்கன ஹேரத் ஒரு இன்னிங்ஸ்சில் 5 விக்கட்களைப் பெற்றிருந்தாலும் அவர் உட்பட இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஏராளமான ஓட்டங்களை வழங்கியமை இலங்கை அணியினை பாதித்தது எனலாம்.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தொடர் முழுவதும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி கலக்கிய விரேந்தர் சேவாக் போட்டித் தொடரின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுக்கொண்டார். (16&51,131,293)
இலங்கை அணியால் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருக்க முடியாவிட்டாலும் போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடிக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிட்டதெனலாம்.
இலங்கை அணி இந்திய மண்ணில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.அவைகளுள் 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதோடு 7 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. இலங்கை அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து கிடைத்தது முதல் இந்திய மண்ணில் இதுவரை எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் வெற்றி கொள்ள முடியாமல் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் ஸ்தானத்தை பிடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடரில் ஏராளமான சாதனைகள் இரு அணியினராலும் மற்றும் துடுப்பாட்ட வீரர்களாலும், அத்துடன் மோசமான சாதனைகள் பந்துவீச்சாளர்களால் நிகழ்த்தப்பட்டாலும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை உங்கள் முன் பகிர்கின்றேன்.
1வது டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (அஹமதாபாத்-நவம்பர்16-20)
- · இந்திய மண்ணில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டி இதுவாகும்.(இலங்கை 760/7) மற்றும் இந்திய மண்ணில் இலங்கை அணியானது இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற போட்டியும் இதுவாகும்
- · மஹேல ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன ஜோடி 6வது விக்கட்டுக்காக 351 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று 72 வருட உலகசாதனை முறியடிப்பு.(முன்னர் 1937ல் பிரட்மன்,ஜே.பிக்லடன் ஜோடி 346 ஓட்டங்கள், ஆஸி எதிர் இங்கிலாந்து) மற்றும் இலங்கை அணியின் 6வது விக்கட்டுக்கான மிகச் சிறந்த இணைப்பாட்ட சாதனை பெறப்பட்ட போட்டி.
- · 9000 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கையராக மஹேல ஜயவர்த்தன சாதனை படைத்தார். மேலும் 11000 ஓட்டங்களை கடந்த 5வது சர்வதேச வீரராக ராகுல் ராவிட் சாதனை படைத்தார்.
- · இந்திய மண்ணில் இரட்டை சதம்(275) பெற்ற முதலாவது இலங்கையராக மஹேல ஜயவர்த்தன சாதனை படைத்தார்.
- · இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி அத்துடன் இலங்கை வீரர் ஒருவர் அதிக ஓட்டம் பெற்ற போட்டியும் இதுவாகும்.-->மஹேல ஜயவர்த்தன(275)
- · இந்திய துணைக்கண்டத்தில் ஒரு டெஸ்ட் ppபோட்டியில் முதல்தடவையாக 7சதங்கள் பெறப்பட்டமை.
- · டெஸ்ட்,ஒருநாள் போட்டி,T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 30000 ஓட்டங்களை கடந்த ஒரே வீரராக சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.
2வது டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (கான்பூர்-நவம்பர்24-28)
- § இந்திய அணியின் 100வது டெஸ்ட் வெற்றி பெறப்பட்ட போட்டி இதுவாகும்.
- § இலங்கை அணி 1வது இன்னிங்ஸில் 413 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது. இது இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்களால் பின்னிலை பெற்ற போட்டி இதுவாகும்.
- § ஒரு நாளைக்குள் 400 ஓட்டங்களை இந்திய அணி எட்டிய முதல் சந்தர்ப்பம்(419) இந்தப் போட்டியிலாகும்.
3வது டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (மும்பாய்-டிசம்பர்2-6)
- v ஒரு நாளைக்குள் இந்திய அணி அதிக ஓட்டங்களை அடைந்தது (443) இந்தப் போட்டியிலாகும்.
- v டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவேகமாக 250 ஓட்டங்கள் பெற்ற சாதனை மற்றும் இரண்டாவது மிக வேகமான இரட்டைசத சாதனை விரேந்தர் சேவாக்கினால் நிகழ்த்தப்பட்டது இந்தப் போட்டியிலாகும்.
- v இந்திய அணியானது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற போட்டியும் இதுவாகும்.(729/6)
- v விரேந்தர் சேவாக் 290 இலக்குகளில் ஆட்டமிழந்த 4வது வீரராக மாறினார்.(293)
- v டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஒருவர் பந்துவீச்சில் எதிரணிக்கு அதிக ஓட்டங்களை(240) விட்டுக்கொடுத்தவராக ரங்கன ஹேரத் மாறினார்.
***
No comments:
Post a Comment