அண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
1) பொருளாதார பாதிப்புக்கள்எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக ஏராளமான விமான போக்குவரத்து நிறுவனங்கள் தமது சேவையினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்கவில்லை என்றாலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகை கொடுப்பனவுகள் மற்றும் கடன் வாங்கிய தொகைக்கான வட்டிக்கொடுப்பனவுகள் ஆகியவற்றினை எதிர்கொண்டன. மேலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் நெருக்கடிகளினை எதிர்கொண்டன.
காய்கறிகள்,பழங்கள்,பூக்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற வருமான மூலங்களில் தங்கியிருக்கின்ற நாடுகள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை இலகுவாக பழுதடையக்கூடியதாக இருப்பதனால் இவற்றுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டஈடுக்கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலையும் வரலாம்.
விமான போக்குவரத்து நிறுவனங்கள், கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறும் முன்னரே மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2) சுகாதாரப் பாதிப்புக்கள்எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக சுகாதாரப்பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும், ஆஸ்மா மற்றும் ஏனைய சுவாசப்பை நோய் உள்ளவர்களுக்கும் இது மோசமான பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம் என ஐ. நா. சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.
3) சுற்றுச்சூழல் பாதிப்புக்கள்உறைந்த பனி ஏரியொன்றில் இந்த எரிமலை வெடித்தமையால், நெருப்புபிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து வளிமண்டலத்தில் வெளியிட்ட தூசிப்புகை வளிமண்டலத்தில் 10கி.மீ தூரம் வரை பரவியுள்ளதாம்.
அது வளிமண்டலத்தில் பரவி மெதுமெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தொடர்பில் ஆறுதல்கொள்ளக்கூடிய ஒரே விடயம் யாதெனில் இதன் காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படாமையாகும். உலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்;1) இந்தோனேசியாவில், 1815ம் ஆண்டு ஏற்பட்ட ரம்வோரா எரிமலை வெடிப்பின் காரணமாக 92000 மக்கள் பலியாகினர்.
2) இந்தோனேசியாவில், 1883ம் ஆண்டு ஏற்பட்ட கிராகிட்ரோ எரிமலை வெடிப்பின் காரணமாக 36000 மக்கள் பலியாகினர்.
3) கரீபியன் தீவிலுள்ள மாரினிட்கியுவில், 1902ம் ஆண்டு ஏற்பட்ட பீலே எரிமலை வெடிப்பின் காரணமாக 29000 மக்கள் பலியாகினர்.
4) கொலம்பியாவில், 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிவாடோ டெல் றூயீஷ் எரிமலை வெடிப்பின் காரணமாக 23000 மக்கள் பலியாகினர்.
5) இத்தாலியில், கி.பி79ம் ஆண்டு ஏற்பட்ட வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக 25000 மக்கள் பலியாகினர். இந்த மலை இறுதியாக வெடித்தது 1944ம் ஆண்டில்.
6) ஜப்பானில், 1792ம் ஆண்டு ஏற்பட்ட உன்சென் எரிமலை வெடிப்பின் காரணமாக 15000 மக்கள் பலியாகினர்.
7) இந்தோனேசியாவில், 1586ம் ஆண்டு ஏற்பட்ட கெலுட் எரிமலை வெடிப்பின் காரணமாக 10000 மக்கள் பலியாகினர்.
8) ஐஸ்லாந்தில், 1783ம் ஆண்டு ஏற்பட்ட லாகி எரிமலை வெடிப்பின் காரணமாக 9350 மக்கள் பலியாகினர். இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக 25%ஆன மக்கள் பலியாகினர்.
***