Friday, October 30, 2009

அணித்தலைவர் Vs அவுஸ்ரேலியா & ODI


கடந்த புதன் கிழமை அவுஸ்ரேலியா அணிக்கெதிராக நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சார்பில் மஹேந்திர சிங் டோனி சிறப்பான சதமொன்றினைப் பெற்று இந்திய அணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். அந்தப் போட்டியில் 124 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒரு அணியின் தலைவர், அவுஸ்ரேலியா அணிக்கெதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் இச்சாதனை சனத் ஜயசூரிய வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

டோனி பெற்ற சதத்துடன் இதுவரை அவுஸ்ரேலியா அணிக்கெதிராக, ஒரு அணியின் தலைவர் பெற்ற மொத்த சதங்கள் 10ஆகும். நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் அவுஸ்ரேலியா அணிக்கெதிராக 2 சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலியா அணிக்கெதிராக சதம் பெற்ற அணித்தலைவர் விபரங்கள்
1) கிளைவ் லொய்ட் (102) மே.தீவுகள், லோர்ட்ஸ், 21-6-1975
2) டேவிட் ஹோவர் (102) இங்கிலாந்து, லோர்ட்ஸ், 3-6-1985
3) மார்ட்டின் குரோ (100*) நியூசிலாந்து, ஒக்லண்ட், 22-2-1992
4) மைக் ஆதர்ட்டன் (113*) இங்கிலாந்து, ஓவல், 24-5-1997
5) ஸ்டீபன் பிளமிங் (116*) நியூசிலாந்து, மெல்பேர்ன், 21-1-1998
6) ஸ்டீபன் பிளமிங் (111*) நியூசிலாந்து, நேபியர், 12-2-1998
7) அலிஸ்ரேர் கம்பெல் (102) சிம்பாப்வே, அகமதாபாத், 3-4-1998
8) சனத் ஜயசூரிய (122) இலங்கை, சிட்னி, 9-1-2003
9) கிரேம் ஸ்மித் (119*) தென்னாபிரிக்கா, சென்சூரியன் பார்க், 26-2-2006
10) மஹேந்திர சிங் டோனி (124) இந்தியா, நாக்பூர்,28-10-2009


***

Wednesday, October 28, 2009

கிரிக்கெட் சுவையான சாதனை தகவல்கள்# 06

 1974-75 பருவகாலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் வெங்கட் ராகவன் அணித்தலைவராக செயற்பட்டார். ஆனால் அவர், அடுத்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 12வது வீரராகவே அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே எந்த ஒரு அணியும் 300 ஓட்டங்களை பெறவில்லை.

 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதினை பெற்ற பெருமைக்குரிய ஒரே வீரர் இந்திய அணியின் சவ்ரவ் கங்குலி.

 முதலாவது சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய அணிகள் அவுஸ்ரேலியா எதிர் நியூசிலாந்து – 2005

 1964ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு முதல்தர டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ரயில்வே அணியானது டேரா இஸ்மாயில் கான் அணியினை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 851 ஓட்டங்களாலும் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ரயில்வே அணியானது 910/6 பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி டேரா இஸ்மாயில் கான் அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது அவ்வணி பெற்ற ஓட்டங்கள் முறையே 32 & 27.

 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த சிக்கனமான பந்துவீச்சு ஓவராக கருதப்படுவது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் பில் சிம்மன்ஸ் வீசியது. 10-8-3-4 ,Vs பாகிஸ்தான்



***

Sunday, October 25, 2009

அணுகுண்டு வெடிக்கும் போது சத்தம் இருக்குமா?

1. அணுகுண்டு வெடிக்கும் போது சத்தம் இருக்குமா? இருக்காது.

2. டிஸ்னி வேல்ட்டானது உலகிலுள்ள 5 சிறிய நாடுகளை விடப் பெரியதாகும்.

3. ஹொண்டுராஸ் நாட்டில் மே-ஜுலை மாதங்களுக்கிடையில் வித்தியாசமான மழை பொழிகின்றதாம். என்ன மழை தெரியுமா? மீன் மழை......

4. இலக்கம் நான்கினை யப்பான் நாட்டவர்கள் துரதிஸ்டமானதாகக் கருதுகின்றார்கள். காரணம் யாதெனில் நான்கு என்பதற்கான யப்பான் மொழி உச்சரிப்பானது “இறப்பு” என்ற சொல்லுக்கான உச்சரிப்பினை ஒத்ததாகும் என்பதனாலாகும்.

5. நுளம்புகள் 47 பற்களைக் கொண்டுள்ளனவாம்.

6. நத்தைகள் அதனுடைய பாதங்களினா
லேயே சுவாசிக்கின்றன.

7. தீக்கோழியினுடைய கண்கள் அதனுடைய மூளையினை விடப் பெரியதாகுமாம்.

8. வண்ணத்துப் பூச்சிகள் அதனுடைய பாதங்களினாலேயே சுவையினை உணர்கின்றனவாம்.

9. புராதன சீனா நாட்டில் மருத்துவர்கள் தம்மை நாடிவரும் நோயாளர்களின் வியாதிகளை குணப்படுத்தினால் மாத்திரமே அதற்கான கட்டணத்தை அறவிட்டனராம். மாறாக வியாதிகளை குணப்படுத்தத் தவறினால் மருத்துவர்கள், நோயாளர்களுக்கு கட்டணம் செலுத்தினராம்.



10. ஹம்மிங் வேர்ட் பறவையினுடைய இதயமானது நிமிடத்துக்கு 1260 முறைகள் துடிக்கின்றன.


***

Thursday, October 22, 2009

இந்தியா முதன்மைநிலையில்..........# 01



உலகளாவியரீதியில் நீரிழிவு நோயினால் அதிக எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா முதன்மை நிலையில் உள்ளதுடன் 2030ம் ஆண்டளவில் நாட்டுமக்கள் சனத்தொகையில் 9%மான மக்கள் தொகையினர் நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் சர்வதேச நீரிழிவு சம்மேளனம் (IDF) எச்சரிக்கை செய்தியினை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் 50.8 மில்லியன் தொகையானவர்கள் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சீனாவில் 43.2 மில்லியன் தொகையானவர்கள் நீரிழிவு நோயினுடைய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை கனடா, மொன்றியல் நகரில் நடைபெற்ற IDF 20வது வருடாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அமெரிக்காவில் 26.8 மில்லியன் மக்களும்,ரஸ்யாவில் 9.6 மில்லியன் மக்களும்,பிரேசிலில் 7.6 மில்லியன் மக்களும்,ஜேர்மனியில் 7.5 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IDF அறிக்கையின் பிரகாரம் ஆசியாவிலே, பாகிஸ்தானில் 7.1 மில்லியன் மக்களும், யப்பானில் 7.1 மில்லியன் மக்களும், இந்தோனேசியாவில் 7 மில்லியன் மக்களும் நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவியரீதியில் 258மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உலக சனத்தொகையில் 7% என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

IDF அறிக்கையின் பிரகாரம் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் நீரிழிவு நோயானது அபிவிருத்தியடைந்துவருகின்ற விவகாரமாக மாற்றமடைந்து வருவதுடன், மக்களின் சுகாதார நிலை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.


மேலும் நீரிழிவு நோயின் காரணமாக 2010ம் ஆண்டளவில் உலக பொருளாதாரத்துக்கு 376 பில்லியன் டொலர் செலவு ஏற்படலாம் என்பதுடன், இது மொத்த உலக சுகாதார பராமரிப்பு செலவீனங்களில் 11.6% எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டளவில் இது 490 பில்லியன் டொலர் செலவீனமாக அதிகரிக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 80%க்கும் அதிகமானது உலக செல்வந்த நாடுகளில் நீரிழிவு நோய் தொடர்பில் செலவிடப்படும். ஏழ்மை நாடுகளில் 70%க்கும் அதிகமானவர்கள் தற்சமயம் நீரிழிவுடன் வாழ்வதாக IDF அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த அறிக்கையின் பிரகாரம் இந்தியா தற்சமயம் நீரிழிவு நோய் தொடர்பில் 2.8 பில்லியன் டொலர்களினையே செலவிடுகின்றது, இது உலகளாவிய மொத்த செலவீனத்தில் 1% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


***

Wednesday, October 21, 2009

20வயதிற்கு கீழ்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட சாம்பியனாகியது கானா


கடந்த 16ம் திகதி எகிப்தில் நடைபெற்ற 20வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரேசில் அணியினை வீழ்த்தி கானா அணி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. இதன் மூலம் 20வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை பெற்ற முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையினையும் கானா நாடு பெற்றுக்கொண்டது.

கெய்ரோ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் நிலையில் இருந்தமையால் தண்டனை உதை மூலம் போட்டியின் முடிவானது தீர்மானிக்கப்பட்டது. இதில் கானா அணியானது 4-3 என்ற கோல் கணக்கில் கானா அணியானது பிரேசில் அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது.

இந்த இறுதிப் போட்டியில் கானா அணியின் சார்பில் இறுதில் 10 பேரே விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 1993ம் ஆண்டு பிரேசில் நாட்டுடனும், 2001ம் ஆண்டு ஆர்ஜென்ரினா நாட்டுடனும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கானா அணி தோல்வியினை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

***

Monday, October 19, 2009

முட்டைப் பாலம்


1610ம் ஆண்டு பெரு, லிமாவில் ஒரு பாலம் கட்டப்பட்டதாம். அந்தப் பாலமானது சுண்ணாம்புச்சாந்துடன் நீரினைச் சேர்ந்து கட்டப்படவில்லை. நீருக்குப் பதிலாக 10000 முட்டைகளின் வெள்ளைக் கருக்களை சேர்த்தே அந்தப் பாலமானது கட்டப்பட்டதாம்.இதனால் இப்பாலமானது முட்டைகளின் பாலம் என அழைக்கப்படுகின்றது. இப்பாலமானது இன்றுவரை நிலைத்துக் காணப்படுகின்றதாம்.
***

Friday, October 16, 2009

உலகினை அச்சுறுத்தும் உணவு நெருக்கடி


ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதியானது உலக உணவு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகளாவியரீதியில் இன்று கட்டுக்கடங்காத உணவு விலைகள்,அதிகரித்த சக்தி பாவனை, நீர் அருமை ஆகியவற்றின் காரணமாக உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தொகையினர் பசிக் கொடுமைக்கு ஆளாக நேரிடுமென அபா எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் இன்று உலகினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற பொருளாதார நெருக்கடிகள் , காலநிலை மாற்றம் , சக்தி மற்றும் நீர் அருமை ஆகிய விடயங்களில் உலகத் தலைவர்கள் காலபேதம் பாராமல் பணியாற்ற வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

உலக சனத்தொகையானது 2.5 பில்லியனிருந்து 9.2 பில்லியனாக 2050ம் ஆண்டளவில் மாற்றமடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகத்தில் உணவுக்கான கேள்வியானது மேலும் மேலும் அதிகரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்வுகூறலின் பிரகாரம் காலநிலை மாற்றங்களின் பிரகாரம் உலகளாவியரீதியில் 40 மில்லியனிலிருந்து 170 மில்லியனாக போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையானது அதிகரிக்கலாம் என்கின்றது.

ஏழ்மை நாடுகளானது விவசாயத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொள்வதுடன் பெண்களையும், சிற்றளவு உற்பத்தியாளர்களையும் அதிகளவில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் நெருக்கடிக்குள்ளாகின்ற மக்களுக்காக சமூக பாதுகாப்பு அளவீடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக காசுக் கொடுப்பனவுகள் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

செல்வந்த நாடுகள் , அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் நீண்ட கால நோக்கில் விவசாயத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதுடன் காலநிலை மாற்ற ஒப்புவமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

என்ன கொடுமை... இந்த நிலைமை யாருக்கும் வரலாமா... , மனித மனங்கள் மாற வேண்டும்


உலக உணவு நெருக்கடி தொடர்பான புள்ளிவிபரங்கள்
உலக சனத்தொகையில் இன்று 6 பேரில் ஒருவர் பசியால் வாடுகின்றனர். இது அண்ணளவாக 1 பில்லியன் மக்கள் தொகை ஆகும்.

உலகளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் நிகழ்கின்ற 50% - 60 % எல்லா குழந்தைப் பருவ மரணங்களும் பசியுடன் தொடர்புபடுகின்றன.

ஏழை மக்கள் தமது வருமானத்தில் 80%க்கும் அதிகமான தொகையினை நிலைகுலையச் செய்கின்ற விலைகளினால் உணவுகளிலேயே செலவிடுகின்றனர்.

விவசாயத் துறையில் வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகள் செலவிடப்படுவதானது 1980களில் 25% ஆக இருந்தது , இன்று அது 3% ஆகக் குறைவடைந்துவிட்டது.

(தரவுகள்-Oxfam)

உலகளாவிய பசிச் சுட்டெண் (Global Hunger Index)
உலகளாவியரீதியில் அதிகளவில் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளாக புருண்டி,சாட், கொங்கோ குடியரசு, எதித்ரியா, எதியோப்பியா, சியராலியோன், , உட்பட 29நாடுகள் விளங்குகின்றன. மேற்கூறிய அனைத்து நாடுகளும் பாரியளவில் உள் நாட்டு நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


+++

Thursday, October 15, 2009

மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம்


இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான மஹேந்திர சிங் டோனி தான் வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஆடம்பர “ஹம்மர் H2 ”(SUV) காரை பதிவு செய்வதற்கு காலதாமதமாகியதால் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மஹேந்திர சிங் டோனி தனது காரினை பதிவு செய்வதற்கு காலதாமதமாகியதால் இந்திய ரூபாய் 100 அபராதம் கடந்த 7ம் திகதி விதிக்கப்பட்டதாக மாநில போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒருவர் கார் வாங்கி ஒருவார காலத்திற்குள் அதனை பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். டோனி தனது காரினை பதிவு செய்வதற்கு சமர்ப்பித்த விண்ணப்பமானது பூரணமாக பூர்த்தி செய்யப்படவில்லை என அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட அபராதத்திற்குப் பின்னர் பதிவு செய்யப்படாத நான்கு சக்கர வாகனத்துடன் வாகன உரிமையாளர் பிடிபட்டால் மோட்டார் வாகன சட்ட்த்தின் கீழ் இந்திய ரூபாய் 4500 அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்குடன் டோனி கடந்த ஜூலை 30ம் திகதி லக்னோவிலிருந்து ரஞ்சி நோக்கி “ஹம்மர் H2” வாகனத்தில் பயணம் செய்தார்.

கிரிக்கெட் வீரர்களில் மஹேந்திர சிங் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களே ஆடம்பரஹம்மர் H2” வாகனத்தினை தமது உடமையாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வருடங்களுக்கு முன்னரும் டோனி தனது காரில் பயணம் செய்த போது போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக அபராத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல வாகனபதிவு எண் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர “ஹம்மர் H2 ” வாகனத்தை சாலையில் ஓட்டியதற்காக ஹர்பஜன் சிங் அபராதத்திற்கு உள்ளாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஆகஸ்ட் மாதம்)


***

Tuesday, October 13, 2009

உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள்-2009

ஹாவார்ட் பல்கலைக்கழகம்

உலகளாவிய ரீதியில் கல்விசார் மற்றும் பட்டதாரி பணியாளர்களிடையே மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 6வது தடவையாக உயர்கல்வி தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 100 பல்கலைக்கழகங்களுக்குள் ஐரோப்பாவின் 39 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த வருடத்தில் 36 இடம்பெற்றிருந்தன. மேலும் தரப்படுத்தலில் ஆசியாவின் பல்கலைக்கழகங்கள் 14இலிருந்து 16ஆக அதிகரித்துள்ளன.

முதல் 100 பல்கலைக்கழகங்களுக்குள் வடஅமெரிக்க பல்கலைக்கழகங்கள் 42இலிருந்து 36ஆக வீழ்ச்சியடைந்துள்ளன.

தரப்படுத்தலில் ஹாவார்ட் பல்கலைக்கழகம் மாற்றமின்றி முதல் நிலையை தக்கவைத்துள்ளது. அதேசமயம் கேம்பிரிட்ஜ் 3ம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒக்ஸ்போர்ட் 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்துக்கு சரிவடைந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி 3இடங்கள் முன்னேறி 7ம் இடத்திலிருந்து 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தரப்படுத்தலில் ஆசியாவில் டோக்கியோ பல்கலைக்கழகம் 22ம் இடத்தில் உயர்ந்த நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. கொங்கொங் பல்கலைக்கழகம் 2 இடங்கள் முன்னேறி 26ம் நிலையிலிருந்து 24ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகளவில் சிறந்த முதல் 10 பல்கலைக்கழகங்கள்-2009
1) ஹாவார்ட் பல்கலைக்கழகம்
2) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
3) யேல் பல்கழைக்கழகம்

4) லண்டன் பல்கலைக்கழக கல்லூரி
5) லண்டன் இம்பீரியல் கல்லூரி

5) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
7) சிக்காக்கோ பல்கலைக்கழகம்
8) பிரின்ஸ்ரொன் பல்கலைக்கழகம்
9) மஸ்ஸாசுசெட்ஸ் தொழில்னுட்ப நிறுவகம்

10) கலிபோர்னியா தொழில்னுட்ப
நிறுவகம்


***

Monday, October 12, 2009

உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் # 02

1) பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளின் ஒரு தடவை ஒரு போட்டியில் 3ம் இடத்தையே பெற்றுக் கொண்டாராம். என்ன போட்டி தெரியுமா? சார்ளி சாப்ளினை ஒத்த ஒருவரை தெரிவு செய்யும் போட்டியிலாம். ( நம்மமுடிகின்றதா??? )





2) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லையாம். காரணம் என்னவெனில் அவர்கள் இருவரும் காது கேளாதவர்களாம்.

3) அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.

4) உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா? “Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso” (என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமா???)

5) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.

6) சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time's சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.

7) ஆங்கிலத்தில் “Assassination” (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.


***

Friday, October 9, 2009

இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்

1) ரவீந்திரநாத் தாகூர்
இந்தியாவின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.


2) சந்திரசேகர வெங்கட் ராமன்
தமிழ்நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன்,ல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானதுராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.
நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.


3) ஹர்கோவிந்த் கொரானா
டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில் (தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



4) அன்னை திரேசா
அல்பேனியாவை பிறப்பிடமாகக் கொண்ட அன்னை திரேசா கிறிஸ் கன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து தனது முதல் ஆசிரியப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது 20வருட கல்கத்தா ஆசிரியப் பணி அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின் வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியா முழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினை உணர்ந் நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னை ஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார்.



5) சுப்பிரமணியன் சந்திரசேகர்
மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனது வேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



6) அமெர்த்தியா சென்
பேராசிரியர் அமெர்த்தியா சென் பொருளாதார நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்த விரிவுரையாளருமாவார். பொருளாதாரக் கொள்கைகள்-வறுமை, ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன் தொடர்பான பகுதியில் சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்
1952ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர் அமெரிக்காவின் ஒகியோ பல்லைக்கழகத்தில் 1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப் பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ள எம்.ர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக கடமையாற்றுகின்றார்.

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


***
Blog Widget by LinkWithin