Friday, September 4, 2009

டானியல் விற்றோரி & No.8 சாதனை

அண்மையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் டானியல் விற்றோரி 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 140 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு முயன்றும் வெற்றி பெறமுடியாமல் போனது தெரிந்த விடயம். ஆனாலும் அவர் நிகழ்த்திய சாதனை மறக்கமுடியாதது.டெஸ்ட் போட்டி ஒன்றில் 4ம் இன்னிங்சில் 8ம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட வந்து அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரராக அவுஸ்ரேலியாவின் மிச்செல் ஜோன்சன் விளங்கினார்.ஜோன்சன் ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களை இந்த பருவ காலத்தில் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

டானியல் விற்றோரி


இதுவரை 10 துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே டெஸ்ட் போட்டி ஒன்றில் 4ம் இன்னிங்சில் 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து சதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு இன்னிங்சிலும் 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக பாகிஸ்தானைச் சேர்ந்த வசிம் அக்ரம் விளங்குகின்றார். வசிம் அக்ரம் 1996-97 பருவ காலத்தில் சிம்பாப்வேயில் நடைபெற்ற போட்டியில் 257 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து இரட்டை சதம் பெற்ற வீரர்கள் இரண்டு பேர் மாத்திரமே.இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வசிம் அக்ரம் மற்றும் இம்தியாஸ் அஹ்மெட் ஆகிய வீரர்கள்.

டானியல் விற்றோரி 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து இதுவரை 3 சதங்களைப் பெற்றுள்ளார்.

***

No comments:

Blog Widget by LinkWithin