Thursday, December 27, 2012

விலைமிகுந்த புனுகுப்பூனை எச்சம்.....!

சுவாரஷ்சியமான சில அறிவியல் தகவல்கள் உங்களுக்காக......


۞ உலகில், சாதாரணமான கோப்பி விதையினை விடவும் நல்ல கோப்பி விதைதான் அதிக விலையானது. நல்ல கோப்பி விதையை எப்படி கண்டுபிடிக்கின்றார்கள்.?


புனுகுப்பூனை என்ற ஒருவகைப் பூனை கோப்பித்  தோட்டத்தில்தான் இருக்கும். புனுகுப் பூனை சாப்பிட்டு எச்சமாகப் போட்ட கோப்பி விதைதான் நல்ல கோப்பிக் விதையாம். ஏனென்றால் இருப்பதிலேயே நல்ல கோப்பி பழத்தைத்தான் புனுகுப் பூனை சாப்பிடுமாம்.

அதிகளவில் இந்தோனேசிய நாட்டில்தான் இந்தவகையான "கொபி லுவக்" கோப்பி விதைகள் கிடைக்கின்றதாம்.


۞ குளவிகளில் ஒருவகை உண்டு. இது பூமியில் துளையிட்டு முட்டைகளை இடுகின்றது. பிறகு ஒரு வெட்டுக்கிளியை தேடிப்பிடிக்கின்றது. அதனைக் கொல்லாமல் வகையான இடத்தில் கொட்டி சுயநினைவை இழக்கச்செய்கிறது. அதனைத் தனது துளைக்குள் கொண்டு வந்து போட்டுத் துளையை அடைத்து விடுகிறது. உள்ளே இருக்கும் முட்டைகள் பொரித்து குளவிக்குஞ்சுகள் வெளி வருகின்றன. அவை உரிய பருவமடைந்து வெளியேறும்வரை உண்ண உணவு வேண்டும். அதற்காக இந்த வெட்டுக்கிளி பயன்படுகின்றது.

இறந்த பிராணிகளின் மாமிசம் உதவாது. அப்படிப்பட்ட மாமிசத்தைத் தின்றால் இளம் குளவிக்குஞ்சுகள் இறந்துவிடும். அதனால்தான் வெட்டுக்கிளியை உயிரிழக்காமல் உணர்வை மட்டும் இழக்கச்செய்கிறது தாய்க்குளவி.

۞ சில உயிரினங்கள் தங்களுடைய இனத்தைப் பெருக்க தன்னையே அழித்துக்கொள்கின்றன.

►► குஞ்சுகள் பொரித்த உடனே நண்டு இறந்துவிடும். நண்டின் வயிற்றுப்பகுதி வெடித்துதான் அதன் குஞ்சுகள் வெளிவருகின்றன.

►◄ மூங்கில் அதன் அருகில் வேறொரு மூங்கில் வளர முளை விடத் தொடங்கியதும் தாய் மூங்கில் பழுத்துப் பட்டுப் போய்விடும்.


 ***

Monday, December 24, 2012

கிரிக்கெட் சகாப்தம் | சச்சின் டெண்டுல்கர்


கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகிய இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றுக்கொள்வதாக கடந்த டிசம்பர் 23ம் திகதி அறிவித்தார்.



சச்சின் டெண்டுல்கர், 463 ஒருநாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் 44.83 என்கின்ற சராசரியில், 86.42 என்கின்ற ஸ்ரைக் ஓட்டவிகிதத்தில் துடுப்பெடுத்தாடி 18,426 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார்.

டிசம்பர் 18,1989ல் பாகிஸ்தான் அணிக்கெதிராக குஜரன்வாலாவில் நடைபெற்ற ஒருநாள் அறிமுகம்பெற்ற சச்சின் டெண்டுல்கர் அப்போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



சச்சின் டெண்டுல்கர் தனது முதலாவது ஒரு நாள் சதத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு 79 போட்டிகளை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

"லிட்டில் மாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் சார்பாக விளையாடிய 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 200 போட்டிகளில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சச்சின் டெண்டுல்கர்.....
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு.!


◄► அதிக ஆண்டுகள் விளையாடியவர்  22 ஆண்டுகள்  & 91 நாட்கள் (டிசம்பர் 18,1989 மார்ச் 18,2012)

◄► அதிகூடிய மொத்த ஓட்டங்கள் 18,426

◄► அதிகூடிய சதங்கள் 49

◄► அதிகூடிய அரைச்சதங்கள் 96

◄► அதிகூடிய போட்டிகள் 463

◄► அதிகூடிய பந்துகளை எதிர்கொண்டவர் 21,392

◄► அதிகூடிய ஆட்டநாயகன் விருதுகள் 62

◄► அதிகூடிய தொடர் ஆட்டநாயகன் விருதுகள் 15

◄► ஒரு ஆண்டில் சதங்கள் 09 (1998)

◄► ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் 1,894 (1998)

◄► அதிகூடிய 04 ஓட்டங்கள் 2,016

◄► போட்டியொன்றில் அதிகூடிய 04 ஓட்டங்கள் 25 (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)

◄► இந்திய அணியின் சார்பாக அதிக போட்டிகள் தொடர்ச்சியாக விளையாடியவர் 185 (ஏப்ரல் 25,1990 ஏப்ரல் 24, 1998)

◄► அதிகுறைந்த வயதில் அறிமுகமாகிய இந்திய வீரர் 16  ஆண்டுகள்   & 238 நாட்கள்

◄► ஒரு அணிக்கெதிராக அதிக சதங்கள் 09 எதிர் அவுஸ்திரேலியா

◄► 90 ஓட்டங்களில் அதிக தடவைகள் ஆட்டமிழப்பு 18

◄► 10000 – 18000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர்

◄► இரட்டைச் சதம் பெற்ற முதல் வீரர் 200* எதிர் தென்னாபிரிக்கா (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)

◄► அதிகூடிய 150 + சதங்கள் 05

◄► ஒரு ஆண்டில் அதிகூடிய 1000+ ஓட்டங்கள் 07 தடவைகள் (1994, 1996, 1997, 1998, 2000, 2003, 2007)

◄► ராகுல் ராவிட்டுடன் இணைந்து அதிகூடிய இணைப்பாட்ட(02வது விக்கட்) ஓட்டத்தில் பங்காற்றியவர் 331 எதிர் நியூசிலாந்து (நவம்பர் 08, 1999 @ ஹைதராபாத்)

◄► உலகில் அதிக மைதானங்களில் விளையாடியவர் 90 மைதானங்கள்

◄► அதிகூடிய சத இணைப்பாட்டங்கள் 21 (சச்சின் டெண்டுல்கர் & சவ்ரவ் கங்குலி)

◄► அதிகூடிய தடவைகள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கியவர் 340 போட்டிகள்

                                
சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு.!


◄► அதிகூடிய மொத்த ஓட்டங்கள் 2, 278

◄► அதிகூடிய சதங்கள் 06

◄► அதிகூடிய அரைச்சதங்கள் 15

◄► தொடரொன்றில் அதிக ஓட்டங்கள் 673 (11 போட்டிகள், 2003)

◄► அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொண்டிங்கினை(46) அடுத்து அதிகூடிய போட்டிகளில் விளையாடியவர் 45

◄► அதிக உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடிவர் 06 (1992 2011) & பாகிஸ்தான் அணியின் ஜாவிட் மியண்டாட் (1975 1996)

***

Saturday, December 22, 2012

இலங்கை & மீன் மழை | ஹொண்டுராஸ் & மீன் மழைத் திருவிழா...!


அண்மைய நாட்களில் இலங்கையில் மீன் மழை, இறால் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், இதற்கு முன்னர் மழையுடன் உயிரினங்கள் வீழ்ந்த பல அரிய நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.    



முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமன் எழுத்தாளர் "ப்லினி த எல்டர்"  தனது நாவலில் மழைத்துளிகளுடன் தவளைகளும், மீன்களும் வீழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, வேல்ஸ்(2004), பிலிப்பைன்ஸ், இந்தியாவின் இரண்டு பிராந்தியங்களில் மீன் மழை பெய்ததுடன், ஜப்பான், சேர்பியா(2005), இங்கிலாந்து(1998), ஹங்கேரி ஆகிய நாடுகளில் தவளை மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானின் இஷிகவா பிராந்தியத்தில் மழையுடன் நூற்றுக்கணக்கான இறந்த தவளை வாற்பேய்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலிய வட பிராந்திய சிறிய நகரான லஜாமவ்வில் 2010ம் ஆண்டு பெப்ரவரி 24, 25ம் திகதிகளில் மீன் மழை பெய்ததாகவும் இதே நகரில் கடந்த 1974, 2004ம் ஆண்டுகளில் மீன் மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

மழையுடன் உயிரினங்கள் வீழ்கின்ற காரணத்தினை நோக்குகின்றபோது, திடீரென வீசுகின்ற சுழற் காற்றுக்களில் அகப்பட்டுக்கொள்கின்ற மீன்கள், தவளைகள், சிலந்திகள் மற்றும் பிற உயிரிகள் வளிமண்டலத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. பின்னர், மழை பெய்கின்றபோது அவை மீண்டும் மழையுடன் நிலத்தினை அடைகின்றன என்கின்றனர் அறிவியலாளர்கள்.       



மழை எவ்வாறு தோற்றம்பெறுகின்றது. 
"கடலிலும், குளத்திலும், நீர்நிலைகளிலும், நிலத்திலும் உள்ள நீர் சூரிய வெப்பத்தாற் சூடாக்கப்பட்டு நீராவியாக வளிமண்டலத்திற்கு கிளம்புகின்றது. அது மேலே சென்றதும் குளிர்ந்து ஒடுங்கி முகிலாக மாறுகின்றது. முகில்கள் குளிர்ந்ததும் மழை என்ற உருவில் பூமியை வந்தடைகின்றது."


வருடாந்தம் மீன் மழை பெய்யும் நாடு...

ஆம்... மத்திய அமெரிக்க நாடாகிய "ஹொண்டுராஸ்" நாட்டின் "யோரோ" கிராமத்தில் வருடாந்தம் மீன் மழை பெய்கின்றது.  நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த மீன் மழை பெய்கின்றதாம். ஆண்டில் பொதுவாக மே, ஜூலை மாதங்களுக்கிடையில் இந்த மீன் மழை பெய்கின்றது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 2 3 மணித்தியாலங்கள் நீடிக்கின்ற மழை நின்றபின்னர் நிலத்தில் ஆயிரக்கணக்கான உயிருள்ள மீன்கள் காணப்படுமாம். அதனை மக்கள் எடுத்துச் சென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த மீன் ஏனைய மீன்களினை விடவும் சுவை மிகுந்ததாம் என்கின்றனர்.  


குறிப்பாக, மீன் மழையின்போது விழுகின்ற மீன்கள் அண்ணளவாக 6 அங்குலங்கள் நீளமுடையதாகவும், கண் பார்வையற்றதாகவும் இருக்கின்றன. இந்த வகை மீன் இனங்கள் அந்த நாட்டிலுள்ள எந்தவொரு ஏரியிலோ, குளத்திலோ காணப்படாதவையாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் இனங்கள் நிலக்கீழ் ஆறுகளில் உள்ளவையென நம்பப்படுகின்றது. சூரிய ஒளி இந்த மீனினங்களுக்கு கிடைக்காமையினால் இவை பார்வையற்றிருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால், ஹொண்டுராஸ்  நாட்டு மக்கள் இதனை கடவுளின் அற்புதம் என்றே நம்புகின்றனர். அதாவது, 1856ம் ஆண்டு ஹொண்டுராஸ் நாட்டிற்கு விஜயம்செய்த ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த  பாதிரியார் மானுவெல் டீ ஜீசஸ் சுவிரனா  அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் வசித்த ஏழைகளின் நிலையினைக் கண்ணுற்று மக்களுக்கு உணவு வழங்குமாறுகோரி 03 பகல்களும், 03 இரவுகளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும், பிரார்த்தனை முடிவில் பலத்த காற்றுடன் மழை மீன்களை கொண்டுவந்ததாம் என்கின்றனர்.  


1998ம் ஆண்டு முதல் யோரோ கிராம மக்கள் மீன் மழை திருவிழாவினை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

எது எப்படியோ விஞ்ஞானத்திற்கு ஹொண்டுராஸ் நாட்டில் பெய்யும் மீன் மழை புரியாத புதிராகவே உள்ளது.

***
Blog Widget by LinkWithin