Saturday, December 22, 2012

இலங்கை & மீன் மழை | ஹொண்டுராஸ் & மீன் மழைத் திருவிழா...!


அண்மைய நாட்களில் இலங்கையில் மீன் மழை, இறால் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், இதற்கு முன்னர் மழையுடன் உயிரினங்கள் வீழ்ந்த பல அரிய நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.    



முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமன் எழுத்தாளர் "ப்லினி த எல்டர்"  தனது நாவலில் மழைத்துளிகளுடன் தவளைகளும், மீன்களும் வீழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, வேல்ஸ்(2004), பிலிப்பைன்ஸ், இந்தியாவின் இரண்டு பிராந்தியங்களில் மீன் மழை பெய்ததுடன், ஜப்பான், சேர்பியா(2005), இங்கிலாந்து(1998), ஹங்கேரி ஆகிய நாடுகளில் தவளை மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானின் இஷிகவா பிராந்தியத்தில் மழையுடன் நூற்றுக்கணக்கான இறந்த தவளை வாற்பேய்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலிய வட பிராந்திய சிறிய நகரான லஜாமவ்வில் 2010ம் ஆண்டு பெப்ரவரி 24, 25ம் திகதிகளில் மீன் மழை பெய்ததாகவும் இதே நகரில் கடந்த 1974, 2004ம் ஆண்டுகளில் மீன் மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

மழையுடன் உயிரினங்கள் வீழ்கின்ற காரணத்தினை நோக்குகின்றபோது, திடீரென வீசுகின்ற சுழற் காற்றுக்களில் அகப்பட்டுக்கொள்கின்ற மீன்கள், தவளைகள், சிலந்திகள் மற்றும் பிற உயிரிகள் வளிமண்டலத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. பின்னர், மழை பெய்கின்றபோது அவை மீண்டும் மழையுடன் நிலத்தினை அடைகின்றன என்கின்றனர் அறிவியலாளர்கள்.       



மழை எவ்வாறு தோற்றம்பெறுகின்றது. 
"கடலிலும், குளத்திலும், நீர்நிலைகளிலும், நிலத்திலும் உள்ள நீர் சூரிய வெப்பத்தாற் சூடாக்கப்பட்டு நீராவியாக வளிமண்டலத்திற்கு கிளம்புகின்றது. அது மேலே சென்றதும் குளிர்ந்து ஒடுங்கி முகிலாக மாறுகின்றது. முகில்கள் குளிர்ந்ததும் மழை என்ற உருவில் பூமியை வந்தடைகின்றது."


வருடாந்தம் மீன் மழை பெய்யும் நாடு...

ஆம்... மத்திய அமெரிக்க நாடாகிய "ஹொண்டுராஸ்" நாட்டின் "யோரோ" கிராமத்தில் வருடாந்தம் மீன் மழை பெய்கின்றது.  நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த மீன் மழை பெய்கின்றதாம். ஆண்டில் பொதுவாக மே, ஜூலை மாதங்களுக்கிடையில் இந்த மீன் மழை பெய்கின்றது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 2 3 மணித்தியாலங்கள் நீடிக்கின்ற மழை நின்றபின்னர் நிலத்தில் ஆயிரக்கணக்கான உயிருள்ள மீன்கள் காணப்படுமாம். அதனை மக்கள் எடுத்துச் சென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த மீன் ஏனைய மீன்களினை விடவும் சுவை மிகுந்ததாம் என்கின்றனர்.  


குறிப்பாக, மீன் மழையின்போது விழுகின்ற மீன்கள் அண்ணளவாக 6 அங்குலங்கள் நீளமுடையதாகவும், கண் பார்வையற்றதாகவும் இருக்கின்றன. இந்த வகை மீன் இனங்கள் அந்த நாட்டிலுள்ள எந்தவொரு ஏரியிலோ, குளத்திலோ காணப்படாதவையாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் இனங்கள் நிலக்கீழ் ஆறுகளில் உள்ளவையென நம்பப்படுகின்றது. சூரிய ஒளி இந்த மீனினங்களுக்கு கிடைக்காமையினால் இவை பார்வையற்றிருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால், ஹொண்டுராஸ்  நாட்டு மக்கள் இதனை கடவுளின் அற்புதம் என்றே நம்புகின்றனர். அதாவது, 1856ம் ஆண்டு ஹொண்டுராஸ் நாட்டிற்கு விஜயம்செய்த ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த  பாதிரியார் மானுவெல் டீ ஜீசஸ் சுவிரனா  அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் வசித்த ஏழைகளின் நிலையினைக் கண்ணுற்று மக்களுக்கு உணவு வழங்குமாறுகோரி 03 பகல்களும், 03 இரவுகளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும், பிரார்த்தனை முடிவில் பலத்த காற்றுடன் மழை மீன்களை கொண்டுவந்ததாம் என்கின்றனர்.  


1998ம் ஆண்டு முதல் யோரோ கிராம மக்கள் மீன் மழை திருவிழாவினை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

எது எப்படியோ விஞ்ஞானத்திற்கு ஹொண்டுராஸ் நாட்டில் பெய்யும் மீன் மழை புரியாத புதிராகவே உள்ளது.

***

No comments:

Blog Widget by LinkWithin