Monday, October 29, 2012

புராதன இலங்கையை சின்னாபின்னமாக்கிய பூகம்பம்......


அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வுத்தகவல்களின் பிரகாரம், பூகம்ப அபாய எல்லை, இலங்கையினை நெருங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறிப்பாக இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு அப்பால் இந்தோ ஆஸி புவித்தட்டானது 500 700 கிலோமீற்றர் பிளவடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக புதியதொரு  நிலத்தட்டு தோற்றம்பெற்றிருப்பதாகவும் இதனால் இலங்கைக்கு பாரியளவிலான பூகம்ப அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பூகோளவியல் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1615ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் காரணமாக மிகப்பெரும் உயிரழிவு ஏற்பட்டிருந்தது. அதைப்போன்ற பூகம்பமே வரக்கூடும் என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.

உங்களுக்குத் தெரியுமா?......
போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் இலங்கையினை பாரியளவிலான பூகம்பம் தாக்கி சின்னாபின்னமாக்கியது.



ஆம்...! 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் மாலை வேளை இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தில் 6.5 ரிச்டர் என மதிப்பிடப்பட்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 200இற்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்ததுடன், 2000 இற்கும் அதிகமான மக்களும் பலியானதாகவும் வரலாற்றுத்தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.  விசேடமாக, கொழும்பு கோட்டைப் பிராந்தியமானது இப்பூகம்பத்தின் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பூகம்பத்தின் காரணமாக கொழும்பு கோட்டைச்சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், கோட்டைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கற்பாலமும் இடிந்து வீழ்ந்ததாகவும், மேலும் நிலத்தில் பாரியளவிலான பிளவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிந்துகொள்வோம்....
Ø  1814ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மட்டக்களப்பின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, பாரியளவிலான கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதாம்.

குறிப்பு - கடந்த 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் நாள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, இதனை என்னால் உணரமுடிந்தது இன்றும் என் நினைவுகளில்  நிற்கின்றது.

***

Sunday, October 28, 2012

குடைகளின் வரலாறு......

மழைக்காலம் மெல்ல மெல்லதாக ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் குடைகள் அத்தியாவசியமாகிவிட்டது.  நாம் பயன்படுத்துகின்ற குடைகளின் வரலாற்றினை சற்று ஆராய்கின்றபோது.....


மக்கள், வெயிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்காகவே உலகத்தில் குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு 11ம் நூற்றாண்டளவில் சீனா நாட்டிலேயே குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு. மரக்கிளைகளினைப் பயன்படுத்தியே இந்தக் குடைகள் உருவாக்கப்பட்டன.
குடைகள், ஐரோப்பாவில் 15ம் நூற்றாண்டளவிலேயே பிரபல்யம் அடையத்தொடங்கின. குறிப்பாக பெண்கள் மத்தியிலாகும்.
17ம் நூற்றாண்டிற்கு பிற்பாடே ஆண்கள் மத்தியில் குடைகள் பிரபல்யம் அடையத்தொடங்கின.

பெயர் வரக் காரணம் என்ன?.....
குடையினை ஆங்கிலத்தில் "அம்பிரல்லா"(Umbrella) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......


"அம்ப்ரா" (Umbra) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்துதான் "அம்பிரல்லா" (Umbrella) என்ற சொல் உருவாகியது.  "அம்பிரல்லா" என்றால் நிழல் என்று அர்த்தம்.

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

உங்களுக்குத் தெரியுமா?.....


17ம் நூற்றாண்டளவில் ஐக்கிய ராச்சியத்தில் மழை தொடர்பிலான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. மழை தொடர்பாக முன்னறிவிப்பு செய்பவரின் கணிப்பு பிழைக்குமாயின் அவருக்கு தூக்குத் தண்டனைதான் முடிவு.

***

Sunday, October 21, 2012

உலக அப்பிள் தினம் → அக்டோபர் 21



அக்டோபர் மாதம் 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.

Ø  உலகளாவியரீதியில் 7500இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.



Ø  வாழைப்பழங்கள், தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.

Ø  கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

Ø  கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/ தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Ø  அப்பிள் மரங்கள், ஒரு அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.

Ø  அப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.

Ø  புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.

Ø  அப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

Ø  அப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"

Ø  அப்பிள் மரங்கள் 4 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.



Ø  தூய அப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.

Ø  அப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.

Ø   நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.

Ø  உலகில் அதிகளவில் அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.

Ø  ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும். 



Ø  "தினசரி ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவியரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.

***

Saturday, October 20, 2012

நீங்கள், தொலைக்காட்சி முன்னால் தவம் கிடப்பவரா?...

25 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் தொலைக்காட்சியினை ஒவ்வொரு மணித்தியாலம் பார்ப்பதன்மூலம் அவர்களின் ஆயுள் எதிர்பார்க்கை 22 நிமிடங்கள் குறைவடைகின்றதென அவுஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 




அதாவது, தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் உங்கள் ஆயுள் எதிர்பார்க்கையில் 4.8 ஆண்டுகள் குறைவடைகின்றதென அவுஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 6 மணித்தியாலங்கள் தொலக்காட்சி பார்ப்பவர்களினையும், தொலைக்காட்சி பார்க்காதவர்களினையும் மையமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நான்கு சூரியன்களைக்கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு....

ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புவியிலிருந்து 5000 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள கிரகம் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழமைக்கு மாறாக முதன்முறையாக 4 சூரியன்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
PH1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கிரகமானது புவியினை விடவும் 6.2 மடங்கு ஆரையினைக் கொண்டிருப்பதுடன் நெப்ரியுன் கிரகத்தினை விடவும் சற்று பெரியதாகும்.

இதற்கு முன்னர் இரண்டு சூரியன்களைக்கொண்ட ஆறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

***

Wednesday, October 17, 2012

உலகினை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு நெருக்கடியும், வறுமையும்...!

உலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 1979ம் ஆண்டு  இடம்பெற்ற  உணவு விவசாய அமையத்தின் மாநாட்டில், அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது. உலக உணவுப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தல், பசி, பட்டினி, போசணைக்குறைபாடு, வறுமை ஆகியவற்றிக்கெதிராக மக்களிடையே ஒற்றுமையினை பலப்படுத்துதல் ஆகியவற்றினை உலக உணவு தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதேவேளை உலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 17ம் திகதி வறுமையினை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாகக் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையானது மனித உரிமைக்கெதிரான வன்முறையாகவே நோக்கப்படுகின்றது. இத்தினமானது 1993ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.



ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 1பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியின் காரணமாக பாதிப்புற்றுள்ளனர்.
சனத்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள்,  வானிலையுடன் தொடர்புடைய பயிர் பிரச்சினைகள், நீர்வழங்கல் வீழ்ச்சி, எரிபொருள் விலை, தாவர எரிபொருட்கள் உற்பத்திக்கு உணவுப் பொருட்கள் பயன்படுத்தல்,  நிலப்பற்றாக்குறை ஆகிய காரணிகள் தற்போதைய உலக உணவு அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளன.
2050ம் ஆண்டளவில், உலக சனத்தொகையானது 6.8 பில்லியனிலிருந்து 9.1 பில்லியனாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எதிர்வருகின்ற ஆண்டுகளில் உலகில் பாரியளவிலான உணவு நெருக்கடி ஏற்படலாம் என ஐ. நா எச்சரிக்கை மணி அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


சில புள்ளிவிபரத்தகவல்கள்......
Ø    உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இதில் அதிகமானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

Ø    உலகில் பசி, பட்டினியுடன் வாழ்பவர்களில் 50% இற்கும் அதிகமானோர் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். மேலும் 46% இற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Ø    உலக உணவு விலை அதிகரிப்பானது அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் வாழுகின்ற ஏழை மக்களினையே பெரிதும் பாதிக்கின்றது. அவர்கள் தமது வருமானத்தில் 60 % - 80% ஆன பங்கினை உணவிலேயே செலவிடுகின்றனர்.

Ø    ஐ. நா தகவல்களின் பிரகாரம், வருடாந்தம் 25000 குழந்தைகள் பசி, மற்றும் பசியுடன் தொடர்புடைய நோய்களின் காரணமாக மரணிக்கின்றனர். அதாவது 5 செக்கன்களுக்கு 1 குழந்தை உலகளாவிய ரீதியில் மரணிக்கின்றது.

Ø    கடந்த 3 வருடங்களில் உலக உணவு விலையானது ஏறத்தாழ 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் 2007 ஏப்ரல் தொடக்கம் 2008 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் உலக உணவு விலையானது 80% ஆல் அதிகரித்துள்ளது.

Ø    ஐ. நா உணவு விவசாய அமையத்தின் தகவல்களின் பிரகாரம் (2010ம் ஆண்டு) உலகளாவியரீதியில் 925 மில்லியன் மக்கள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 98% ஆன பங்கினர் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளிலேயே வாழ்கின்றர்.

Ø    உலக மக்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானோர் குறைந்த வருமான மட்டத்தின்கீழ் வாழ்கின்றனர். உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்குகின்ற நாடுகள் தமது மக்களுக்கு தேவையான உணவினை உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யக்கூடிய இயலுமையினைக் கொண்டிருக்கவில்லை.

Ø    உலகிலுள்ள குழந்தைகளில் மூன்றிலொரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Ø    1900ம் ஆண்டளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் 8 ஹெக்டெயர் என்றளவிலிருந்த நிலப்பரப்பானது  தற்சமயம் 1.63 ஹெக்டெயர் என வீழ்ச்சியடைந்துள்ளது.

Ø    வருடாந்தம் உலக உணவு உற்பத்தியானது 32 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்ற அதேவேளை வருடாந்த உணவுத் தேவையானது 44 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்றது.

Ø    ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை உற்பத்தி செய்ய 1000 லீற்றர் தண்ணீர் தேவைப்படிகின்ற அதேவேளை ஒரு கிலோகிராம் அரிசியினை உற்பத்தி செய்ய 3000 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகின்றதாம்.

Ø    அவுஸ்திரேலியாவின் உணவு உற்பத்தியில் 93% ஆன பங்கினை அந்த நாட்டு மக்களே நுகர்கின்றனர். குறிப்பாக, அவுஸ்திரேலிய உணவு உற்பத்தியானது உலக உணவு உற்பத்தியில் 1% வகிபாகத்தினை வகிக்கின்றது. உற்பத்தியில் 3% ஆனவையே உலகளாவிய வர்த்தகத்தில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

Ø    1984ம் ஆண்டு எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம்.

Ø    1932/33ம் ஆண்டு உக்ரேனில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 6-7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 20% இற்கும் அதிகமாகுமாம்.

***
Blog Widget by LinkWithin