லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர் யுத்த குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்த தகவலே.
இவர் மீதான குற்றச்சாட்டுகளில், சியாராலியோன் நாட்டின் ஆயுதக்குழுக்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களினை வழங்கி அதற்கு பிரதியுபகாரமாக இரத்தக்களரி வைரக்கற்களினைப்[Blood Diamonds] பெற்றுக்கொண்டாராம் என்கின்ற குற்றச்சாட்டும் உள்ளடங்குகின்றது.
1992-2002ம் ஆண்டுவரை நடைபெற்ற சிவில்யுத்தத்தில் 100,000க்கு மேற்பட்டோரின் மரணத்துக்கு சார்ள்ஸ் டெய்லரே காரணம் என அவர்மீது 11 யுத்தக்குற்றங்கள் சுமத்தப்பட்டு 2006ம் ஆண்டுமுதல் ஐ.நா குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் நிறுத்தப்பட்ட ஆபிரிக்க நாடொன்றின் முதல் முன்னாள் தலைவர் சார்ள்ஸ் டெய்லர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வழக்கின் திருப்புமுனையாக பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெல் நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சியாராலியோனுக்கான ஐ.நா விசேட நீதிமன்றில் ஆகஸ்ட் 5ம் திகதி சாட்சியமளித்தார். லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர், பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தொண்டுப்பணிக்கு நிதிதிரட்ட 1997ம் ஆண்டு தென்னாபிரிக்கா சென்றபோது டெய்லர், நவோமிக்கு வைரக்கற்களினை இரகசியமாக வழங்கினாராம். குறிப்பிட்ட அந்த வைபவத்தின்போது சார்ள்ஸ் டெய்லரும், நவோமி கம்ப்பெலும் அருகருகே அமர்ந்திருந்ததாக சர்வதேச ஊடகங்களில் தற்சமயம் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த நவோமி கம்ப்பெல் தனக்கு சிறிய அழுக்கான வைரங்கள் இரகசியமாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவை யாரால் வழங்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறினார். ஆனால் நவோமியின் உதவியாளர்களோ டெய்லர்தான் இந்த வைரக்கற்களினை தனக்கு வழங்கியதாக நவோமி தங்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நவோமி தனக்கு பரிசளிக்கப்பட்ட இந்த வைரங்களினை தென்னாபிரிக்காவிலுள்ள குழந்தைகள் நல நிதியமொன்றுக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த குழந்தைகள் நல நிதிய இயக்குனர் தற்சமயம் அந்த வைரங்களினை தென்னாபிரிக்க பொலிசாரிடம் விசாரணைகளுக்காக கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இயற்கையாகவே அமைந்த வளங்களினை தமது நாட்டுக்காக, தமது மக்களின் வறுமையினை இல்லாமல் செய்வதற்கு பயன்படுத்தாமல் அதிகாரத் தரப்பினரின் ஆதரவுடன் தமது சொந்த நலனுக்காக சட்டவிரோதக்கும்பல்கள் பயன்படுத்திவருகின்றனர் எனக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தவகையில் ஆபிரிக்க கண்டத்தினைச் சேர்ந்த பல நாடுகளில் வைரம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்களுக்காக இரத்தக்களரிகள் நீடித்துவருகின்றமை கவலைதரும் செய்தியாகும்.
***
2 comments:
பாவம் பய புள்ள வைரம் குடுத்தும் இந்த நிலை
நன்றிகள் நண்பரே ...
Post a Comment