Monday, November 30, 2009

சாதனை படைத்தார் அட்ரியன் பரத்

அட்ரியன் பரத்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இதில் 1வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆனாலும் இதில் கடந்த 21ம் திகதியன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினைச் சேர்ந்த அட்ரியன் பரத் 132 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளின் 79வருட கால சாதனையினை முறியடித்து அறிமுகப்போட்டியில் இளவயதில் சதமடித்து புதிய சாதனையினை அட்ரியன் பரத் படைத்தார். அட்ரியன் பரத் சதம் பெறும் போது வயது 19ஆண்டுகள் 228 நாட்கள் ஆகும். இதற்கு முன்னர் "கறுப்பு பிரட்மன்" என்றழைக்கப்பட்ட ஜோர்ஜ் ஹெட்லி 15 ஜனவரி 1930 ல் பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்து அணிக்கெதிராக 20ஆண்டுகள் 230 நாட்கள் வயதில் 176 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் 20வயதுக்கு கீழ்பட்ட மேற்கிந்திய தீவுகளின் எந்தவொரு வீரரும் சதம் பெறவில்லை.

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற 85வது சர்வதேச வீரராகவும், 12வது மேற்கிந்திய தீவுகளின் வீரராகவும் அட்ரியன் பரத் சாதனை படைத்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற முதலாவது மேற்கிந்திய தீவுகளின் வீரர் ஜோர்ஜ் ஹெட்லி ஆவார்.

இதேசமயம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி டுன்டனில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் சார்பில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமர் அக்மல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி சதம் பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். உமர் அக்மல் 160 பந்துகளை எதிர்கொண்டு 129 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

உமர் அக்மல்


அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற 12வது பாகிஸ்தான் வீரராக உமர் அக்மல் சாதனை படைத்தார்.


***

Saturday, November 28, 2009

பன்றிக்கு தூக்குத் தண்டனையா????...................

ü சீன மக்கள் ஒருவரின் இறுதிச்சடங்கின் போது காகித பணத்தாள்களினை எரிப்பராம். ஏனெனில் இறந்தவர் மறுபிறப்பில் பணக்காரராவதற்காம்...

ü மேலைத்தேய நாடுகளில் "பிரெஞ்சு முத்தம்" என அறியப்படுகின்ற முத்தமானது பிரான்ஸ் நாட்டில் "ஆங்கில முத்தம்" என்றே அழைக்கப்படுகின்றது.

ü 1386 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் "பன்றி" ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட்டது. ஏனெனில் அந்தப் பன்றியானது ஒரு குழந்தையினை கொன்றமைக்காகவாம்.

ü ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கின்ற எந்தவொரு மாதமும் 13ம் திகதியினை வெள்ளிக் கிழமையாகக் கொண்டிருக்கும்.

ü அட்டையானது 32 மூளைகளைக் கொண்டுள்ளதாம். (நல்ல காலம் மனிதனுக்கு 32 மூளைகளாயின்......................எப்படி இருக்கும்???)

ü பிறப்பிலிருந்து எமது கண்கள் மாற்றமின்றி ஒரே அளவாகவே காணப்படுமாம். ஆனால் எம்முடைய மூக்கினதும், காதுகளினதும் வளர்ச்சியானது ஒருபோதும் நிற்பதில்லையாம்.

ü மெச்சிக்கோ நகரமானது வருடாந்தம் 10 அங்குலங்கள் புதைந்து வருகின்றதாம்.

ü யானையின் தும்பிக்கையில் எந்த என்புகளும் கிடையாது. மாறாக 40000 தசைகள் உண்டாம்.

ü வரிக்குதிரைகளினால் செம்மஞ்சள்(orange)நிறத்தினைப் பார்க்க முடியாதாம்.

ü "வெள்ளைக் கழுகின் தாயகம்" என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட நாடு - போலந்து


***

Thursday, November 26, 2009

அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற உதவும் சொக்லேட்


ஒரு நாளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் இரண்டு வாரங்களுக்கு கருமை நிற சொக்லேட்டினை உட்கொள்வதன் மூலம் அவற்றினால் மனித உடலிலுள்ள அழுத்த ஓமோன் மட்டங்களை குறைப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் சொக்லேட்டானது அழுத்தத்துடன் தொடர்புடைய இரசாயன சமமின்மைகளை பகுதியளவில் சரிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய பூர்வீக ஆராய்ச்சியாளர் Sunil Kochhar மற்றும் அவரது குழுவினர், சொக்லேட்டினை உட்கொள்வதன் நன்மைகள் தொடர்பான விஞ்ஞான சான்றுகளை அவர்களது ஆய்வில் மேற்கொண்டனர்.

கருமை நிற சொக்லேட்டிலுள்ள நோயெதிர்ப்பிகள் மற்றும் ஏனைய நன்மை தரும் கூறுகளின் காரணமாக, அவை இருதய மற்றும் ஏனைய உடல் நிலை பாதிப்புக்களுக்கு காரணமான அபாய காரணிகளை குறைக்கின்றது.

ஆராய்ச்சியாளர்களின் கருத்தின் பிரகாரம் ; தினமும் 40கிராம்கள்(1.4 அவுன்ஸ்கள்) வீதம் 2 வாரங்களுக்கு கருமை நிற சொக்லேட்டினை உட்கொள்வதன் மூலம் அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்கின்றார்கள்...!

***

Monday, November 23, 2009

அரியவகை பிறவுண் நிற பண்டா கண்டுபிடிப்பு

பிறவுண் நிற பண்டா

இரண்டு மாதங்கள் வயதுடைய அரியவகை பிறவுண் (Brown) நிற பண்டா இனமானது வடமேற்கு சீனாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழமையில் பண்டா இனமானது கறுப்பு நிறமானவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பண்டா குட்டியானது இதுவரை கண் திறக்காமலும், நடக்க முடியாமலும் காணப்படுகின்றதாம்.

இந்த பிறவுண் நிற பண்டாவின் தாயானது வழமையான நிறத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் கண்டறியப்பட்ட 5வது பிறவுண் நிற பண்டா ஆகும் என சிங்குவா நெட்டானது கடந்த 11ம் திகதி அறிவித்தது.

வழமையான நிறத்திலான பண்டா

ஏன் சில பண்டா இனங்கள் பிறவுண் நிறத்தில் காணப்படுகின்றnன ? என்பதற்கான காரணத்தினை விஞ்ஞானிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவின் சரித்திரத்தில் முதலாவது பிறவுண் நிற பண்டாவானது 1985ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது டாண்டன் என அழைக்கப்பட்டது. டாண்டன் கண்டுபிடிக்கப்பட்ட போது நோய்வாய்ப்பட்டதாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இது பண்டா ஆய்வு மையத்தால் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் இது மூன்று குட்டிகளை பிரசவித்தது,ஆனாலும் அவை பின்னர் இளமையிலேயே இறந்துவிட்டனவாம்.

பெரும் தோற்றத்தையுடைய பண்டாக்கள் உலகில் அதிகமாக அருகிவரும் ஒரு இனமாகக் காணப்படுவதுடன்,இவை சீனாவில் மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Friday, November 20, 2009

கிரிக்கெட் சுவையான தகவல்கள் #07

  • ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசிய வீரர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணியின் இடதுமுறை மெதுவேக பந்துவீச்சாளர் பாபு நட்கர்னி. 1963-64 பருவகாலத்தில் மெட்ராஸ்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாபு நட்கர்னி 21 ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசி சாதனை புரிந்தார்.
  • · டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம்(201* Vs பங்களாதேஸ்-2006) பெற்றாலும் உடனடியாக அடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஒரே அவுஸ்ரேலிய வீரர் ஜேசன் ஜிலேஸ்பி.
  • உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப்போட்டியில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைக் கொண்டிருப்பவர் என்ற பெருமைக்குரியவர் மேற்கிந்திய தீவுகளின் வின்சன் டேவிஸ் (7/15 Vs அவுஸ்ரேலியா-1983)
  • · இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் சௌதேர்டன் என்கின்ற வீரர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய போது அவரின் வயது 49 வருடங்களும் 119 நாட்களுமாகும். வரே டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற அதிக வயது வீரர் ஆவார்.1877 மார்ச் 15-19 வரை மெல்பேர்னில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • · அவுஸ்ரேலியாவின் ஆறு பிரதான கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் அவுஸ்ரேலிய அணியின் மார்க் வோ.
  • · ஒரு விளையாட்டு வீரராகவும் அதே நேரம் அணியின் பயிற்றுவிப்பாளராகவுமிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் அவுஸ்ரேலியாவின் ஜெப் மார்ஸ். 1987 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் ஒரு வீரராக விளையாடிய ஜெப் மார்ஸ் 1999 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் பயிற்றுவிப்பாளராகவுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***

Tuesday, November 17, 2009

நாம் ஏன் இளநீர் குடிக்கவேண்டும் ???.............



1) எல்லா பால் வகைகளிலும் பார்க்க இளநீரானது அதிகளவான போசணையினை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இதில் கொலஸ்ரோல் கிடையாததுடன் சிறிதளவே கொழுப்பினைக் கொண்டுள்ளது.

2)
இளநீரானது குருதிச்சுற்றோட்டத்தினை மேம்படுத்துவதுடன், நமது செரிமான பாதையினை சுத்தம் செய்வதாகவும் அறியப்படுகின்றது.

3)
இளநீரானது நமது நீர்ப்பீடணத் தொகுதியினை பலமாக மாற்றுவதுடன் மட்டுமின்றி வித்தியாசமான வைரஸ்களினை எமது உடம்பானது எதிர்த்துப் போராட உதவுகின்றது.

4)
நீங்கள் சிறுநீரககற்கள் நோயினால் பாதிப்படைந்தவராயின், தொடர்ச்சியாக இளநீரினை ஒழுங்குமுறையில் அருந்திவருவீர்களாயின், இதனால் சிறுநீரககற்கள் உடைக்கப்படுவதுடன், அவற்றினை இலகுவாக வெளியகற்றவும் இளநீரானது உதவுகின்றது.

5)
சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் இளநீரானது உதவுகின்றது.

6)
உடல் நிறை தொடர்பான பிரச்சினைகளிருந்து மீள சில இளநீர் வகைகள் உதவுகின்றது.

7)
இளம் தேங்காயினுடைய இளநீரானது பொட்டாசியம் மற்றும் அதிகமான சத்துக்களைக் கொண்டிருக்கின்றது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை ஒழுங்கமைக்கவும், இருதய தொழிற்பாட்டுக்கும் உதவுகின்றது.
+++

Monday, November 16, 2009

அசத்தலோ அசத்தல் ..........

சில சுவையான புகைப்படங்கள் உங்களுக்காக..............


***

Saturday, November 14, 2009

உலகில் பசியின் பிடியில் 200 மில்லியன் குழந்தைகள்-ஐ.நா


ஐ.நா குழந்தைகள் நிதியம் கடந்த புதன் வெளியிட்ட தகவலின் பிரகாரம், உணவுப் போசணைக் குறைபாடு காரணமாக ஏழ்மை நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த அண்ணளவாக 200 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90%க்கும் அதிகமான இந்த குழந்தைகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யுனிசெப் தகவலின் பிரகாரம் இந்த வயதுக் குழந்தைகளின் மூன்றில் ஒரு இறப்புகள் போசணைக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவித்துள்ளது.

ஆசியாவில் 1990ல் 44%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 30%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் ஆபிரிக்காவில் சிறிதளவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 1990ல் 38%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 34%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினையின் பிரதான மையவிடமாக தென்ஆசியா விளங்குகின்றது. ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த 83 மில்லியன் கணக்கான குழந்தைகள் பசி,பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளாவிய பசி,பட்டினி பிரச்சினையினால் 1 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே...

உலகளாவிய பசி,பட்டினி பிரச்சினை தொடர்பாக உலகத் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என உணவு மற்றும் விவசாய அமையம் தெரிவித்துள்ளது.

***

Friday, November 13, 2009

இதன் பெயர் தான் நேர்மையா?



ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். அதனால் அவர் கடவுளிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றார். தான் நோயின் பிடியிலிருந்து விடுபட்டு பழையபடி சுகதேகியாக வாழ்வு பெற்றால், தனது வீட்டினை விற்று அதில் வரும் முழுப்பணத்தினையும் காணிக்கையாக செலுத்துவேன் என்று கடவுளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றார். சில நாட்களுக்குப் பின்னர் அவர் பூரண சுகமடைந்துவிட்டார். அப்போது அவர் கடவுள் முன்வைத்த கோரிக்கையினை ஞாபகப்படுத்தி பார்க்கின்றார். அவ்ருக்கு தனது கோரிக்கையினை நிறைவேற்ற மனமில்லை ஆனாலும் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அவர் பத்திரிகையில் பின்வருமாறு விளம்பரப்படுத்துகின்றார். “வீடு விற்பனைக்கு உண்டு, அதன் விலை 1 டொலர், ஆனால் ஒரு நிபந்தனை வீடு கொள்வனவு செய்வதாயின் எனது நாயினை 1 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய வேண்டும்.” அதன் பிரகாரம் ஒருவர் அந்த வீட்டினைக் கொள்வனவு செய்கின்றார். அவர் கடவுளிடம் வேண்டியபடி 1டொலரினை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி, 1 மில்லியன் டொலரினை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னைக் குணமாக்கிய கடவுளினை மனதில் நினைத்துக்கொள்கின்றார்.

இந்த சிறுகதைபோல தான் இன்றைய உலகம் பயணிக்கின்றது எனலாமா நண்பர்களே ???.................
(படித்ததில் பிடித்தது)


***

Wednesday, November 11, 2009

ஒரு நாள் போட்டிகளில் ஒரே தொடரில் இரண்டு தடவை 150+ ஓட்டங்களை பெற்ற பெருமைக்குரியவர்


ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே தொடரில் இரண்டு தடவை 150+ ஓட்டங்களை பெற்ற பெருமைக்குரியவர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா ஆவார். சிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளுக்கிடையில் கென்யாவின் ஹராரேயில் ஒக்டோபர் 18ம் திகதி நடைபெற்ற 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா 168 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 184 ஓட்டங்களை பெற்றார். இதில் 17 நான்கு ஓட்டங்களும் 5 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கியிருந்தது.

மேலும் இதே தொடரில் ஒக்டோபர் 12ம் திகதி நடைபெற்ற 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா 151பந்துகளை எதிர்கொண்டு 156 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


சனத் ஜயசூரிய மாத்திரம் ஹமில்டன் மசகட்சாவின் சாதனையினை 3 நாள் இடைவெளியில் நெருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒரே தொடர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனத் ஜயசூரிய 2006 ஜூலை 01ல் நெட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கெதிராக லீட்ஸில் 152 ஓட்டங்களை பெற்றார். மேலும் 2006 ஜூலை 04ல் நெதர்லாந்து அணிக்கெதிராக அம்ஸ்ரெல்வீனில் 157 ஓட்டங்களை பெற்றார். ஆனால் இவை வெவ்வேறான தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

***

Monday, November 9, 2009

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே.........


கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே.........நீங்கள் கையடக்கத் தொலைபேசியினை உங்களது இடுப்புப் பட்டியில்(belt) அணிகின்றீர்களா? ......ஆம் எனில், இது உங்களுக்கான செய்தி....

துருக்கி, இஸ்பாட்டா சுலைமான் டெமிரெல் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த மருத்துவர் Tolga Atay மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட நீண்ட கால ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்புகள் பலவீனமாவதாக கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள், கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்ற 150 பாவனையாளர்களின் இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடங்களின்(iliac wings) மேலுள்ள விளிம்புகளின் என்பு நெருக்கத்தினை அளவிட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த அளவீட்டுக்காக இரட்டை x-ray absorptiometry தொழில்னுட்பத்தினைப் பயன்படுத்தினர். அதேசமயம் ஒஸ்டியோபோரோஸிஸ் மற்றும் என்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் என்பு நெருக்கத்தை அறிய இந்த பரிசோதனையே மேற்கொள்ளப்படுகின்றது.


என்பு நெருக்கமானது, எந்தப் பக்கத்தில் கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றார்கள்(வலது பக்கம்122 பேரும்,இடது பக்கம்28 பேரும் அணிந்தவர்களிடையே) என்பதற்கு mமறுதலையாக எதிர்ப்பக்கமானது ஒப்பிடப்பட்டது.

ஒருவர் ஒரு நாளில் சராசரியாக 15 மணித்தியாலங்கள் தனது கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்றார், அத்துடன் சராசரியாக 6 வருடங்கள் கையடக்கத் தொலைபேசியினை உபயோகிக்கின்றார்.

ஆய்வின் பிரகாரம்,எந்தப் பக்கத்தில் தனது கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றாரோ அந்தப்பக்க இடுப்புக்கூடு என்பு நெருக்கங்களில் (iliac wing bone) ஒரு சிறிதளவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வித்தியாசமானது புள்ளிவிவர அடிப்படையில் முக்கியமற்றதாகும், இந்த அணுகுமுறையில் ஒஸ்டியோபோரோஸிஸ்சில் வீழ்ச்சிகளைக் காணமுடியவில்லை.

ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்பு நெருக்கங்கள் மோசமாகப் பாதிப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

என்புகளில் இடுப்புக்கூடு என்பு களானது (iliac wing) என்புப் பொருத்துகளில் பெருமளவில் பயன்படுத்தும் மூலமாகும். ஆகவே என்பு நெருக்கங்களில் ஏதாவது குறைவு ஏற்படும் போது மீளாக்கபூர்வ சத்திரசிகிச்சைகள் விசேடமாக முக்கியமாகும்.

எவ்வாறாயினும்,ஆராய்ச்சியாளர்கள் தமது கண்டறிதல்கள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாக வலியுறுத்துயுள்ளார்கள்.

அதேவேளை, Atay அவரது குழுவினர்: “எமது நாளாந்த வாழ்க்கையில் கையடக்கத் தொலைபேசியினை சாத்தியமானளவு எமது உடம்புகளிலிருந்து தூரவிலகி வைப்பது சிறந்ததாகும்என்கின்றனர்.

இந்த ஆய்வானது The Journal of Craniofacial Surgery-செப்டெம்பர் இதழில் வெளியாகியுள்ளது.


+++

Friday, November 6, 2009

காலநிலை மாறிவிட்டது .....

கிழக்கிலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்கின்ற கடும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரினால் நிறைந்துள்ளன.

எமது பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியினால் பல தசாப்தங்களுக்கு பின்னர் வற்றிக் காணப்பட்ட ஆறுகள்,குளங்கள் உட்பட நீர்நிலைகள் இன்று மழையினால் நிரம்பி வழிகின்றன. வற்றிய நீர்நிலைகள் ஓரிரண்டு நாட்களுக்குள்ளேயே மழையினால் நிரம்பிவிட்டன.கடும் மழையினால் விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.





கடும் வரட்சியின் விளைவு மேலே உள்ள படத்தில்





கடும் மழையின் விளைவு


***

Thursday, November 5, 2009

1000 ஓட்டங்களைப் பெற அதிக போட்டிகளை எடுத்துக் கொண்ட வீரர்கள்- ODI


இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 1வது போட்டி கடந்த 25ம் திகதி வதோதராவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 31 பந்துகளுக்கு 49 ஓட்டங்களைப் பெற்று ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவுசெய்து கொண்டார். இதன்போது அவர் 1000 ஓட்டங்களைப் பதிவு செய்து கொண்டார். இதன்மூலம் ஹர்பஜன் சிங் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை அடைய அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக புதிய சாதனை படைத்தார். 29வயதான ஹர்பஜன் சிங் அன்றைய தினம் விளையாடியது அவரின் 196வது ஒருநாள் போட்டியிலாகும். மேலும் இதற்கு அவருக்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்ன் தனது 191வது ஒருநாள் போட்டியில் 1000 ஓட்டங்களை அடைந்ததே முன்னர் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை அடைய 100க்கும் அதிகமான போட்டிகளை எடுத்துக்கொண்ட வீரர்கள் தொடர்பான விபரங்கள்.
1) ஹர்பஜன் சிங் (இந்தியா), 196 போட்டிகள்
2) சேன் வோர்ன் (அவுஸ்ரேலியா), 191 போட்டிகள்
3) டானியல் விற்றோரி (நியூசிலாந்து), 171 போட்டிகள்
4) சமிந்த வாஸ் (இலங்கை), 164 போட்டிகள்
5) அஜித் அகர்கர் (இந்தியா), 131 போட்டிகள்
6) வசிம் அக்ரம் (பாகிஸ்தான்), 126 போட்டிகள்
7) ரசீத் லத்திப் (பாகிஸ்தான்), 116 போட்டிகள்
8) குமார் தர்மசேன (இலங்கை), 115 போட்டிகள்
9) நயன் மொங்கியா (இந்தியா), 113 போட்டிகள்
10) இயன் ஹீலி (அவுஸ்ரேலியா), 110 போட்டிகள்


***

Tuesday, November 3, 2009

புகைபிடிப்பவர்கள் Vs புகைபிடிக்காதவர்கள்



புகைப் பிடிக்காத பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் மிகப்பிந்தியே இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புகைபிடிக்கும் பெண்கள், புகைபிடிக்காத பெண்களைக் காட்டிலும் 14 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர் என ஐரோப்பிய இருதயவியல் ஆராய்ச்சி சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாக நோர்வே மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

புகைபிடிக்கும் ஆண்கள், புகைபிடிக்காத ஆண்களைக் காட்டிலும் 6 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
"இது ஒரு சிறிய வித்தியாசமில்லை" என்கின்றார், இத்தாலி, பவியாவில் அமைந்துள்ள விஞ்ஞான நிறுவகத்தைச் சேர்ந்த இருதயவியல் தொடர்பான நிபுணர், மருத்துவர் Silvia Priori.மேலும் "பெண்கள் புகைப் பிடிப்பதனால் ஆண்களைக் காட்டிலும் அதிகமானதை இழக்கின்றனர் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் ” . மருத்துவர் Silvia Priori தனது கருத்தினை ஆய்வுத் தகவலுடன் ஒப்பிடவில்லை.

நோர்வே,லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவர் Morten Grundtvig மற்றும் அவரது குழுவினர் முதற்தடவையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1784 நோயாளர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தமது ஆய்வினை மேற்கொண்டனர்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புகைபிடிக்காத ஆண்களுக்கு,சராசரியாக அவர்களது 72வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் ஆண்களுக்கு, சராசரியாக அவர்களது 64வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் புகைபிடிக்காத பெண்களுக்கு,சராசரியாக அவர்களது 81வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் பெண்களுக்கு, சராசரியாக அவர்களது 66வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள்,மாரடைப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கிடையேயான வித்தியாசமாக 14 ஆண்டுகளையும், ஆண்களுக்கிடையேயான வித்தியாசமாக 6 ஆண்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

முன்னைய ஆய்வுகளின் பிரகாரம்,பொதுவான பால்நிலை வேறுபாடுகள் தொடர்பில் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை. மருத்துவர்கள், பெண்களில் காணப்படும் ஓமோன்களே அவர்களை இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பதாக நீண்டகாலமாக சந்தேகம் கொண்டிருந்தனர்.

மருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், புகைப்பிடிப்பதானது பெண்களுக்கு மொனோபஸினை முன்னதாகவே ஏற்படுத்துகின்றதுடன், மேலும் மாரடைப்பிலிருந்தான சிறியதான பாதுகாப்பும் விலகிவிடுகின்றது என்கின்றார்.
ஆண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது வீழ்ச்சியடையும் அதேவேளை பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது அதிகரித்துச் செல்வதாக ஒப்பிடப்படுகின்றது. மருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், பெண்களிடையே இருதய நோய் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டுகே பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், அமெரிக்க இருதயவியல் கல்லூரி பேச்சாளருமான மருத்துவர் Robert Harrington கருத்துத் தெரிவிக்கையில் "புகைப்பிடிப்பதானது, பெண்கள் இயற்கையாகவே அவர்கள் கொண்டுள்ள நன்மையானவற்றை அழித்துவிடும்" என்கின்றார்.
இருதயப் பாதிப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான கொலஸ்ரோல் ஆகியவை பெண்களினை வேறுபாடாகவே பாதிக்கின்றது என்பதனை இதுவரை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லையாம்.

தமது வாழ்வில் புகைப்பிடிக்காதவர்கள் தாமாகவே நோய்களினை நாடிச் செல்லவில்லை என்பதுடன் புகைப்பிடிப்பவர்கள் முன்னதாகவே இளைய வயதில் தமது புகைப்பிடிக்கும் பழக்கங்களைக் கைவிடுவதன் மூலம் கொடிய நோய்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்பது ()றைக்க முடியாத உண்மையாகும்.


***
Blog Widget by LinkWithin