மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இதில் 1வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றது.
ஆனாலும் இதில் கடந்த 21ம் திகதியன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினைச் சேர்ந்த அட்ரியன் பரத் 132 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளின் 79வருட கால சாதனையினை முறியடித்து அறிமுகப்போட்டியில் இளவயதில் சதமடித்து புதிய சாதனையினை அட்ரியன் பரத் படைத்தார். அட்ரியன் பரத் சதம் பெறும் போது வயது 19ஆண்டுகள் 228 நாட்கள் ஆகும். இதற்கு முன்னர் "கறுப்பு பிரட்மன்" என்றழைக்கப்பட்ட ஜோர்ஜ் ஹெட்லி 15 ஜனவரி 1930 ல் பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்து அணிக்கெதிராக 20ஆண்டுகள் 230 நாட்கள் வயதில் 176 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் 20வயதுக்கு கீழ்பட்ட மேற்கிந்திய தீவுகளின் எந்தவொரு வீரரும் சதம் பெறவில்லை.
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற 85வது சர்வதேச வீரராகவும், 12வது மேற்கிந்திய தீவுகளின் வீரராகவும் அட்ரியன் பரத் சாதனை படைத்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற முதலாவது மேற்கிந்திய தீவுகளின் வீரர் ஜோர்ஜ் ஹெட்லி ஆவார்.
இதேசமயம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி டுன்டனில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் சார்பில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமர் அக்மல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி சதம் பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். உமர் அக்மல் 160 பந்துகளை எதிர்கொண்டு 129 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
உமர் அக்மல்
***
No comments:
Post a Comment