Friday, July 23, 2010
சரித்திர சாதனை நாயகன் முரளிதரன்..........!!!
இலங்கை கிரிக்கெட் அணியின் பெருமையினை உலகம் முழுவதும் பரவச் செய்த சரித்திர சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்து இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்தமைக்கமைய, ஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேலதிகமான 8 விக்கட்களை வீழ்த்தி 800விக்கட்கள் என்ற மைல்கற் சாதனையினை தன்னால் படைக்க முடியுமென்று மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய முரளிதரனின் சாதனையினை போட்டியின் 2ம் நாள் பெய்த மழை தடுத்துவிடுமோ என பலரும் கவலை கொண்டிருந்தனர். ஆனாலும் வானிலை சீரடைந்து ஆறுதல் அளித்தது. 1வது இன்னிங்ஸ்சில் 5 விக்கட்களை வீழ்த்திய முரளி 2வது இன்னிங்ஸ்சில் 3விக்கட்களை வீழ்த்தினால் 800விக்கட்கள் என்ற மைல்கற் சாதனையினை இலகுவாக படைத்துவிடுவாரென பெருமளவானோர் நம்பினர். ஆனாலும் தனது 800விக்கட்டினைப் பெற முரளி மிகவும் பிரயத்தனப்பட்டார். லக்ஷ்மனுடன் இந்திய அணியின் கடைநிலை வீரர்களான இசான் சர்மா, ஓஜா ஆகியோர் முரளியினை அதிகமாகவே சோதித்து விட்டனர்.(எங்களையும் தான்..!!!) ஆனாலும் முரளி வீசிய தனது 44.4ஆவது ஓவரில் மஹேல, பிராக்ஜன் ஓஜாவின் பிடியினை பாய்ந்துபிடிக்க முரளி தனது 800வது விக்கட்டினைப் கைப்பற்றி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தினைப் படைத்தார்.
முரளிக்கு இலங்கை அணி வெற்றியுடன் விடை கொடுத்தமை இந்த டெஸ்டின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த 10விக்கட் டெஸ்ட் வெற்றியானது ஒட்டுமொத்தமாக இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற 7வது 10விக்கட் வெற்றி என்பதுடன் இந்திய அணிக்கெதிரான 2வது 10விக்கட் வெற்றியாகும்.
இலங்கைக்காக 17வருடங்களும் 10 மாதங்களும் டெஸ்ட் விளையாடிய முரளிதரன் உச்சத்திலிருக்கும்போதே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றமை பாராட்டுக்குரியதாகும்.
தற்சமயம் டெஸ்ட்(800) மற்றும் ஒருநாள்(515+) போட்டிகளில் அதிக விக்கட்களைப் பெற்ற சாதனையாளனாக முரளிதரன் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கிரிக்கெட்டில் முரளி நிகழ்த்திய சாதனைகளை ஏனைய வீரர்கள் முறியடிப்பதென்பது மிகச் சவாலான காரியமாகும்.
முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்த்திய உலக சாதனைகள் வருமாறு;
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்தியவர்: 133 டெஸ்ட் போட்டிகளில் 230 இன்னிங்ஸ்களில் 800 விக்கட்கள்~ சராசரி 22.74 (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கட்கள் ~ சராசரி 25.73)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800விக்கட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர்.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ்சில் அதிக தடவைகள் 05 விக்கட்களை வீழ்த்தியவர்: 67 தடவைகள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 37 தடவைகள்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்தியவர் : 22 தடவைகள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 10 தடவைகள்)
டெஸ்ட் போட்டிகளில் bowled முறையில் விக்கட் முனைகளை தகர்த்து அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 167 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 116)
டெஸ்ட் போட்டிகளில் பிடியெடுப்பு[caught] முறையில் அதிக விக்கட்களை வீழ்த்தியவர் :435 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 418 விக்கட்கள்)
டெஸ்ட் போட்டிகளில் தானே பந்துவீசி தானே பிடியெடுத்து [caught and bowled] அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 35விக்கட்கள் ( முரளியுடன் ~ இந்திய அணியின் அனில் கும்ப்ளே 35 விக்கட்கள்)
டெஸ்ட் போட்டிகளில் ஸ்டெம்ப்[stumped] முறையில் - அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 47 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 36 விக்கட்கள்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசியவர் : 44,039 பந்துகள் (அடுத்த இடத்தில் ~ இந்திய அணியின் அனில் கும்ப்ளே 40,850 பந்துகள்)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்தியவர்: 04 தடவைகள் ~ இதேமாதிரியான சாதனையினை 02 சந்தர்ப்பங்களில் நிகழ்த்தியுள்ளார். (அடுத்த இடத்தில் ~ கிளறி கிரிமெற் : 03 தடவைகள் 10 விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்தியவர்)
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும்(09) டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும்(09) டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமான விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் பங்கேற்று 350,400,450,500,550,600,650,700,750,800 விக்கட்களை விரைவாக வீழ்த்திய ஒரே வீரர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கட்களினை (9/51 எதிர் சிம்பாப்வே, கண்டி~2002 & 9/65 எதிர் இங்கிலாந்து, த ஓவல்~ 1998) 2 தடவைகள் வீழ்த்திய வீரராக இங்கிலாந்தின் ஜிம் லேகருடன் தன் பெயரினை பதிவு செய்துள்ள ஒரே வீரர். முரளியின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகிய 9/51 எதிர் சிம்பாப்வே, இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
டெஸ்ட் தொடரொன்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசியவர் – 2003ல் இங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரொன்றில் 109 ஓவர்கள். (அடுத்த இடத்தில்: மே.தீவுகளின் டினாத் ராம்னரின் 2001ல் ~ தென்னாபிரிக்காவுக்கெதிராக 91 ஓட்டமற்ற ஓவர்கள் )
ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக விக்கட்களை குறைந்த சராசரியில் பெற்ற சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற 54 டெஸ்ட் போட்டிகளில் முரளி மொத்தமாக 438விக்கட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 92 டெஸ்ட் போட்டிகளில் 510 விக்கட்கள் & சராசரி~22.47)
ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக தடவைகள் 5 விக்கட்களை கைப்பற்றிய சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் முரளி 41 தடவைகள் 5விக்கட் பெறுதிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக தடவைகள் டெஸ்ட் போட்டியொன்றில் 10 அல்லது 10இற்கும் மேற்பட்ட விக்கட்களை கைப்பற்றிய சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் முரளி 18 தடவைகள் 10விக்கட் பெறுதிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மைதானமொன்றில் 100 அல்லது 100இற்கும் மேற்பட்ட விக்கட்களைப் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளர்; அத்துடன் 3 மைதானங்களில் 100 அல்லது 100இற்கும் மேற்பட்ட விக்கட்களைப் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராகவும் முரளி விளங்குகின்றார்; கொழும்பு எஸ்.எஸ்.சி~SSC மைதானத்தில் 24 டெஸ்ட் போட்டிகளில் 166 விக்கட்கள்(சராசரி 20.69) | கண்டி அஸ்கிரிய மைதானத்தில் 16 டெஸ்ட் போட்டிகளில் 117 விக்கட்கள்(சராசரி 16.02) | காலி விளையாட்டு மைதானத்தில் 15 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கட்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக 100+ விக்கட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளராக முரளி விளங்குகின்றார்;
டெஸ்ட் போட்டித் தொடர்களில் அதிக தடவைகள் தொடர் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சாதனையாளன்; 11 தடவைகள்
டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சாதனையாளனாக தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ்சுக்கு(20+தடவைகள்) அடுத்தவராக முரளி விளங்குகின்றார்; 19 தடவைகள்
சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 73 டெஸ்ட் போட்டிகளில் 493 விக்கட்கள்
சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ்சில் அதிக தடவைகள் 05 விக்கட்களை வீழ்த்திய சாதனையாளன்; 45 தடவைகள்
சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்தியவர்; 15 தடவைகள்
ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 2002ம் ஆண்டு பருவகாலத்தில் ~ 05 தடவைகள்
ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 75+ இற்கும் அதிகமான விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 03 தடவைகள் ~ 2006ம் ஆண்டு பருவகாலத்தில் 11டெஸ்ட் போட்டிகளில் 90விக்கட்கள்(சராசரி16.90) , 2001ம் ஆண்டு பருவகாலத்தில் 12டெஸ்ட் போட்டிகளில் 80விக்கட்கள்(சராசரி21.23) & 2000ம் ஆண்டு பருவகாலத்தில் 10டெஸ்ட் போட்டிகளில் 75விக்கட்கள்(சராசரி19.50)
ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரராக ஆஸியின் சேன் வோர்னுக்கு அடுத்ததாக விளங்குகின்றார். முரளி ~ 2006ம் ஆண்டு பருவகாலத்தில் 11டெஸ்ட் போட்டிகளில் 90விக்கட்கள் , சேன் வோர்ன் 2005ம் ஆண்டு பருவகாலத்தில் 15டெஸ்ட் போட்டிகளில் 96விக்கட்கள்(சராசரி22.02)
இலங்கை சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைக் கொண்டுள்ள சாதனையாளன்; 16/220 எதிர் இங்கிலாந்து, த ஓவல் ~ 1998 : டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 5வது மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒரு நாள், T20) 1000+ வீழ்த்திய முதல் வீரர் முரளி.(அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 1001 விக்கட்கள்)
பந்துவீச்சாளர் முரளி & களத்தடுப்பாளர் (விக்கட்காப்பாளர் தவிர) மஹேல ஜோடி 77 விக்கட்கள் வீழ்வதற்கு பங்களிப்பு செய்து சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசியவர் :1794 (அடுத்த இடத்தில் ~அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 1761 )
டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் 7 விக்கட்களினை டெஸ்ட் அங்கத்துவம் பெற்ற அதிக நாடுகளுக்கெதிராக வீழ்த்திய ஒரே வீரர்.
கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனைகளால் அவற்றினை வென்று காட்டிய முரளி கிரிக்கெட் உலகுக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தென்றால் மிகையல்ல.
சரித்திர சாதனை நாயகன் தங்கத் தமிழன் முரளிக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகுக.......!!!!
***
Labels:
இலங்கை,
உலக சாதனை,
கிரிக்கெட்,
டெஸ்ட்,
முரளிதரன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This site appears to be very interesting, as it is in Thamizh my sweet mother-tongue. I am really elated to see the various interesting features, the site provides exclusively for the Thamizharkal all over the world. Thanks. Vanakkam
நண்பரே உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ......
அன்புடன் லோகநாதன்
Post a Comment