Monday, July 12, 2010
புதிய வரலாறு படைத்தது ஸ்பெய்ன் அணி…...!!!
2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன. 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக ஸ்பெய்ன் தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.
பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஜொகர்னஸ்பேர்க் சொக்கர் சிட்டி அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.
மிகவும் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முழுமையான 90 நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் பல்வேறு தடவைகள் முயன்றும் கோலினைப் பெறமுடியாமல் போகவே மேலதிகமாக நேரம் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம், முதல் 15 நிமிடத்தில் எந்த கோலும் பெறப்படவில்லையாயினும் போட்டியின் 116வது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் இனியெஸ்டா பெற்ற அபார கோலின் மூலம் ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தினை முதல் தடவையாக சுவீகரித்தது. இந்தப் போட்டியில் ஏராளமான மஞ்சள் அட்டைகளும், சிவப்பு அட்டை ஒன்று காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3ம் இடத்துக்கான போட்டியில் உருகுவே மற்றும் ஜேர்மனி அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஜேர்மனி அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு 3ம் இடத்தினை 4வது தடவையாக சுவீகரித்தது. கடந்த உலகக் கிண்ணத்திலும் ஜேர்மனி அணியே 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2010 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில்............
19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் நிகழ்த்தப்பட்ட & புதுப்பிக்கப்பட்ட சாதனைகள் வருமாறு............
முதன்முதலாக..........
ஆபிரிக்கா கண்டத்தில்(தென்னாபிரிக்கா) முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெய்ன் அணி ஆபிரிக்க கண்டத்தில் புதிய வரலாற்றினைப் படைத்தது.
முதல்வெற்றி...........
ஸ்பெயின் அணிக்கெதிராக 85 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றியினை (1-0) பதிவுசெய்தது.
பிரான்ஸ் அணிக்கெதிராக 80 ஆண்டுகளில் மெக்சிக்கோ அணி முதல் வெற்றியினை (2-0) பதிவுசெய்தது.
கிரேக்க அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் நைஜீரியா அணிக்கெதிராக 2-1)
ஸ்லோவேனியா அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் அல்ஜீரியா அணிக்கெதிராக 1-0)
அந்நிய மண்ணில் ஜப்பான் அணியானது, உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் கமரூன் அணிக்கெதிராக 1-0)
சிலி 48 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் ஹொண்டுராஸ் அணிக்கெதிராக 1-0 வெற்றி)... கடைசியாக 1962ல் யுகோஸ்லாவியாவுடனான போட்டியில் வெற்றி .........
முதல் தடவையாக..........
உலகக் கிண்ண வரலாற்றில் கானா முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 2006 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் பரகுவே முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1986,1998,2002 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல் தடவையாகப் புள்ளியினைப் (03) பெற்றுக்கொண்டது. முன்னர் 1982ல் 3போட்டிகளிலும் தோல்வி கண்டது.
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் போட்டியினை நடத்திய நாடானது (தென்னாபிரிக்கா) முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.
உலகக் கிண்ண வரலாற்றில் நடப்பு சாம்பியனும்(இத்தாலி), 2ம் இடத்தினைப் பெற்ற அணியும்(பிரான்ஸ்) முதல் சுற்றுடன் வெளியேறியதும் இதுவே முதல் தடவையாகும்.
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் 3 சகோதரர்களைக் கொண்ட முதல் அணியாக ஹொண்டுராஸ் விளங்கியது.
உலகக் கிண்ண வரலாற்றில் தந்தையும், மகனும் ஒரே அணியில் இதுவே முதல் தடவை. அமெரிக்க அணியில் தந்தை மைக்கல் பொப்(பயிற்றுனர்), மகன் மைக்கல் ப்ரட்லி(அணி வீரர்).
இறுதிப்போட்டி.............
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் ஸ்பெய்ன் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 12வது அணியாக ஸ்பெய்ன் விளங்குகின்றது.
நெதர்லாந்து அணி 32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் 1-3 தோல்வியடைந்தது.
32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு சாம்பியன் பட்டம் வெல்லாத இரண்டு அணிகள் மோதின (ஸ்பெய்ன் & நெதர்லாந்து) . இதற்கு முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா & நெதர்லாந்து அணிகள் மோதின.
இதுவரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்களிலும் ஐரோப்பாவுக்கு வெளியே எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.அந்த குறையினை நீக்கி ஐரோப்பாவுக்கு வெளியே சாம்பியன் பெற்ற முதலாவது ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் சாதனை படைத்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக இறுதிப் போட்டியில்(03) விளையாடிய 5வது நாடாக நெதர்லாந்து சாதனை படைத்தது. இதன் முதலிடத்தில் பிரேசில் & ஜேர்மனி (07), அதனைத் தொடர்ந்து இத்தாலி(06), ஆர்ஜென்டீனா(04) ஆகிய நாடுகள் விளங்குகின்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்த அணி என்ற சாதனையினை பிரேசில் அணியுடன்(2002) நெதர்லாந்து. பகிர்ந்துகொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதற்தடவையிலேயே சாம்பியன் நாடான ஸ்பெய்ன் தனக்கு முன்னர் அந்த பெருமையினைக் கொண்ட உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுடன் தன்பெயரினைப் பதிந்துகொண்டது.
2010ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மொத்தமாக 1 கோல் மாத்திரம் பெறப்பட்டது. இதற்கு முன்னர் 1990ம் ஆண்டு உலகக் கிண்ணம் (ஜேர்மனி 1 – ஆர்ஜென்டீனா 0)
உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய முதல் போட்டியில் தோற்று, இறுதிப் போட்டி வரை முன்னேறி சாம்பியனான ஒரே அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.
உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய போட்டிகளில் குறைந்த கோல்களினைப்(08) பெற்று சாம்பியனான அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.
ஐரோப்பிய சாம்பியன், உலகக் கிண்ண சாம்பியனானது இது 2வது தடவையாகும். (இதற்கு முன்னர் 1974ல் மே.ஜேர்மனி)
சில குறிப்புக்கள்.........
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய நாடான ஜேர்மனி தனது சாதனையினை புதுப்பித்தது – 12 போட்டிகள்
அதிக உலகக் கிண்ண போட்டிகளில்(99) விளையாடிய அணியாக ஜேர்மனி சாதனை படைத்தது. பிரேசில் 97 போட்டிகளில் விளையாடியுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக தடவைகள்(4) 3வது இடத்தினை சுவீகரித்த அணியான ஜேர்மனி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 3ம் இடத்தினைப் வெற்றி கொண்ட ஒரே அணியாக புதிய சாதனை படைத்தது.
24ஆண்டுகளின்பின் ஆரம்பப் போட்டி சமனில் முடிவடைந்தது. (தென்னாபிரிக்கா எதிர் மெக்ஸிக்கோ 1-1) , முன்னர் 1986ல் இத்தாலி எதிர் பல்கேரியா 1-1
உருகுவே அணி 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக காலிறுதி & அரையிறுதிக்கு நுழைந்தது. உருகுவே அரையிறுதியில் நெதர்லாந்திடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் 60 ஆண்டுகளின் பின்னர் ஸ்பெய்ன் முதல் தடவையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் சுவிட்சர்லாந்து அதிக போட்டிகளில்(05) எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காத அணியாக இத்தாலியுடன் தன்பெயரினை பதிவுசெய்தது. (சுவிட்சர்லாந்து 2006ல் 4 போட்டிகளிலும், 2010ல் தனது முதல் போட்டியில் ஸ்பெயினுக்கெதிராக 1-0 என வெற்றிபெற்றது)
உலகக் கிண்ணத்தில் நடப்புச் சாம்பியன் 2வது தடவையாக முதற் சுற்றுடன் வெளியேறிய அவமானகரமான சாதனையினை படைத்த ஒரே நாடாக இத்தாலி விளங்குகின்றது. இதற்கு முன்னர் 1950 உலகக் கிண்ணத்தில் இத்தாலி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.
FIFA உலகக் கிண்ண விருதுகள் – 2010
1) தங்கப் பாதணி
19வது உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களினை (05 கோல்களினை பெற்றவர் & 03 கோல்களினை அடிக்க ஏனைய வீரர்களுக்கு உதவியவர்) அடித்த ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த தோமஸ் முல்லர் தங்கப் பாதணி விருதினைப் பெற்றுக் கொண்டார்.
2) தங்கப் பந்து
தொடரின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதினை உருகுவே நாட்டினைச் சேர்ந்த டியகோ போர்லன் பெற்றுக் கொண்டார்.
3) தங்கக் கையுறை
தொடரின் மிகச் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதினை ஸ்பெய்ன் நாட்டின் தலைவரும், கோல்காப்பாளருமான ஐகர் காசியாஸ் பெற்றுக் கொண்டார்.
4) சிறந்த இளம் வீரருக்கான விருது
தொடரின் மிகச் சிறந்த சிறந்த இளம் வீரருக்கான விருதினையும், தங்கப் பாதணி விருது பெற்ற ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த தோமஸ் முல்லர் பெற்றுக் கொண்டார்.
5) நேர்த்தியாக, விதிகளுக்கமைய விளையாடிய அணி- Fair Play award
19வது உலகக் கிண்ணத்தில் போட்டி விதிகளுக்கமைய விளையாடிய அணியாக சாம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்ட ஸ்பெய்ன் அணியே தெரிவு செய்யப்பட்டது.
இந்த உலகக் கிண்ணத்தில் "வுவுசெலா"இசைக் கருவி,"ஜபுலானி"பந்து ,போட்டி முடிவுகளை எதிர்வுகூறிய "போல்" ஒக்டோபஸ் ஆகியவற்றினைப் பற்றியும் அதிகமாக பேசப்பட்டமை நினைவில் நிற்கின்றனதெனலாம்.
20வது உலகக் கிண்ணம் தொடர்பான செய்திகளினை பிரேசிலிருந்து தொகுத்து வழங்க இன்னும் 4 வருடங்கள் காத்திருப்போமே..........
***
Labels:
FIFA விருதுகள்,
உதைபந்தாட்டம்,
உலகக் கிண்ணம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாழ்த்துகள் நண்பா..! தகவல் அருமையாக உள்ளது
நன்றிகள் சிவதர்சன் .........
Post a Comment