Sunday, February 13, 2011

அழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........




பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகும் காட்சியளிக்கும் சிவப்பு சிங்கமீன்கள்(Red Lionfish) இதுவரையும் மனிதர்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்பட்டிருந்தன. ஆனால் இந்த மீனினங்கள் மனிதர்களுக்கு மாத்திரமின்றி அவை வாழுகின்ற இயற்கை சூழற்றொகுதிக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


ஒரு சிங்க மீனானது, முருகைக்கற் சூழற்றொகுதியொன்றில் அறிமுகமாகின்றபோது, அவை அறிமுகமாகிய ஒரு சில வாரங்களிலேயே அந்த முருகைக்கற் சூழற்றொகுதியில் வாழ்கின்ற சிறிய மீனினங்களில் 80% ஆனவை அழிவடைந்துபோவதாக அமெரிக்க நாட்டினைச் ஒரிகொன் மாநில பல்கலைக்கழக கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் சிங்க மீனினங்கள் உயர்ந்தபட்சத்தில் ஏனைய உயிரினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவையாகும்.

மேற்கு பசுபிக் கடலின் சுதேச நீர்ப்பரப்புகளின் சூழற்றொகுதிகள் சிங்க மீனினங்களின் வாழிடமாக விளகுகின்றன, இந்த சூழற்றொகுதிகள், சிங்க மீனினங்கள் ஏனைய உயிரினங்களை தின்கின்ற நடத்தையின் காரணமாக தம்மை மாற்றிக்கொண்டுள்ளன.

இந்த மீனினங்கள் இனப்பெருக்கம் செய்து மிகவிரைவாக பல்கிப்பெருகுவதுடன், இவை வாழ்கின்ற சூழலின் வெளியே இவற்றினை உணவாக்கிக்கொள்ள எதிரிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய ஆண்டுகளில், இந்த மீனினங்கள் அவற்றின் வழமையான சுதேச வாழிடங்களினை விடவும் மேலும் சில பிராந்தியங்களில் அதாவது கரீபியன், தென் அமெரிக்க முருகைக்கற் சூழற்றொகுதியில் பாரியளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

இந்த மீன்களின் அறிமுகமானது கரீபியன் பிராந்திய முருகைக்கற் சூழற்தொகுதியில் புதுமையினை , விந்தையினை ஏற்படுத்திவிடக்கூடும். இது சுற்றுலாத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும்.

இதனால் மெக்சிக்கோ, பெலிஸ் போன்ற சில நாடுகள் சுழியோடிகளுக்கு, பிடிக்கின்ற மீன்களின் தொகைக்கேற்ப பணத்தினை வழங்கி இவற்றினை கட்டுப்படுத்த முனைகின்றன. ஆனாலும் இவை பாரியளவில் காணப்படுகின்றன என்பது சுழியோடிகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தொகையிலிருந்து புலப்படுகின்றனது என்பது கவலைதரும் செய்தியாகும். பாரம்பரிய மீன்பிடிமுறைகளான வலைகளைப் பயன்படுத்தி இவற்றினை கட்டுப்படுத்தமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சில பகுதிகளில் மிகப்பிரபலமான உணவாக இந்த மீனினங்கள் விளங்கினாலும், அலங்கார மீன் தொழிற்துறையில் மிக அதிகமான விலை கொண்ட மீனினமாகவும் இந்த மீனினங்கள் விளங்குகின்றன.

கடல் சூழற்றொகுதிகளினை பாதுகாப்பதற்காக இந்த மீனினங்களை அதிகளவில் உணவாக்கிகொள்ள மக்களுக்கு விஞ்ஞானிகள் அழைப்புவிடுகின்றனர்.


Lionfish தொடர்பான பொதுவான தகவல்கள்

ஸ்கோப்பியன் மீன் குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மீனினங்களின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் ~ 5-10 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இந்த மீனினங்கள் 15 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.

இந்த மீனினங்கள் வெளிப்புறமாக ஊசி போன்ற முற்கள் 18இனைக் கொண்டுள்ளன. இவை அதிக விஷமுடையவை ஆகும்.

இந்த மீனினங்கள் தனது ஊசி போன்ற முற்களால் மனிதனை தாக்குகின்றபோது மிகக் கடுமையான வலிகள் ஏற்படுத்துவதுடன், வாந்தி, சுவாசப்பிரச்சினைகள், பாரிச வாதம் அத்துடன் அரிதாக மரணத்தினையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin