
தாய்லாந்து, கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக நம்பப்படுகின்ற 1722 அடி உயரத்தில் அமைந்துள்ள "ப்ரிஹ் விஹார்" என்றழைக்கப்படும் "சிகரேஷ்வரர்" சிவன் கோயில் தொடர்பாக அண்மைய நாட்களில் இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.
நீண்ட காலமாக இந்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் இந்த ஆலயம் தொடர்பாக, பல்வேறு காலகட்டங்களில் தாய்லாந்து தேசமும், கம்போடியா தேசமும் மாறி மாறி உரிமை கொண்டாடி வந்ததுடன் தமக்கிடையே யுத்தங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.

இதன் காரணத்தினால் இந்தப்பிரச்சினையினை விசாரணை செய்த நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம், 1962ம் ஆண்டு ஆலயமும், சுற்றுப்புறமும் கம்போடியா நாட்டுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கி தீர்த்துவைத்தது. 1908ம் ஆண்டு கம்போடிய நாட்டினை ஆட்சி செய்த பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் இந்தப்பகுதியினை கம்போடியாவின் ஒரு பகுதியாகவே குறித்துக்காட்டியிருந்தனர். இந்த வரைபடமானது வலுவானது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பிரகாரம் தாய்லாந்து நாடானது ஆலயத்தினை கம்போடியாவிடம் ஒப்படைத்தது.
ஆனால் இத்தீர்ப்பில், ஆலயத்தினை அண்டியுள்ள 1.8 சதுரமைல் பரப்பளவான பிரதேசம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என சரியாக வரையறை செய்யப்படவில்லை.
கம்போடியாவிலிருந்து இந்த ஆலயத்துக்கு செல்லவேண்டுமாயின் அந்த நிலப்பரப்பின் வழியாகவே செல்லவேண்டும். அந்தப்பகுதி தனக்கே சொந்தமானது என தாய்லாந்து உரிமை கோருகின்றது. இதன் காரணத்தினாலேயே இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.
ஆனால், பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் 1.8 சதுரமைல் காட்டுப்பிரதேசம் கம்போடியாவுக்கு சொந்தமானதாகவே குறித்துக்காட்டப்பட்டுள்ளதாம்.

900ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்துக்கு உலக மரபுரிமை இடமாக 2008ம் ஆண்டு ஜூலை, ஐ.நா யுனெஸ்கோ அமையமானது அங்கீகாரம் வழங்கியது.
இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான பேதங்களைக் கைவிட்டு உலக பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த சிவன் கோயிலினை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.
***
No comments:
Post a Comment