Wednesday, February 23, 2011

பெயர் வரக் காரணம் என்ன?..... # 04




பொலிஸ்காரரை ஆங்கிலத்தில் "கொன்ஸ்டபிள்" (Constable) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?....... இந்த கொன்ஸ்டபிள் என்ற வார்த்தை இலத்தீன் மொழியான "கொம்ஸ் ஸ்டபுளி" என்ற சொல்லிருந்து உருவானது.

"கொம்ஸ் ஸ்டபுளி" என்றால் குதிரை இலாயத்திலுள்ள குதிரைகளினை எண்ணுபவர் என்று அர்த்தமாம்.


+-+-+-+^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^+-+-+-+


உங்களுக்குத் தெரியுமா?.....

* சதுர வடிவ தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்யும் நாடு....



தர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்றால், சதுர வடிவிலான கண்ணாடி பெட்டிகளில் தர்ப்பூசணிகளினை வளர்ப்பதன் மூலமாகும். சதுர வடிவிலான தர்ப்பூசணிகளினை குளிர்சாதனப் பெட்டிகளில் இலகுவாக வைக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றுள் அதிக பொருட்களினையும் உள்ளடக்க முடியும்.

ஜப்பானில் சதுர வடிவ தர்ப்பூசணிகளின் விலையானது($82), வழமையான வட்ட வடிவிலான தர்ப்பூசணிகளின் விலையினை($15-20 ) விடவும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


***

Monday, February 21, 2011

உலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய்.....




உலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய் என்கின்ற பெருமையினை 7வயது நிரம்பிய "மொமோ" [Momo] என்கின்ற செல்லப் பெயரினை உடைய Chihuahua வகையினைச் சேர்ந்த பெண் நாய் பெறுகின்றது.

மேற்கு ஜப்பான், கொரியாமாவில் நடைபெற்ற நாரா(Nara) பொலிஸ் நாய் தேர்வின்போதே 6 பவுண்ட்(2.72கிலோகிராம்) மாத்திரம் நிறையினை உடைய "மொமோ"விற்கு இந்த அதிர்ஷ்டவாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் Golden Retrievers மற்றும் ஜேர்மன் Shepherds வகையினைச் சேர்ந்த நாய்களே ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது "மொமோ", தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுமென பொலிஸ் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

"மொமோ" என்றால் ஜப்பானிய மொழியில் அழகிய இளம் பெண் என அர்த்தமாகும்.

நாய்களில் Chihuahua வகை நாய்களே உருவத்தில் சிறிய நாய்களாகும். Chihuahua என்றால் என்ன தெரியுமா... Chihuahua என்பது மெக்ஸிக்கோ நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் மத்தியில் Chihuahua மாநிலத்திலேயே முதன்முதலில் இந்த வகை நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸ் மோப்ப நாய் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதலாவது Chihuahua இன நாய் "மொமோ" ஆகும்.


***

Thursday, February 17, 2011

பழமை வாய்ந்த இந்துக்கோயிலுக்கு ஆபத்து....




தாய்லாந்து, கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக நம்பப்படுகின்ற 1722 அடி உயரத்தில் அமைந்துள்ள "ப்ரிஹ் விஹார்" என்றழைக்கப்படும் "சிகரேஷ்வரர்" சிவன் கோயில் தொடர்பாக அண்மைய நாட்களில் இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.

நீண்ட காலமாக இந்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் இந்த ஆலயம் தொடர்பாக, பல்வேறு காலகட்டங்களில் தாய்லாந்து தேசமும், கம்போடியா தேசமும் மாறி மாறி உரிமை கொண்டாடி வந்ததுடன் தமக்கிடையே யுத்தங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.




இதன் காரணத்தினால் இந்தப்பிரச்சினையினை விசாரணை செய்த நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம், 1962ம் ஆண்டு ஆலயமும், சுற்றுப்புறமும் கம்போடியா நாட்டுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கி தீர்த்துவைத்தது. 1908ம் ஆண்டு கம்போடிய நாட்டினை ஆட்சி செய்த பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் இந்தப்பகுதியினை கம்போடியாவின் ஒரு பகுதியாகவே குறித்துக்காட்டியிருந்தனர். இந்த வரைபடமானது வலுவானது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பிரகாரம் தாய்லாந்து நாடானது ஆலயத்தினை கம்போடியாவிடம் ஒப்படைத்தது.

ஆனால் இத்தீர்ப்பில், ஆலயத்தினை அண்டியுள்ள 1.8 சதுரமைல் பரப்பளவான பிரதேசம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என சரியாக வரையறை செய்யப்படவில்லை.

கம்போடியாவிலிருந்து இந்த ஆலயத்துக்கு செல்லவேண்டுமாயின் அந்த நிலப்பரப்பின் வழியாகவே செல்லவேண்டும். அந்தப்பகுதி தனக்கே சொந்தமானது என தாய்லாந்து உரிமை கோருகின்றது. இதன் காரணத்தினாலேயே இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.

ஆனால், பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் 1.8 சதுரமைல் காட்டுப்பிரதேசம் கம்போடியாவுக்கு சொந்தமானதாகவே குறித்துக்காட்டப்பட்டுள்ளதாம்.



900ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்துக்கு உலக மரபுரிமை இடமாக 2008ம் ஆண்டு ஜூலை, ஐ.நா யுனெஸ்கோ அமையமானது அங்கீகாரம் வழங்கியது.

இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான பேதங்களைக் கைவிட்டு உலக பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த சிவன் கோயிலினை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.


***
Blog Widget by LinkWithin