உலக வெப்பமயமாதலின் காரணமாக ஆர்ட்டிக் துருவப் பிராந்தியங்களில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன. இதன் காரணமாக இந்தப் பிராந்தியத்தினை வாழ்விடமாகக் கொண்ட துருவக் கரடிகள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பிலான விழிப்புணர்வினை உலகளாவியரீதியில் ஏற்படுத்தும்முகமாக இத்தினமானது அனுஷ்டிக்கப்படுகின்றது.
துருவக் கரடிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான சில தகவல்கள் வருமாறு....!
♥ துருவக் கரடியின் விஞ்ஞானப் பெயர் "Ursus Maritimus " இந்த இலத்தீன் பெயரின் அர்த்தம் "கடல் கரடி" என்பதாகும்.
♥ அச்சுறுத்தலினை எதிர்நோக்கியுள்ள உயிரினமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள துருவக் கரடிகள் பெரும்பாலும் ஆர்ட்டிக் பிராந்தியத்திலும், ஐக்கிய அமெரிக்கா(அலஸ்கா), கனடா, ரஷ்யா, கிறீன்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் பனிபடர்ந்த பிராந்தியங்களினையும் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. உலகில் 60% ஆன துருவக் கரடிகள் கனடா நாட்டிலேயே வாழ்கின்றனவாம்.
♥ பாலூட்டி வர்க்கத்தினைச் சேர்ந்த துருவக் கரடிகளின் பிரதானமான உணவு சீல்கள் ஆகும். துருவக் கரடிகள் மிகச் சிறந்த மோப்ப சக்தியினைக் கொண்டவையாகும். இவை ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள சீல்களினைக்கூட தமது மோப்ப சக்தியினால் உணர்ந்து கொள்கின்றன.
♥ துருவக் கரடிகள் மிகச் சிறப்பாக நீந்தக்கூடியவையாகும். இவை மணித்தியாலத்திற்கு 6 மைல்கள் என்ற வேகத்தில் நீந்துகின்றன. மேலும் இவை நாளொன்றில் 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நீந்தக்கூடியவையாம்.
♥ துருவக் கரடிகள் தனது ஆயுளின் அரைவாசிக்கும் அதிகமான காலப்பகுதியினை உணவினை வேட்டையாடுவதிலேயே கழிக்கின்றன. ஆனால் இதன் வேட்டையாடலில் 2% வகிபாகமே வெற்றிகரமானவையாம்.
♥ துருவக் கரடிகளில் புதிதாக பிறந்த குட்டிகளின் நிறை அண்ணளவாக் 1 பவுண்ட் (0.45 கிலோகிராம்) ஆகும். வளர்ச்சியடைந்த பின்னர் இவை 6–10அடி உயரம்வரை வளர்வதுடன் 400–700கிலோகிராம் பருமனினையும் அடைகின்றன.
♥ பருமனிலும், உயரத்திலும் ஆண் துருவக் கரடிகளுக்கும், பெண் துருவக் கரடிகளுக்குமிடையே பாரியளவிலான வேறுபாடு உண்டு. ஆண் துருவக் கரடிகள், பெண் துருவக் கரடிகளினை விடவும் 2 அல்லது 3 மடங்கு பெரியவையாகும்.
♥ துருவக் கரடிகளின் உண்மையான நிறம் வெள்ளை இல்லை. அவை கறுப்பு நிற தோலினைக் கொண்டதுடன், நிறமற்ற முடியினையும் கொண்டவையாகும். அவற்றின் வெள்ளை நிறத் தோற்றத்திற்கு காரணம் என்னவெனில், சூரிய ஒளி அதன் உடலிலுள்ள முடியில் பட்டு பிரதிபலிப்பதனாலாகும்.
♥ உலக வெப்பமயமாதல் காரணமாக துருவக் கரடிகளின் பிரதான் வாழிடமாக விளங்குகின்ற கடல் பனிப்பாறைகள் இழக்கப்படுதல் துருவக் கரடிகளுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இவற்றுடன் மனிதன் – துருவக் கரடிகள் மோதல், கைத்தொழில் விளைவுகள் ஆகியனவும் விளங்குகின்றன.
துருவக் கரடிகளின் முக்கியத்துவம்
♥ ஆர்ட்டிக் பிராந்தியங்களில் ஏற்படுகின்ற சூழல் மாற்றங்களினை மதிப்பிடுவதற்கு துருவக் கரடிகள் உதவி புரிகின்றன. ஏனெனில் ஆர்ட்டிக் பிராந்தியத்தின் கடற்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களினை வெளிப்படுத்துகின்ற அபாய சமிக்ஞைகளாக துருவக் கரடிகள் விளங்குகின்றன.
♥ ஆர்ட்டிக் பிராந்தியத்தின் உணவுச் சங்கிலியின் பிரதானமானதொரு உயிரியாக துருவக் கரடிகள் விளங்குகின்றன. இதன் மூலம் ஆர்ட்டிக் பிராந்தியத்தின் ஆரோக்கியமான சுற்றுச் சூழலிற்கு அவை உதவிபுரிகின்றன.
***