உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரமாகும். பசுபிக் என இந்தச் சமுத்திரத்திற்கு பெயர் சூட்டியவர் யார் தெரியுமா?....... உலகின் முதல் நாடு காண் பயணியாகிய பேர்டினட் மகலன் ஆவான்.
போர்த்துக்கேயரான பேர்டினட் மகலன், அரச கடற்படையில் சேர்வதற்கான தனது விண்ணப்பத்தினை போர்த்துக்கேய நாட்டு அரசனாகிய இமானுவேல் நிராகரித்ததன் காரணமாக தன் நாடு மீது கொண்ட பற்றுறுதியை விலக்கிக்கொண்டு ஸ்பெய்ன் நாட்டுக்கு பயணமாகி, 1519ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள், மகலனும், அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ரிடினினாட், கொன்செப்சியன், சென் அன்ரோனியோ, விக்டோரியா, சன்ரியாகோ ஆகிய 05 சிறிய படகுகளிலில் உலகினைச் சுற்றிய தனது நாடு காண் பயணத்தினை ஆரம்பித்தான். புதிய நாடுகளைக் கண்டறியும் பல்வேறு இடர்களை தனது கடற்பயணத்தில் எதிர்கொண்டு எஞ்சிய 3 படகுகளுடன் 38 நாட்கள் தென் அமெரிக்க ஜலசந்தியைச் சுற்றிலும் பயணித்து நவம்பர் மாத இறுதிவாரத்தில், மகலன் தனது சகாக்களுடன் புதிய சமுத்திரத்தில் பிரவேசிக்கின்ற அந்த தருணத்தினை “அழகான, அமைதியான கடல்” (“Beautiful, Peaceful Ocean” )என மகலன் வர்ணிக்கின்றான். “Pacific - பசுபிக்” என்பதன் அர்த்தம் “அமைதியானது” என்பதாகும்.
பேர்டினட் மகலன்
முதல் நாடுகாண் பயணியாகிய பேர்டினட் மகலன் அவர்கள் புதிய இந்த சமுத்திரத்தினைக் கண்டுபிடித்தபோது இது பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டதால் இதற்கு “பசுபிக் - Pacific” என பெயர் சூட்டினாலும் உண்மையில், உலகில் பல கடல் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு தோற்றுவாயாக பசுபிக் சமுத்திரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பசுபிக் சமுத்திரத்தில் தனது பயணத்தினை தொடர்ந்த மகலன் 1521ம் ஆண்டு மார்ச் மாதம் தற்போது “பிலிப்பைன்ஸ்” என்றழைக்கப்படுகின்ற நாட்டினைக் கண்டுபிடித்தான். சில வாரங்களுக்குப் பின்னர் மகலன், பிலிப்பைன்ஸ் ஆதிவாசிகளுடனான சமரில் முழுமையாக காயமடைகின்றான். கடற்பயணத்தில் எஞ்சிய விக்டோரியா என்கின்ற படகில் மகலனின் 18 சகாக்கள் ஸ்பெய்ன் நாட்டினைச் சென்றடைந்து உலகினைச் சுற்றிய முதலாவது வெற்றிகரமான நாடு காண் பயணத்தினை நிறைவுசெய்துகொண்டனர்.
மகலனின் நாடு காண் கடற்பயணப் பாதையானது வாசனைத் திரவிய வர்த்தகத்தில் பொருத்தமில்லாத பயணப்பாதை நிரூபித்தாலும் பேர்டினட் மகலனின் கடற்பயணமானது ஒரு தனி நபரின் மிகச் சிறந்த சாதனையாக மதிக்கப்படுகின்றது.
பசுபிக் சமுத்திரம் தொடர்பான முக்கியமான தகவல்கள்.......
உலகில் மிகப்பெரிய சமுத்திரமாகிய பசுபிக் சமுத்திரமானது 155 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள்(60மில்லியன் சதுர மைல்கள்) பரப்பளவிற்கு பரந்து வியாபித்திருக்கின்றது. பசுபிக் சமுத்திரமானது, உலக மொத்த நிலப்பரப்பினை விடவும் பெரியதாகும், அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பினை விடவும் 15 மடங்கு பெரியதாகும்.
பசுபிக் சமுத்திரத்தின் சராசரி ஆழம் 4637மீற்றர்கள்(2.8மைல்) ஆகும். அத்துடன் உலகில் மிக ஆழமான இடமாகிய மரியானா ஆழி அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மரியானா ஆழியானது 10924மீற்றர்கள்(அண்ணளவாக 7மைல்கள்) ஆழமானதாகும். பசுபிக் சமுத்திரத்தின் ஆழத்தின் காரணமாக சுனாமி அலைகளானது(பூகம்பத்தின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அலைகள்) மணித்தியாலத்திற்கு 750கிலோமீற்றர் வேகத்தில் கரைகளை அடைகின்றன.
பசுபிக் சமுத்திரத்தில் 17 சுதந்திர தேசங்கள் அமைந்துள்ளன. அவையாவன அவுஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நவ்ரு, நியூசிலாந்து, பலவ், பப்வுவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சமாவோ, சொலமன் தீவுகள், தாய்வான், தொங்கா, துவாலு, வனவாட்டு. அத்துடன் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவுகள் அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மேலும், அவுஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களும், சிறு தீவுகளும் பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பினை அவுஸ்திரேலியாக் கண்டமானது தன்னகத்தே கொண்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் 25000இற்கும் அதிகமான தீவுகள் காணப்படுகின்றன, உலகிலுள்ள ஏனைய சமுத்திரங்களில் அமைந்துள்ள தீவுகளினை ஒன்று சேர்க்கின்ற போதும் அவை பசுபிக் சமுத்திரத்திங்களில் அமைந்துள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக காலநிலையில் பிரதான மாறுதல்களைக் ஏற்படுத்துகின்ற எல் நினோ, லா நினா ஆகிய காலநிலைகள் பசுபிக் சமுத்திரத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பொறுத்தே தோற்றம்பெறுகின்றன.
உலகிலுள்ள 75%மான எரிமலைகள் பசுபிக் வலயத்திலேயே அமைந்துள்ளன, இதனால் இவ்வலயமானது தீப்பிழம்பு வளையம் - Ring of Fire என அழைக்கப்படுகின்றது.
பசுபிக் சமுத்திரத்தின் பிரதான வளமாக மீன்கள் விளங்குகின்றன. 1996ம் ஆண்டு, உலகில் மீன் உற்பத்தியில் 60% ஆன வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரமே வழங்கியது. அத்துடன் அவுஸ்திரேலியா, பப்வுவா நியூ கினியா, நிக்கரகுவா, பனாமா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முத்து உற்பத்தியில் விளைச்சலினைப் பெறுவதற்கு பசுபிக் சமுத்திரம் கைகொடுக்கின்றது. மேலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஐக்கிய அமெரிக்கா. பெரு ஆகிய நாடுகள் மசகு எண்ணெய், உயிர் வாயு ஆகிய சக்தி மூலங்களினைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதானமாக பசுபிக் சமுத்திர ஒதுக்கங்களிலேயே தங்கியுள்ளன.
பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிரதான துறைமுகங்களாக பாங்கொக்(தாய்லாந்து), கொங் கொங், லொஸ் ஏஞ்சல்(ஐ.அமெரிக்கா), மணிலா(பிலிப்பைன்ஸ்), புசான்(தென்கொரியா), சான் பிரான்சிஸ்கோ(ஐ.அமெரிக்கா), சீட்டில்(ஐ.அமெரிக்கா), ஷாங்காய்(சீனா), சிங்கப்பூர், சிட்னி(அவுஸ்திரேலியா), வெலிங்டன்( நியூசிலாந்து), யொகோஹமா(ஜப்பான்), விளாடிவொஸ்டோக்(ரஷ்யா), காவ் - சியுங்(தாய்வான்) ஆகியன விளங்குகின்றன.
***