இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த 1வது டெஸ்ட் போட்டியானது, 2000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி, இந்திய அணியினை 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியானது இரு அணிகளும் தமக்கிடையே மோதிய 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில், சில சுவாரஷ்சியமான கிரிக்கெட் தகவல்கள் உங்களுக்காக…………
1990ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் சுவாரஷ்சியமானதாகும். ஃபொலோ - ஒன் நிலையிலிருந்து மீள்வதற்கு 24 ஓட்டங்களினைப் பெறவேண்டிய கட்டத்தில் இறுதிவிக்கட் இணைப்பாட்டத்தில் இந்திய அணியின் கபில் தேவ் மற்றும் நரேந்திர கிர்வானி ஆகியோர் களத்தில் இருந்தனர். வலது முறை சுழற்பந்துவீச்சாளர் எட் ஹெம்மிங்ஸ் வீசிய முதலிரண்டு பந்துவீச்சுகளினையும் தடுத்தாடிய கபில் தேவ், மிகுதி நான்கு பந்துவீச்சுக்களையும் ஆறு ஓட்டங்களாக விளாசினார். அடுத்த ஓவரின் முதல் பந்துவீச்சினை எதிர்கொண்ட நரேந்திர கிர்வானி, அங்குஸ் ஃப்ரெசரினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
*** டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் கபில் தேவ் ஆவார்.
மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ். இவரின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 57 இலும் அதிகமாகும். ஆனால் இவரின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சராசரி 0 ஆகும். ஏனெனில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் 1973ம் ஆண்டு ஒரேயொரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்குபற்றி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக சதத்தினை முச்சதமாகப்(365* எதிர் பாகிஸ்தான்) பெற்ற ஒரே வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆவார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓட்டங்களினை விடவும் விக்கட்களினை அதிகமாக வீழ்த்திய வீரராக இந்தியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் விளங்குகின்றார். 58 டெஸ்ட் போட்டிகளில் 177 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ள BS சந்திரசேகர் 242 விக்கட்களினை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 நாடுகள் பங்குபற்றிய முதலாவது முத்தரப்பு டெஸ்ட் சுற்றுத்தொடரில்(27 மே 1912 – 22 ஆகஸ்ட் 1912) பங்குபற்றிய நாடுகள் இங்கிலாந்து, ஆஸி, தென்னாபிரிக்கா ஆகியனவாகும். இச் சுற்றுத்தொடரினை நடாத்திய நாடான இங்கிலாந்து(4 வெற்றி, 2 சமநிலை) முதல் ஸ்தானத்தினையும், ஆஸி(2 வெற்றி, 1 தோல்வி, 3 சமநிலை) இரண்டாம் ஸ்தானத்தினையும், தென்னாபிரிக்கா(5 தோல்வி, 1 சமநிலை) மூன்றாம் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டன.
***
No comments:
Post a Comment