Saturday, April 30, 2011

ஆயுதப்படையினரும், காவல் துறையினரும் தேர்தலில் வாக்களிக்கமுடியாத நாடு எது ?..........

சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களினைக் கொண்ட பதிவு உங்களுக்காக.......

 பிஜி, சிலி, எகிப்து ஆகிய நாடுகளின் அரசியலமைப்பின் பிரகாரம் அந்த நாட்டுத் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படமுடியுமாம்.

 தென் அமெரிக்க கண்டத்தில் 47.8% வகிபாகத்தினை பிரேசில் நாடு வகிக்கின்றது.

 புவியின் நிலப்பரப்பில் பத்தில் ஒரு பங்கு வகிபாகத்தினை இமாலயமலைத்தொடர் பரந்திருக்கின்றது.

 டொமினிக்கன் குடியரசு சட்டத்தின்பிரகாரம், ஆயுதப்படையினரும், காவல் துறையினரும் தேர்தலில் வாக்களிக்கமுடியாது.

 பொதுவாக சிவப்பு, மஞ்சள் மற்றும் செம் மஞ்சள் போன்ற நிறங்களினையே துரித உணவகங்களில் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இந்த நிறங்கள் பசியினை தூண்டுவதனாலாகும்.

 ஒலிவ் மரங்கள் 1500 ஆண்டுகளுக்கும் அப்பால் வாழக்கூடிய இயலுமை கொண்டவையாகும்.




 அமிஷ் இன மக்களில் தாடி வைத்திருக்கின்றவர்களிடையே காணப்படுகின்ற பொதுச் சிறப்பியல்பு யாது தெரியுமா?..... அமிஷ் இன மக்களில் தாடி வைத்திருந்தால் அவர் திருமணமானவர் என்று அர்த்தமாம்.

அமிஷ் இன மக்கள் தொடர்பில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்..... இப்படியும் மக்கள் உள்ளனரா?.....

 உலகம் பூராகவும் உள்ள வெள்ளி மூலகத்தில் அரைவாசிக்கும் அதிகமான பங்கு பிரதானமாக ஒரு கைத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றதென என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கைத்தொழில் துறை யாது?
o புகைப்படக்கலைத் தொழிற்துறையில்

 அமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா மாநிலம் விளங்குகின்றது. ஐக்கிய அமெரிக்கா, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன் டொலர்களுக்கு எந்த நாட்டிடமிருந்து கொள்வனவு செய்தது?
o ஸ்பெய்ன்

***

Wednesday, April 20, 2011

உடல் நிறையில் அதிக பங்கில் மூளையினைக் கொண்ட பறவை......

ஒரு உயிரினத்தின் தொழிற்பாட்டில் அவற்றின் மூளையானது பிரதான வகிபாகத்தினை வகிக்கின்றது.

உயிரினங்கள் சிலவற்றின் மூளை தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக......

 காண்டாமிருகத்தின் மூளையானது அவற்றின் மூக்கினைவிடவும் சிறியதாகும்.





 பறவைகளில், அதனது உடல் நிறையுடன் ஒப்பிடுகின்றபோது அதிக பங்கில் மூளையினை கொண்டுள்ள பறவை ஹம்மிங்பேர்ட் ஆகும். ஹம்மிங்பேர்ட்டின் உடல் நிறையில், அதன் மூளையின் பங்கு 4.2% ஆகும்.





 ஒக்டோபஸ்சின் மூளையில், சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.

 மனிதனின் உடல் நிறையில் மூளையின் பங்கு 2% ஆகும். ஆனால் 20% இற்கும் அதிகமான உடற் சக்தியினை மூளையே பயன்படுத்துகின்றது.



 எறும்புகளின் மூளையில் 250,000 இற்கும் மேற்பட்ட மூளைக்கலங்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியனுக்கு மேற்பட்ட மூளைக்கலங்கள் உள்ளன. 40000 எறும்புகளின் மூளையினை ஒன்றுசேர்க்கின்றபோது அது ஒரு மனிதனின் மூளையின் அளவினை ஒத்ததாகும்.

 பட்டுப்பூச்சிகளுக்கு 11 மூளைகள் உண்டு, ஆனால் அவற்றில் அரைவாசியினையே(5) அவை பயன்படுத்திக்கொள்கின்றன.

 அட்டைகளுக்கு 32 மூளைகள் உண்டு.

 நட்சத்திரமீன்களுக்கு மூளை இல்லை.

 தீக்கோழிகளின் கண்களானது அவற்றின் மூளையினைவிடவும் பெரியதாகும்.

 பூனைகளின் மூளை தொழிற்படுவதற்கு அதிகமான சக்தி தேவைப்படுகின்றதாம். இதனால் அவற்றின் இருதயமானது 20% இற்கும் அதிகமான குருதியினை உடனடியாக பாய்ச்சுகின்றது.

 உலகில் மிகப்பெரிய மூளையினை கொண்டுள்ள உயிரினமாக நீலத்திமிங்கிலங்கள் விளங்குகின்றன... நீலத்திமிங்கிலங்களே, பாலூட்டிகளில் மிகப்பெரியவையாகும்.

***

Wednesday, April 13, 2011

ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்றவர்…

கடந்த 11ம் திகதி மேர்பூரில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேன் வொட்சன் 185 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் இந்தச் சாதனை மத்தியூ ஹெய்டன்(181*) வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


"சிக்ஸ்" மழை பொழிந்த சேன் வொட்சன்



அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சேன் வொட்சன் 96பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள் , 15 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 185 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரராக சேன் வொட்சன் சாதனைபடைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த சேவியர் மார்ஷல் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மார்ஷல், 2008 ஆகஸ்ட் 22ம் திகதி கிங் சிட்டியில் கனடா அணிக்கெதிராக 12 ஆறு ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் தனிநபர் ஒருவர் பெற்ற ஓட்டங்களில் பெளண்டரிகள்(4’s & 6’s) மூலம் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள்....

 சேன் வொட்சன் 185*(96), (150ஓட்டங்கள்; 15- 6’s & 15-4’s) , அவுஸ்திரேலியா v பங்களாதேஷ், மேர்பூர்,2011/12




 ஹேர்ஷல் கிப்ஸ் 175(111), (126ஓட்டங்கள்; 7- 6’s & 21-4’s) , தென்னாபிரிக்கா v அவுஸ்திரேலியா, ஜொகன்னஸ்பேர்க், 2006/07

 மஹேந்திரசிங் டோனி 183*(145), (120ஓட்டங்கள்; 10-6’s & 15- 4’s), இந்தியா v இலங்கை, ஜெய்பூர் 2005/06

 சச்சின் டெண்டுல்கர் 200*(147), (118ஓட்டங்கள்; 3-6’s & 25- 4’s) , இந்தியா v தென்னாபிரிக்கா, குவாலியூர், 2010

 சயீட் அன்வர் 194(146), (118ஓட்டங்கள்; 5- 6’s & 22- 4’s), பாகிஸ்தான் v இந்தியா,சென்னை, 1997/98

 லூ வின்சென்ட், 172(120), (118ஓட்டங்கள்; 9- 6’s & 16-4’s) , நியூசிலாந்து v சிம்பாப்வே, புலவாயோ, 2005/06


++++++++++++---------++++++++++++++++++++


"கர" சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!!!



***

Monday, April 11, 2011

18ம் நூற்றாண்டின் இறுதி வருடத்தின், இறுதி மாதத்தின், இறுதி வாரத்தின், இறுதி நாளின், இறுதி மணித்தியாலத்தில் இறந்த பிரபலம் யார் தெரியுமா?...

உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.......

Ø கம்போடியா நாட்டினை 1975-79ம் ஆண்டுவரை ஆட்சிசெய்து 2மில்லியன் மக்களின் கொலைக்கு காரணகர்த்தாவாக விளங்கிய சர்வாதிகாரி பொல்போர்ட் ஆவான். பொல்போர்ட் 17.4.1975ல் கம்போடியாவின் தலைநகரம் நாம் பென்னை கைப்பற்றி தனது நாட்டின் பெயரினை கம்பூச்சியா என மாற்றிக்கொண்டான். சர்வாதிகாரி பொல்போர்ட் ஆசிரியராக கடமையாற்றியவனாம்.

Ø ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது(ஒரேயொரு) வெளிநாட்டில் பிறந்த முதற்பெண்மணி என்ற பெருமைக்குரியவர் லூசியா அடம்ஸ் ஆவார். ஐ.அமெரிக்காவின் 6வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் குயின்சி அடம்ஸ்சின் பாரியாரே இவராவார்.

Ø 2ம் உலகப் போர் காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு அரிசியினை வழங்கிய தனித்துவ வழங்கலாளர் அங்கிள் பென்(Uncle Ben) ஆவார்.

Ø 2ம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் தொழில் அமைச்சராக பதவிவகித்ததுடன், 2ம் உலகப் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் முக்கிய இராஜதந்திர செயற்பாடுகளில் பிரதான வகிபாகத்தினை வகித்தவர் எர்னெஸ்ட் பெவின் ஆவார். இவர் தனது 11வயதிலே பாடசாலை படிப்பிலிருந்து இடைவிலகியவராம்.

Ø 18ம் நூற்றாண்டின் இறுதி வருடத்தின், இறுதி மாதத்தின், இறுதி வாரத்தின், இறுதி நாளின், இறுதி மணித்தியாலத்தில் இறந்த ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபலம் யார் தெரியுமா?... ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோர்ஜ் வாசிங்டன் ஆவர்களேதான்...


**********************************************



சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!!!


மலரவிருக்கின்ற "கர" சித்திரைப் புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் சந்தோசங்களினை அள்ளி வழங்குவாயாக.....

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

"கர" சித்திரைப் புத்தாண்டு எம் வாழ்வில் கை கொடுப்பாயாக...!!!


***

Thursday, April 7, 2011

பெயர் வரக் காரணம் என்ன?.... # 05

மிகப் பெரியளவானவற்றினை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றபோது "ஜம்போ"( Jumbo) என்றே சொல்கின்றோம். உதாரணமாக; A Jumbo Jet, Jumbo Shrimp, etc....

ஆங்கிலத்தில், “Jumbo” என்கின்ற இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?......
"ஜம்போ" என்கின்ற இந்த சொல்லானது சர்க்கஸ் நிகழ்வுக்கு பயன்படுத்திய ஒரு யானையின் பெயரே ஆகும்.

பிரான்ஸ் சூடானிலிருந்து (தற்சமயம் மாலி என்கின்ற பெயரினால் அழைக்கப்படும் நாடு) பாரிஸ் மிருகக்காட்சிச்சாலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சிச்சாலை முகாமையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டதே இந்த ஆபிரிக்க யானையாகும். இந்த யானையின் நிறை 6.5 தொன்களாகும்.

பின்னர் இந்த யானையானது 1882ம் ஆண்டு அமெரிக்க சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த யானையானது மிகவும் அழகியதாகவும், எல்லோராலும் விரும்பப்படுமொன்றாகவும் இருந்ததாம்.

துரதிர்ஷ்டம்:- 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி, இந்த யானையானது புகையிரதக் கடவையினைக் கடந்தபோது புகையிரதத்தினால் மோதுண்டு ஸ்தலத்திலேயே மரணமாகியது. இந்த விபத்தில் புகையிரத சாரதியும் மரணமானர்.

அமெரிக்காவின் ஒன்ராறியோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜம்போ யானையின் சிலை


ஜம்போ என்கின்ற இந்த யானை மரணமடைந்தாலும், “JUMBO” என்கின்ற இந்த யானையின் பெயரானது ஆங்கிலத்தில் முக்கியமானதொரு சொல்லாக இரண்டறக் கலந்துவிட்டது.


++++++++++++++++--------------++++++++++++++++++++

தினக்குரல் பத்திரிகைக்கு அகவை 15.......



இலங்கையிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகை நேற்று (06.04.2011) தனது 15வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.

தினக்குரல் பத்திரிகைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

ஆயிரம் மலர்கள் மலரட்டும்....!!!


***

Sunday, April 3, 2011

28 வருடங்களின் பின் உலகக்கிண்ணம் இந்தியா வசம்.......!!!



கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெற்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் நேற்று மோதிக்கொண்டன.

உலகக்கிண்ண கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

இந்தியா, மும்பாய் வன்கடே மைதானத்தில், பகலிரவுப்போட்டியாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார, தாம் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்களை இழந்து 274 என்கின்ற சுமாரான ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் இன்னிங்ஸ்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம்புகுந்த டில்சான், தரங்க ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் ஓட்டங்களினை எடுக்கமுடியாமல் திணறினர். இலங்கை அணியின் 1வது விக்கட் 17ஓட்டங்களில் வீழ்ந்தது. உபுல் தரங்க 20 பந்துகளினை எதிர்கொண்டு வெறும் 2 ஓட்டங்களில் சஹீர் கான் வீசிய பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடுகளம் புகுந்த அணித்தலைவர் குமார் சங்கக்காரவும், டில்சானும் நிதானமாக துடுப்பெடுத்தாடி தமக்கிடையே 43 ஓட்டங்களினைப் பகிர்ந்துகொண்டர். டில்சான் 43 பந்துகளினை எதிர்கொண்டு 33 ஓட்டங்களினைப் பெற்றபோது ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் விக்கட் முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜோடி சேர்ந்த மஹேல ஜயவர்த்தன ~ குமார் சங்கக்கார ஆகியோர் தமக்கிடையே 62 ஓட்டங்களினைப் பகிர்ந்துகொண்டர். தேவையற்ற ஆட்டப்பிரயோகத்துக்கு சென்று குமார் சங்கக்கார, யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் வி.காப்பாளர் தோனியிடம் பிடிகொடுத்து 48ஓட்டங்களில்(67பந்துகள்) ஆட்டமிழந்தார். ஆடுகளத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மஹேல , திலான் சமரவீர மற்றும் சாமர கப்புகெதர ஆகியோருடன் முறையே 57ஓட்டங்களினையும், 03 ஓட்டங்களினையும் இணைப்பாட்டமாகப் பகிர்ந்துகொண்டார். மஹேலவுடன் ஜோடி சேர்ந்த குலகேகர சிறப்பாக துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 32 ஓட்டங்களினைப்(6’s – 1, 4’s -1) பெற்று ஆட்டமிழக்க களம்புகுந்த திசர பெரேரா ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்தனர். வெறும் 9 பந்துகளில் 21ஓட்டங்களினை திசர பெரேரா பெற்றுக்கொண்ட அதேவேளை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மஹேல 84 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதத்தினைப் பூர்த்திசெய்தார். 88 பந்துகளினை எதிர்கொண்டு 103 ஓட்டங்களினை பெற்ற மஹேல இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குறிப்பாக, இறுதி 5 ஓவர்களிலும்(துடுப்பாட்ட பவர் பிளே) 63 ஓட்டங்கள் பெறப்பட்டன, சஹீர் கானின் இறுதி ஓவரில் 18 ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தான் வீசிய முதல் 5 ஓவர்களிலும் 6 ஓட்டங்களினையே வழங்கிய சஹீர் கான், இறுதி 5 ஓவர்களிலும் 54 ஓட்டங்களினை வாரி வழங்கினார். (10-3-60-2)

பந்துவீச்சில் சஹீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கட்களினையும், ஹர்பஜன் சிங் 1 விக்கட்டினையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு 275 என்கின்ற ஓரளவு சவாலான ஓட்ட இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி லசித் மாலிங்கவின் 2வது பந்துவீச்சிலே சேவாக் ஓட்டமெதுவும் பெறாமல் LBW இல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சச்சின் மாலிங்கவின் பந்துவீச்சில் வி.கா சங்காரவிடம் பிடிகொடுத்து டெண்டுல்கர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 31 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது. தொடர்ந்து தமக்கிடையே 81 ஓட்டங்களினைப் பகிர்ந்துகொண்டனர் கோஹ்லி, காம்பீர் ஆகியோர். கோஹ்லி 35 ஓட்டகளில் டில்சானின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழக்க, ஆடுகளம் புகுந்த அணித்தலைவர் தோனி, காம்பீருடன் இணைந்து ஆட்டத்தின் போக்கினை மாற்றினார். தமக்கிடையே 109 ஓட்டங்களினைப் பகிர்ந்துகொண்டு காம்பீர் 122பந்துகளை எதிர்கொண்டு 97 ஓட்டங்களில் திசர பெரேராவின் பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். 30 ஓட்டங்களினைப் பெற்றிருந்தபோது காம்பீரின் பிடியெடுப்பு குலசேகரவினால் தவறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதில் வெற்றி இலக்கு 10பந்துகள் மீதமிருக்க தோனியின் சிக்ஸ் ஆட்டத்தினை முடித்துவைத்தது. தோனி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களினையும் , யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

இதன் மூலம் இந்திய அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்று 10வது உலகக்கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.

பணமழை.....

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை , இந்தியக் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் 1 கோடி ரூபா, பயிற்சியாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா, தேர்வாளுக்கு தலா 25 இலட்சம் ரூபா பரிசுத்தொகையினையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இறுதிப்போட்டியின் சிறப்பம்சங்கள்.....

 இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி கிண்ணத்தினை வெல்வது இது 3வது முறையாகும்.
 விக்கட் காப்பாளர் அணித்தலைவராக இருந்த அணி கிண்ணத்தினை வெல்வது இது முதல் முறையாகும்.
 முதலில் துடுப்பெடுத்தாடிய அணியில் வீரரொருவர் சதம் பெற்றும் அணி அணி கிண்ணத்தினை வெற்றிகொள்ளாமை இது முதல் முறையாகும்.


ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன் விருது....



போட்டியின் ஆட்ட நாயகனாக தோனி தெரிவுசெய்யப்பட்டதுடன், சகல துறைப்பெறுபேறுகளுக்காக யுவராஜ் சிங் தொடர் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். யுவராஜ் சிங் துடுப்பாட்டத்தில் 362 ஓட்டங்களினையும்(சராசரி 86.19) பந்துவீச்சில் 15 விக்கட்களினையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யுவராஜ் சிங் இந்தத் தொடர் முழுவதும் 04 ஆட்ட நாயகன் விருது வென்றவராவார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சில் முதன்மை ஸ்தானத்தினைப் பெற்றவர்கள்....



10வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் டில்சான் 500 ஓட்டங்களினைப் பெற்று துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களினைப் பெற்று முதல் ஸ்தானத்தினையும், தனது இறுதி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய சச்சின் 482 ஓட்டங்களினைப் பெற்று 2ம் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் சஹீட் அப்ரிடி மற்றும் இந்திய அணியின் சஹீர் கான் ஆகியோர் தலா 21 விக்கட்களினை வீழ்த்தி முதல் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

ஓய்வு பெற்றார் முரளி........



தனது இறுதி சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய முத்தையா முரளிதரன் எந்தவித விக்கட்டினையும் வீழ்த்தாவிட்டாலும் இந்த தொடர் முழுவதும் மொத்தமாக 15 விக்கட்களினை வீழ்த்தி 5ம் ஸ்தானத்தினை பெற்றுக்கொண்டார். 40 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடி 68 விக்கட்களினை வீழ்த்திய முரளி உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராவார். 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முரளி மொத்தமாக 534 விக்கட்களினை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள அதேவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கட்களினையும் வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஒரேபார்வையில் 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.......

கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெற்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் நிகழ்த்தப்பட்ட & புதுப்பிக்கப்பட்ட சில சாதனைகளின் தொகுப்பு வருமாறு.......

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக உலகக்கிண்ண சுற்றுத் தொடர்களில் விளையாடிய பெருமைக்குரிய வீரராக இந்திய அணியினைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணியின் ஜாவிட் மியண்டாட்டுடன் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் 6 உலகக்கிண்ண சுற்றுத் தொடர்களில் பங்குபற்றியுள்ளனர்.

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக சதங்களைப்(6 சதங்கள்) பெற்ற வீரராக இந்திய அணியினைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் அவுஸ்திரேலிய அணியினைச் சேர்ந்த ரிக்கி பொண்டிங் 5 சதங்களினைப் பெற்று அடுத்த ஸ்தானத்தினை வகிக்கின்றார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், 2000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரராக இந்திய அணியினைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக விக்கட்களினை(68விக்கட்கள்) வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2ம் ஸ்தானத்தில் முத்தையா முரளிதரன் இணைந்துகொண்டார். இதன் முதல் ஸ்தானத்தில் 71 விக்கட்களுடன் அவுஸ்திரேலிய அணியினைச் சேர்ந்த கிளேன் மெக்ராத் வகிக்கின்றார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், 200 பவுண்டரிகளைப் பெற்ற முதல் வீரராக இந்திய அணியினைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி அதிக ஓட்டங்களைப் பெற்றது ~ 338 ஓட்டங்கள்....... ; இதற்கு முன் 250/9, 2003

 உலகக்கிண்ண வரலாற்றில், பங்களாதேஷ் அணிக்கெதிராக முதலாவது சதம் பெற்ற இந்திய வீரராக விரேந்தர் சேவாக் சாதனை படைத்தார். (175ஓட்டங்கள், மிர்பூர்)

 உலகக்கிண்ண வரலாற்றில், இந்திய அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப்(158ஓட்டங்கள்) பெற்ற இங்கிலாந்து வீரராக அன்ரூ ஸ்ட்ராஸ் சாதனை படைத்தார்...... ; இதற்கு முன் - டெனிஸ் ஏமிஸ் ~ 137ஓட்டங்கள், 1975

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக ஓட்ட இலக்கினை அடைந்த அணி என்ற சாதனையினை அயர்லாந்து(329/7) தனதாக்கியது Vs இங்கிலாந்து...... ; 313/7 ~ இலங்கை எதிர் சிம்பாப்வே 1992

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டி ~ இந்தியா(328) Vs இங்கிலாந்து(328/8) ~ 676 ஓட்டங்கள், 18விக்கட் இழப்பிற்கு....... ; இதற்கு முன் அவுஸ்திரேலியா Vs தென்னாபிரிக்கா ~ 671/16, 2007 மார்ச் 24

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிவேக சதத்தினைப் பெற்ற வீரர் ~ கெவின் ஓ பிரைன்(50 பந்துகள்) ~ அயர்லாந்து Vs இங்கிலாந்து... ; இதற்கு முன் 2007ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் மத்தியூ ஹெய்டன், தென்னாபிரிக்க அணிக்கெதிராக 66 பந்துகளில் சதம் பெற்றிருந்தார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், 5விக்கட் பெறுதியினைப் பெற்ற முதல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ~ யுவராஜ் சிங் (இந்தியா Vs அயர்லாந்து)

 உலகக்கிண்ண வரலாற்றில், ஒரே போட்டியில் 5விக்கட் பெறுதியினையும்(5/31), அரைச்சதத்தினையும்(50*) பெற்ற முதல் வீரர் ~ யுவராஜ் சிங் (இந்தியா Vs அயர்லாந்து)

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா), 46 போட்டிகள்.. சாதனை படைத்தார்

 உலகக்கிண்ண வரலாற்றில், விக்கட் இழப்பின்றி அதிக ஓட்ட இலக்கினை(230) அடைந்த அணி ~ இலங்கை Vs இங்கிலாந்து... ; இதற்கு முன்னர் கடந்த 1992இல் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 221 ஓட்ட இலக்கினை மே.தீவுகள் அடைந்தது.

 உலகக்கிண்ண வரலாற்றில், முதல் விக்கட் இணைப்பாட்டமாக உபுல் தரங்க - திலகரத்ன டில்சான் ஜோடி சிம்பாப்வே அணிக்கெதிராக 282 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது..... ; இதற்கு முன் 1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் சயீட் அன்வர், வஜஹத்துல்லா வஸ்தி ஜோடி நியூசிலாந்து அணிக்கெதிராக 194 ஓட்டங்களினை பெற்று இந்த சாதனையினை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 உலகக்கிண்ண வரலாற்றில், மே.தீவுகள் அணிக்கெதிராக குறைந்த ஓட்டங்களினைப்(58ஓட்டங்கள்) பெற்ற அணியாக பங்களாதேஷ் விளங்குகின்றது.

 உலகக்கிண்ண வரலாற்றில், பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்டங்கள் 58 ஓட்டங்கள், Vs மே.தீவுகள் அணி... ; இது ஒரு அணி உலகக்கிண்ணத்தில் பெற்றுக்கொண்ட 4வது மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

 உலகக்கிண்ண வரலாற்றில், மிக இளவயதில்(20வய்து) சதம் பெற்ற வீரராக அயர்லாந்து அணியினைச் சேர்ந்த போல் ஸ்ரிர்லிங் சாதனை படைத்தார். இவர் நெதர்லாந்து அணிக்கெதிராக 70 பந்துகளில் சதமடித்தார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், இரண்டு ஹெட்ரிக் சாதனைகளைப் படைத்த ஒரே வீரர் என்ற சாதனையினை இலங்கை அணியின் லசித் மாலிங்க படைத்தார். (Vs தென்னாபிரிக்கா ~ 2007, & Vs கென்யா ~ 2011)

 உலகக்கிண்ண வரலாற்றில், ஹெட்ரிக் சாதனை படைத்த முதல் மே.தீவுகளின் வீரர் என்ற சாதனையினை கெமர் ரூச் ஏற்படுத்தினார்.( Vs நெதர்லாந்து)

 உலகக்கிண்ண வரலாற்றில், மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையினை சஹீட் அப்ரிடி படைத்தார். (5/16 Vs கென்யா)

 உலகக்கிண்ண வரலாற்றில், தொடர்ச்சியாக 3முறை 4விக்கட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையினைப் படைத்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் சஹீட் அப்ரிடி.(5/16 Vs கென்யா ; 4/34 Vs இலங்கை ; 5/23 Vs கனடா)

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிவேக சதம்(80பந்துகளில்) பெற்ற இலங்கை அணி வீரராக மஹேல ஜயவர்த்தன சாதனை படைத்தார்.( Vs கனடா)…; இதற்கு முன்னர் இந்த சாதனை சனத் ஜெயசூரியாவினால் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 உலகக்கிண்ண வரலாற்றில், 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் தென்னாபிரிக்கா அணியினைச் சேர்ந்த JP டுமினி ஆவார். (Vs நெதர்லாந்து)

 உலகக்கிண்ண வரலாற்றில், தென்னாபிரிக்க அணி பெற்றுக்கொண்ட மிகப்பிரமாண்ட வெற்றியானது நெதர்லாந்து அணிக்கெதிராகவாகும். (231 ஓட்டங்களினால்).... ; இதற்கு முன் 2007ம் ஆண்டு தென்னாபிரிக்க அணி 221 ஓட்டங்களினால் நெதர்லாந்து அணியினை வெற்றிகொண்டமையே அவ்வணியின் சாதனையாகும்.

 உலகக்கிண்ண வரலாற்றில், அறிமுக போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையினை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார். (Vs பங்களாதேஷ், மிர்பூர்)

 உலகக்கிண்ண வரலாற்றில், குறைந்த வயதில்(16வயது) அறிமுகமாகிய இளம் வீரர் என்ற சாதனை கனடா அணியின் நிதிஸ் குமார் வசமாகியது... ; இதற்கு முன் 1997ம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் தல்ஹா ஜுபைர் 17வயதில் உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார்.

 உலகக்கிண்ண வரலாற்றில், பாகிஸ்தான் அணி தமது முதலாவது 10விக்கட் வெற்றியினைப் பதிவுசெய்து கொண்டது. (Vs மே.தீவுகள்)

 உலகக்கிண்ண வரலாற்றில், ஒரே தொடரில் இரண்டு இரட்டைச்சத இணைப்பாட்டங்களினை பதிவுசெய்து சாதனை படைத்த ஜோடி இலங்கை அணியின் உபுல் தரங்க - திலகரத்ன டில்சான்... ( 282 Vs சிம்பாப்வே ; 231* Vs இங்கிலாந்து)

 உலகக்கிண்ண வரலாற்றில், ஒரே தொடரில் அதிக விக்கட்களினைக்(21) கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையினை சஹீட் அப்ரிடி படைத்தார்.. ; இதற்கு முன், வசிம் அக்ரம் 18 விக்கட்களைக் கைப்பற்றியதே சாதனையாக விளங்கியது.

 உலகக்கிண்ண வரலாற்றில், ஒரே தொடரில் அதிக விக்கட்களினைக்(21) கைப்பற்றிய இந்திய அணி வீரர் என்ற சாதனையினை சஹீர் கான் படைத்தார்..

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக தடவைகள்(06) அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இணைந்துகொண்டன..... ; இதற்கு முன் அவுஸ்திரேலிய அணி 06 தடவைகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதே சாதனையாக விளங்கியது.

 உலகக்கிண்ண வரலாற்றில், அதிக சதங்கள்(24) அடிக்கப்பட்டது இந்த 10வது உலகக்கிண்ண தொடரிலாகும்.

11வது உலகக்கிண்ண கிரிக்கெட்



11வது உலகக்கிண்ணப் போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 11வது உலகக்கிண்ணத்தில் உங்களினை மீண்டும் புதுப்புது தகவல்களுடன் சந்திப்போம்.....

***
Blog Widget by LinkWithin