அண்டவெளியிலிருந்து
பூமியில் விழுந்து கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லாக "ஹோவா விண்கல்" விளங்குகின்றது.
1920ம் ஆண்டு நமீபிய
நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன்
பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய
செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று
இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள்
இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.
பிரமாண்டமான
நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு
பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு
வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விண்கல்லானது
9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.
"ஹோவா வெஸ்ட்" என்கின்ற
பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000
ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இவ்விண்கல்லில்,
இரும்புத்தாதுக்கள்82.4%, நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம், ஜெர்மனியும் , இரிடியம் மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோவா விண்கல்லினை
கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை
இவ்விண்கல்லானது
புவியில் வீழ்ந்தபோதும் அதன் காரணமாக விண்கல் வீழ்ந்த பகுதியினை அண்மித்த
பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படாமை விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான ஒரு
சம்பவமாகும். விண்ணிலிருந்து, புவியினை நோக்கி மிக வேகத்தில் வந்து இவ்விண்கல்
வீழ்திருக்குமானால் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் எதிர்பார்க்கப்பட்ட
வேகத்திலும் குறைந்த வேகத்தில் இவ்விண்கல் புவியில் வீழ்ந்தமையால் விண்கல் வீழ்ந்த
பகுதியினை அண்மித்த பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படவில்லை என்பதனை
கோடிகாட்டுகின்றது என தெரிவிக்கப்படுகின்ற அதேதருணம் தட்டை வடிவமைப்பில்
இவ்விண்கல்லானது புவியில் வீழ்ந்த காரணத்தினாலேயே புவியினை நோக்கி வருகின்ற இதன்
வேகம் குறைவடைந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தினை
முன்வைக்கின்றனர்.
1955ம் ஆண்டு மார்ச்
மாதம் நமீபிய அரசாங்கமானது இவ்விண்கல் மற்றும் இப்பிராந்தியத்தினை தேசிய
நினைவுச்சின்னமாகப் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விண்கல்லினைப்
பார்வையிடுவதற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகள்
இப்பிராந்தியத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
***
3 comments:
எவ்வளவு பெரிய கல்...!
தகவலுக்கு நன்றி...
எங்க ஊரில் கூட இதுபோல கல் இருக்கிறது.. ஆனால் அது விண் கல்லா என தெரியவில்லை...
நன்றிகள் சகோ....
Post a Comment