Thursday, March 29, 2012

உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்காபுரி………

யுனான் மாகாணமானது தென்மேற்கு சீனாவில் வெப்பமான மற்றும் ஈரப்பதன் நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மண்ணானது இரும்புத் தாது நிறைந்த வளமான பகுதியாக உள்ளது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் நிலமானது சிவப்பு நிற நிலங்களுக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது.



இங்கே மலைகளைச் சுற்றிக் காணப்படுகின்ற சாய்வு நிலங்களில் பல்வேறு குடும்பங்களினைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமான பலதரப்பட்ட ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற பல்வேறு பயிர்களினையும் பயிரிடுகின்றனர். ஒவ்வொரு பயிரும் தனக்குரிய நிறத்தினைக் கொண்டிருக்கும் அதேவேளை மலை உச்சியின் மீதிருந்து தரையினைப் பார்க்கின்ற போது அவை வானவில் போன்று வித்தியாசமான அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் படங்களினைப் பாருங்கள் இந்த அழகினை வர்ணிக்க வார்த்தைகளே கிடைக்காது…….. சரிதானே?........ சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் இயற்கையின் விந்தையினை தவறவிடாதீர்கள்………











***

Sunday, March 25, 2012

தமது உடல் நிறைக்கேற்ப வருமான வரி செலுத்துபவர்கள்....

சுவாரஸ்சியமான பொது அறிவியல் தகவல்கள் உங்களுக்காக..........


 ஆரம்ப காலங்களில், உயர்ந்த குதியினைக் கொண்ட பாதணிகள் உயர் குடி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதாம்.


 ஐக்கிய அமெரிக்காவில் இரவல் வழங்கும் முதலாவது நூலகத்தினை 1731ம் ஆண்டு பெஞ்சமின் பிராங்ளின் ஸ்தாபித்தார்.

 கம்போடியா நாட்டின் தேசியக்கொடியானது அந்நாட்டின் புராதன ஆலயமாகவும், உலகில் மிகப்பெரிய இந்து ஆலயமாக விளங்கும் அங்கோர்வாட் ஆலயத்தின் உருவப் படத்தினைக் கொண்டுள்ளது.


 ஒரு சராசரி ஆணின் மூளையானது பெண்ணின் மூளையினைப் பெரியதாகும்.

 எமது விண்வெளியில் மிகச்சூடான கிரகம் புதன் கிரகம் என்பது நாமறிந்ததே. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 தொழில்சார் சுமோ மல்யுத்த வீரர்கள் தமது உடல் நிறைக்கேற்பவே வருமான வரி செலுத்துகின்றனராம். சுமோ மல்யுத்தமானது ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டாகும்.


 குதிரைகளின் பற்களானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமாம்.

 தனது தலையினை 270 பாகைக்கு திருப்பக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.

***

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்போம்…!!!




சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...... இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’
என விந்தை அழகு கொஞ்சும் விதமாக சிட்டுக் குருவியினை வர்ணிக்கின்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அந்தவகையில்,2010ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் நாள் சர்வதேச சிட்டுக் குருவிகள் நாளாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.



வீட்டு சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவைகளின் நாளாந்த வாழ்க்கை போராட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுமே இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளின் நகர்ப்புற, மற்றும் கிராமப்புற இயற்கை வாழிடங்கள் மிக அதிகளவில் சரிவடைந்துவருகின்றன.

சிட்டுக்குருவிகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது எம்மை சூழவுள்ள சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களை வெளிப்படுத்துகின்ற ஒரு குறிகாட்டியாக விளங்குகின்றது.

இது நமது சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கான சாத்தியமான தீங்கு விளைவுகலை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கை மணியாகவும் விளங்குகின்றது. அதிகரித்த அளவிலான நுண்ணலை மாசு காரணமாக பாரியளவிலான சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

இன்றைய நவீன யுகத்தில் மனிதனின் வாழ்விடங்கள் மாடி வீடுகளாகியதும், இயற்கை பாதுகாப்பரண்களாகிய மரங்கள் அழிக்கப்படுவதும் சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கு காரணங்களாகும். இதற்கும் மேலாக செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகின்ற கதிர்வீச்சுக்கள் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கத்தினை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி அவற்றின் இருப்பினை கேள்விக்குறியாக்கி சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சியில் பிரதான பங்காற்றுகின்றது. மேலும் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிறிய பறவை இனங்கள் இயற்கையழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துபவை மேலும் இயற்கையின் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பதிலும், வனங்களின் பரவலுக்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் உதவுகின்றன.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இயற்கையின் படைப்பான சிட்டுக்குருவிகளினை அழிவிலிருந்து காப்பாற்ற முன் வருவோமாக……

***
Blog Widget by LinkWithin