Thursday, August 12, 2010

ஒலிம்பிக்கில் ஸ்டெல்லா வோல்ஷ்சின் பெயர் முக்கியத்துவம் பெறுவது ஏனோ?...



போலந்து நாட்டினைச் சேர்ந்த ஸ்டெல்லா வோல்ஷ்[Stanislawa Walasiewicz ~ ஸ்ரன்ரிசலா வலசிவிக்ஸ் எனவும் அழைக்கப்பட்டவர்], 1932ம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்தார். ஒலிம்பிக் மகளிர் 100மீற்றர் ஓட்டப் போட்டியில் 11.9செக்கன் என்ற நேரப் பெறுதியில்[இந்த நேரப் பெறுதி அப்போதைய உலக சாதனையாகும்] ஓடி சாதனை புரிந்த முதல் மகளிர் ஸ்டெல்லா வோல்ஷ் ஆவார்.

ஸ்டெல்லா, 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்டெல்லா 1980ம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி நிகழ்ந்த திருட்டுச் சம்பவமொன்றின்போது அமெரிக்க நாட்டின் கிளிவ்லண்ட், ஒஹாயோவிலுள்ள பொருட்கொள்வனகமொன்றில் தனது 69வது வயதில் பரிதாபகரமாக சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். ஸ்டெல்லா தொடர்பான பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததாம். ஏனெனில் பால்நிலை சோதனையில் ஸ்டெல்லா, பெண் தன்மையினை விடவும் ஆண் தன்மையினையே அதிகம் கொண்டிருந்தார் என்பது தெரியவந்ததாம். இதனால் அவரின் நாமம் "Stella the Fella." என்ற செல்லப்பெயரில் புகழ்பெற்றுவிட்டது. [Fella ~ ஆடவர்]

ஸ்டெல்லா அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


தன்னுடைய வாழ்நாளில் ஸ்டெல்லா, 100 தேசிய மற்றும் உலக சாதனைகளினை நிலைநாட்டினார். இதில் 51 போலந்து சாதனைகளும், 18 உலக சாதனைகளும், 8 ஐரோப்பிய சாதனைகளும் உள்ளடங்கும்.

***

Tuesday, August 10, 2010

இரத்தக்களரி வைரங்கள்....!!!

லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர் யுத்த குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்த தகவலே.

இவர் மீதான குற்றச்சாட்டுகளில், சியாராலியோன் நாட்டின் ஆயுதக்குழுக்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களினை வழங்கி அதற்கு பிரதியுபகாரமாக இரத்தக்களரி வைரக்கற்களினைப்[Blood Diamonds] பெற்றுக்கொண்டாராம் என்கின்ற குற்றச்சாட்டும் உள்ளடங்குகின்றது.


நீதிமன்றில் நவோமி கம்ப்பெல்

1992-2002ம் ஆண்டுவரை நடைபெற்ற சிவில்யுத்தத்தில் 100,000க்கு மேற்பட்டோரின் மரணத்துக்கு சார்ள்ஸ் டெய்லரே காரணம் என அவர்மீது 11 யுத்தக்குற்றங்கள் சுமத்தப்பட்டு 2006ம் ஆண்டுமுதல் ஐ.நா குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் நிறுத்தப்பட்ட ஆபிரிக்க நாடொன்றின் முதல் முன்னாள் தலைவர் சார்ள்ஸ் டெய்லர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


சார்ள்ஸ் டெய்லர்


இந்த வழக்கின் திருப்புமுனையாக பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெல் நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சியாராலியோனுக்கான ஐ.நா விசேட நீதிமன்றில் ஆகஸ்ட் 5ம் திகதி சாட்சியமளித்தார். லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர், பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தொண்டுப்பணிக்கு நிதிதிரட்ட 1997ம் ஆண்டு தென்னாபிரிக்கா சென்றபோது டெய்லர், நவோமிக்கு வைரக்கற்களினை இரகசியமாக வழங்கினாராம். குறிப்பிட்ட அந்த வைபவத்தின்போது சார்ள்ஸ் டெய்லரும், நவோமி கம்ப்பெலும் அருகருகே அமர்ந்திருந்ததாக சர்வதேச ஊடகங்களில் தற்சமயம் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த நவோமி கம்ப்பெல் தனக்கு சிறிய அழுக்கான வைரங்கள் இரகசியமாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவை யாரால் வழங்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறினார். ஆனால் நவோமியின் உதவியாளர்களோ டெய்லர்தான் இந்த வைரக்கற்களினை தனக்கு வழங்கியதாக நவோமி தங்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நவோமி தனக்கு பரிசளிக்கப்பட்ட இந்த வைரங்களினை தென்னாபிரிக்காவிலுள்ள குழந்தைகள் நல நிதியமொன்றுக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த குழந்தைகள் நல நிதிய இயக்குனர் தற்சமயம் அந்த வைரங்களினை தென்னாபிரிக்க பொலிசாரிடம் விசாரணைகளுக்காக கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இயற்கையாகவே அமைந்த வளங்களினை தமது நாட்டுக்காக, தமது மக்களின் வறுமையினை இல்லாமல் செய்வதற்கு பயன்படுத்தாமல் அதிகாரத் தரப்பினரின் ஆதரவுடன் தமது சொந்த நலனுக்காக சட்டவிரோதக்கும்பல்கள் பயன்படுத்திவருகின்றனர் எனக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தவகையில் ஆபிரிக்க கண்டத்தினைச் சேர்ந்த பல நாடுகளில் வைரம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்களுக்காக இரத்தக்களரிகள் நீடித்துவருகின்றமை கவலைதரும் செய்தியாகும்.

***

Saturday, August 7, 2010

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம்....!!!



பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தம் என்கின்ற விவாதமானது பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

இந்த வைரம் பற்றிய பதிவுகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகின்றன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி செய்த மன்னர்களிடம் இந்த வைரம் கைமாறி வந்துள்ளது.

1849ல் பிரிட்டிஷ்ஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

கோஹினூர் வைரமானது ஆரம்பகாலத்தில்(இந்தியா, பாரசீகம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்) 186 கரட் பெறுமதியினைக் கொண்டு நீள்வட்ட வெட்டு வடிவமுடையதாகவிருந்தது.(அதாவது சிறிய கோழி முட்டையினை ஒத்த வடிவம் மற்றும் அளவு).

பட்டை தீட்டப்பட்டு தற்சமயம் 108.93 கரட் பெறுமதியினைக் கொண்டுள்ள கோஹினூர் வைரமானது டவர் லண்டன் அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோஹினூர் வைரமானது, இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்தில், ரேயலசீமா(ரேயலசீமா என்றால் கற்களின் நிலம் என்ற பொருளாம்) வைரக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாம். கோஹினூர் வைரமானது ஒரு அரச பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கைமாற்றாகி வந்தது. இந்த வைரத்தின் உண்மையான பெயர் "சமாண்டிக் மனி" என்பதாகும்.

1739ல் பாரசீக மன்னர் நடீர் ஷா, இந்தியாவினை ஆக்கிரமித்தபோது இந்தவைரத்தினை "ஒளியின் மலை" என்று வர்ணித்திருந்தாராம். "ஒளியின் மலை" என்பதற்கான பாரசீக-அரபுப் பதமானது "கோஹினூர்" என்பதாகுமாம்.

"கோஹினூர்" வைரம் தொடர்பில் ஒரு வழிவந்த வரலாறு உள்ளதாம், அது யாதெனில்; "எவன் இந்த வைரத்தினை வைத்திருக்கின்றானோ அவன் இந்த உலகத்தினை ஆள்வான். ஆனால் இதன் துரதிஷ்டம் யாதெனில் கடவுள் அல்லது ஒரு பெண் மட்டுமே இதனை அணிந்துகொள்ளலாம் என்பதாகும்".



"கோஹினூர்" வைரத்தினை உரிமையாக வைத்திருந்த அரசர்களின் வாழ்க்கையினை நோக்கினால் அவர்களின் வாழ்வில் வன்முறைகள், மரணங்கள், பெளதிக மற்றும் உள தாக்கங்களே நிறைந்துள்ளதால் என்னவோ, பிரிட்டிஷ் மகாராணிகளில் இதுவரை விக்டோரியா மகாராணி மாத்திரமே "கோஹினூர்" வைரத்தினை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937ம் ஆண்டு இந்த வைரமானது தற்சமயம் பிரிட்டிஷ் மகாராணியாக பதவிவகிக்கும் எலிஷபெத் மகாராணியாரின் முடிசூட்டும் விழாவின்போது அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கமானது "கோஹினூர்" வைரத்தினை தம்மிடம் கையளிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தினை பலதடவைகள் கேட்டுக்கொண்டாலும் அதற்கு பதவிவகித்த எந்தவொரு பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து அதன் மகிமையினை புரிந்துகொள்ளமுடிகின்றது அல்லவா?.......

***
Blog Widget by LinkWithin