Wednesday, August 7, 2013

தாயினதும், சேயினதும் உடல் நலனைக் காக்கும் தாய்ப்பால்...!

குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் (ஆகஸ்ட் 1 – 7), யுனிசெப்ஃ மற்றும் உலக சுகாதார அமைப்பின்   மூலமாக 1992ம் ஆண்டு தொடக்கம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பாலூட்டும் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.

தாய்பாலூட்டுவதுகுழந்தைகளை மட்டுமின்றி தாய்மார்களையும் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது என்கின்றது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள்.


உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு கடந்த ஒருவாரமாக எனது Facebook சமூகவலைத்தள பக்கத்தில் பிரசுரித்த சில தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
#அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் மூன்றில் இரண்டு பங்கு தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். (மூலம் – IANS).

#ஐக்கிய அமெரிக்காவின் பிறவுண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சியினை மேம்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் மொழி, அறியும் ஆற்றல், உணர்ச்சி செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பாகங்களில் மேலதிக வளர்ச்சியினையும் ஏற்படுத்துகின்றது.     
  
#ஐக்கிய அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். (மூலம் –ANI)

#யுனிசெப் தகவல்களின் பிரகாரம், குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் அதிக வினைத்திறன், மற்றும் செலவு குறைந்த வழிமுறை தாய்ப்பாலூட்டுதல் ஆகும்.
முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை, தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தையினைவிடவும் 14 மடங்குகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு உண்டு.

#ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் வாழ்கையின் பிற்பகுதியில் பெண்களுக்கு ஞாபக மறதி (அல்சைமர்  நோய்) ஏற்படுவதற்கான அபாயம் மூன்றில் இரண்டு பங்கு தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.   
உலக சுகாதார அமையத்தின் தகவல்களின் பிரகாரம், குழந்தை பிறந்து 1 மணித்தியாலத்திற்குள்ளும், குழந்தை பிறந்து முதல், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமும், அத்துடன் குழந்தை 2 வயதினை அடையும்வரை இணை உணவுகளுடன், தாய்ப்பால் ஊட்டிவருவதன் மூலம் வருடாந்தம் 220, 000 குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
ஆனால் உலகில்,  40% ஆன குழந்தைகளுக்கே முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டப்படுகின்றது என்கின்றது உலக சுகாதார அமையம்.
#ஆகஸ்ட் 1 – 7, 2013 உலக தாய்ப்பாலூட்டும் வாரம்

***

No comments:

Blog Widget by LinkWithin