Wednesday, November 21, 2012

நவம்பர் 21 ↔ உலக மீன்வள தினம்

புவியின் மேற்பரப்பில் 71% ஆனது சமுத்திரத்தினால் மூடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நீர்ப்பரப்பில் மீன் வளமானது இல்லாத பகுதியே கிடையாது என்றிருந்த தன்மையானது இன்று அளவுக்கதிகமான மீன் பிடி செயற்பாடுகள், மீன் வாழிடங்கள் அழிக்கப்படல், தொழிற்சாலைக் கழிவுகள், எண்ணெய் கசிவு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றின் காரணமாக அருகிக்கொண்டு செல்கின்றது. 



இதனைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் உலக மீன்வள தினமானது கொண்டாடப்படுகின்றது.

·        உலக மக்களில் 25% இற்கும் அதிகமானோர் தமது புரதத் தேவைக்காக மீன்களிலேயே தங்கியுள்ளனர். குறிப்பாக, அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டு மக்களில் அதிகமானோர் தமது புரதத் தேவையினை மீன்களிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.

·        உலக மக்களின் வருடாந்த மீன் கொள்வனவு 100 மில்லியன் மெற்ரிக் தொன்னிலும் அதிகமாகும்.

·        உலகில் வருடாந்த மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

·        உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

·        உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமானோரின் அதாவது உலக மக்களில் 8% ஆனோரின் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலானது பங்களிப்பு நல்கின்றது.( ஐ.நா உணவு விவசாய அமைய தகவல்)

·        உலகில் மீன்களில் 90% இற்கும் அதிகமானவை சமுத்திரங்கள் மற்றும் கடல்களிலேயே பிடிக்கப்படுகின்றன.

·        சிலி, பெரு ஆகியவற்றின் கடற்கரைக்கு அப்பால் உள்ள "அஞ்சோலி" மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும்.

·        கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன்பிடியானது 4 மடங்கால் அதிகரித்துள்ளது. 1950ம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெற்ரிக் தொன்களாக இருந்த மீன்பிடியானது 1992ம் ஆண்டளவில் 82.5 மில்லியன் மெற்ரிக் தொன்களாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

·        ஐ.நா சபையின் அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது அளவுக்கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப்படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழிலானது மீனின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

·        ஐ.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70% ஆன மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட்டினால் பிடிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக 2040ம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 

***

3 comments:

ஆத்மா said...

அறியாத தகவல்களும்
அறியாத தினமும்
ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கங்களுக்கு... தகவல்களுக்கு நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ....

Blog Widget by LinkWithin