Monday, November 26, 2012

நவம்பர் 26 ↔ உலக நீர்வீழ்ச்சி தினம்


·        உலகிலேயே மிக உயரமான இடத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள "சல்ரோ ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியாகும். ரியோ கறோனி ஆற்றிலிருந்து பிரிந்து டெவில் மலையிலிருந்து பாயும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரம் 3212அடி (979மீற்றர்). அமெரிக்க விமானி ஜேம்ஸ் ஜிம்மி ஏஞ்சல் என்பவர்தான் இந்த நீர்வீழ்ச்சியினை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகறியச் செய்தார். ஏஞ்சல் அவர்களால் கண்டறிப்பட்டதனால் அவர் பெயரினால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகின்றது.


செவ்விந்தியர்களால் "சூருன் மேரு" என்றும் இது  அழைக்கப்பட்டதாம்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரத்தினை ஒப்பிடுகின்றபோது, ஈபிள்  கோபுரத்தினை விடவும் 03 மடங்கு உயரமானதுடன், நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 20 மடங்கு உயரமானதாகும்.

·        உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியானது சாம்பியா சிம்பாப்வே நாட்டின் எல்லையின் அமைந்துள்ளது. 1.7 கிலோமீற்றர் அகலமுடையதும் 108 மீற்றர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி சிம்பாப்வே நாட்டவர்களால் "விக்டோரியா" நீர்வீழ்ச்சி என்றும் சாம்பியா நாட்டவர்களால் "மோசி ஓஏ துன்யா (Mosi - oa -Tunya) இதன் அர்த்தம் இடி, முழக்கத்திலிருந்து வருகின்ற புகை" என்றும் அழைக்கப்படுகின்றது.


இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து நிமிடத்திற்கு 19 மில்லியன் கன அடிக்கும் அதிகமான நீரானது வீழ்ச்சியடைகின்றதாம். இதன் காரணமாக ஏற்படுகின்ற நீர் விசிறலினால் சில நேரங்களில் இந்த நீர்வீழ்ச்சியினை 25 மைல்களுக்கு அப்பாலிருந்தும் பார்வையிடலாமாம்.

·        உலகில் அதிகளவான உல்லாசப் பயணிகள் பார்வையிட வருகின்ற  நீர்வீழ்ச்சிகளில் முதன்மை இடம் வகிப்பது நயாகரா நீர்வீழ்ச்சியாகும். வருடாந்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியினை பார்வையிட வருகை தருகின்றராம். ஐக்கிய அமெரிக்கா , கனடா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் உண்மையான நீளம் 1060  அடி மற்றும் உயரம் 176 அடி, மேலும் செக்கனுக்கு 150000 கலனுக்கும் அதிகமான  நீர் வீழ்ச்சியடைகின்றது.  


அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, பிறைடல் வெய்ல் நீர்வீழ்ச்சி,  ஹோர்ஸ்சூ நீர்வீழ்ச்சி ஆகிய 3 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்து நயாகரா நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துப் பாய்கின்றது.

இந்நீர்வீழ்ச்சிக்கருகில் 2 பாரிய நீர்மின்வலு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

·        உலகில் மிக அகலமான நீர்வீழ்ச்சி பிரேசில், ஆர்ஜென்ரீனா எல்லையில் அமைந்துள்ள "இக்குவாசூ" நீர்வீழ்ச்சி ஆகும். இது 2 மைல்கள் (3 கிலோமீற்றர்) அகலத்திற்கு பரந்திருக்கின்றது.  இது 275 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்ததாகும்.


இக்குவாசூ நீர்வீழ்ச்சியின் அகலத்தினை ஒப்பிடுகின்றபோது, நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 4 மடங்கு அகலமானதாகும்.

·        இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி "பம்பரகந்த" நீர்வீழ்ச்சி ஆகும். (790 அடி / 241 மீற்றர்)



·        இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள "ஜொக்" நீர்வீழ்ச்சி ஆகும். (829 அடி / 253  மீற்றர்)



***

Sunday, November 25, 2012

YouTube இணையத்தள வரலாற்றில் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட காணொளி...!


YouTube இணையத்தள வரலாற்றில் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட காணொளியாக கங்ணம் நடன (Gangnam-Style) காணொளி (Video) சாதனை படைத்துள்ளது. தென்கொரியாவினைச் சேர்ந்த பிஷி என்பவரே இந்த நடனத்தை பிரபல்யப்படுத்தியவர் ஆவார்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து  நவம்பர் 24ம் திகதி வரை 806.28 மில்லியன் பார்வையாளர்கள் Gangnam-Style காணொளியை YouTube இணையத்தில் பார்வையிட்டுள்ளனர்.


இதற்கு முன்னர் அதிகமானோர் பார்வையிட்ட காணொளியாக கனடிய இளமை நட்சத்திரம் Justin Bieber அவர்களின் பேபி (Baby) என்கின்ற காணொளியாகும். YouTube இணையத்தில் Baby காணொளியை 803 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

MTV ஐரோப்பிய இசை விருது விழாவில் மிகச்சிறந்த காணொளிக்கான விருதினை Gangnam-Style காணொளி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

YouTube வரலாற்றில் அதிக Liked பெற்ற காணொளியாக Gangnam-Style விளங்குகின்றது. இது 5.4 மில்லியன் Liked பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

YouTube வரலாற்றில் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட ஏனைய காணொளி வருமாறு;

3. ஜெனிபர் லோபெஸ் ஒன் த ஃப்ளோர் (On the Floor) 624 மில்லியன் பார்வையாளர்கள்
4. எமினெம் ரிஹானா லவ் த வே யு லைய் (Love the Way You Lie) - 516 மில்லியன் பார்வையாளர்கள்
5. LMFAO – பார்ட்டி ரொக் அன்தெம் (Party Rock Anthem) - 502 மில்லியன் பார்வையாளர்கள்
6. ஷக்கிரா- வகா வகா (Waka Waka) – 500 மில்லியன் பார்வையாளர்கள்


 ***

Wednesday, November 21, 2012

நவம்பர் 21 ↔ உலக மீன்வள தினம்

புவியின் மேற்பரப்பில் 71% ஆனது சமுத்திரத்தினால் மூடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நீர்ப்பரப்பில் மீன் வளமானது இல்லாத பகுதியே கிடையாது என்றிருந்த தன்மையானது இன்று அளவுக்கதிகமான மீன் பிடி செயற்பாடுகள், மீன் வாழிடங்கள் அழிக்கப்படல், தொழிற்சாலைக் கழிவுகள், எண்ணெய் கசிவு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றின் காரணமாக அருகிக்கொண்டு செல்கின்றது. 



இதனைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் உலக மீன்வள தினமானது கொண்டாடப்படுகின்றது.

·        உலக மக்களில் 25% இற்கும் அதிகமானோர் தமது புரதத் தேவைக்காக மீன்களிலேயே தங்கியுள்ளனர். குறிப்பாக, அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டு மக்களில் அதிகமானோர் தமது புரதத் தேவையினை மீன்களிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.

·        உலக மக்களின் வருடாந்த மீன் கொள்வனவு 100 மில்லியன் மெற்ரிக் தொன்னிலும் அதிகமாகும்.

·        உலகில் வருடாந்த மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

·        உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

·        உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமானோரின் அதாவது உலக மக்களில் 8% ஆனோரின் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலானது பங்களிப்பு நல்கின்றது.( ஐ.நா உணவு விவசாய அமைய தகவல்)

·        உலகில் மீன்களில் 90% இற்கும் அதிகமானவை சமுத்திரங்கள் மற்றும் கடல்களிலேயே பிடிக்கப்படுகின்றன.

·        சிலி, பெரு ஆகியவற்றின் கடற்கரைக்கு அப்பால் உள்ள "அஞ்சோலி" மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும்.

·        கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன்பிடியானது 4 மடங்கால் அதிகரித்துள்ளது. 1950ம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெற்ரிக் தொன்களாக இருந்த மீன்பிடியானது 1992ம் ஆண்டளவில் 82.5 மில்லியன் மெற்ரிக் தொன்களாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

·        ஐ.நா சபையின் அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது அளவுக்கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப்படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழிலானது மீனின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

·        ஐ.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70% ஆன மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட்டினால் பிடிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக 2040ம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 

***

Sunday, November 18, 2012

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆண்டுகள் விளையாடியோர்.....

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 15ம் திகதி ஆரம்பமாகியது. இந்த டெஸ்ட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து 23 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சச்சின் டெண்டுல்கர், 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி பாகிஸ்தான் அணிக்கெதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானமை குறிப்பிடத்தக்கதாகும்.



சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் விளையாடிய வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் வில்ஃப்ரெட் ரோட்ஸ் விளங்குகின்றார். இவர் 30 ஆண்டுகளும், 315 நாட்களும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது பங்களிப்பினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆண்டுகள் விளையாடியோர் விபரம் வருமாறு....

ஃ வில்ஃப்ரெட் ரோட்ஸ்(இங்கிலாந்து) - ஜுன் 01, 1899 ~ ஏப்ரல் 12, 1930 ~ 30 ஆண்டுகள் 315 நாட்கள்



ஃ டென்னிஸ் குளோஸ்(இங்கிலாந்து) - ஜூலை 23, 1949 - ஜூலை 13, 1976 ~ 26 ஆண்டுகள், 356 நாட்கள்

ஃ ஃப்ராங் வூலி(இங்கிலாந்து) - ஆகஸ்ட் 09, 1909 - ஆகஸ்ட் 22, 1934 ~ 25 ஆண்டுகள், 13 நாட்கள்

ஃ ஜோர்ஜ் ஹெட்லி(மே.தீவுகள்) - ஜனவரி 11, 1930 - ஜனவரி 21, 1954 ~ 24 ஆண்டுகள், 10 நாட்கள்

ஃ ஜோன் ட்ரைகொஸ்(தென்னாபிரிக்கா/சிம்பாப்வே) - பெப்ரவரி 05, 1970 - மார்ச் 17, 1993 ~ 23 ஆண்டுகள், 40 நாட்கள்

ஃ சச்சின் டெண்டுல்கர்(இந்தியா) - நவம்பர் 15, 1989 - நவம்பர் 15, 2012 - 23 ஆண்டுகள் +

ஃ ஜக் ஹொப்ஸ்(இங்கிலாந்து) - ஜனவரி 01, 1908 - ஆகஸ்ட் 22, 1930 ~ 22 ஆண்டுகள், 233 நாட்கள்

ஃ ஜோர்ஜ் குன்(இங்கிலாந்து) - டிசம்பர் 13, 1907 - ஏப்ரல் 12, 1930 - 22 ஆண்டுகள், 119 நாட்கள்

ஃ சய்ட் கிரேகொரி(இங்கிலாந்து) - ஜூலை 21, 1890 - ஆகஸ்ட் 22, 1912 ~ 22 ஆண்டுகள், 32 நாட்கள்

***

Friday, November 9, 2012

350வது பதிவு # பேர்லின் சுவரின் வீழ்ச்சி…....!


பதிவுலகில் தடம்பதித்து 40ம் மாதங்களினை அண்மிக்க இந்த தருணத்தில் எனது 350வது பதிவினை உங்கள் முன் சமர்ப்பிர்கின்றேன்.



அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணயத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.


கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை பிரித்துவைத்த பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இன்றைய தினத்துடன்(நவம்பர் 09,2012) 23ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.


2ம் உலகப்போரின் (1939-1945) பிற்பாடு ஜேர்மனியானது கலவரங்களால் பிளவுண்டு போயிருந்தது. கிழக்கு ஜேர்மனியானது கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் சோவியத் ஒன்றியத்தினைச் சார்ந்திருந்த அதேவேளை மேற்கு ஜேர்மனியானது முதலாளித்துவ ஆட்சியின் கீழ் ஐக்கிய அமெரிக்காவினை சார்ந்திருந்தது.  இதனால் ஜேர்மனியின் தலைநகராக விளங்கிய பேர்லினானது கிழக்கு மற்றும் மேற்கு பேர்லினாகவும் பிளவுபட்டிருந்தது.



1949 – 1960ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2.5மில்லியனுக்கும் அதிகமான கிழக்கு ஜேர்மனி மக்கள், மேற்கு ஜேர்மனிக்கு குடியேறி வந்தனர், மேலும் அதிகளவான மக்கள் தமது நாட்டினை விட்டு வெளியேறிச் செல்வதினை தடுக்கும்முகமாக கிழக்கு ஜேர்மனியின் அதிபராகவிருந்த வால்ட்டர் உல்விரிச் அவர்களின் உத்தரவிற்கமைய கிழக்கு, மேற்கு ஜேர்மனி எல்லையில் 96 மைல்கள் (155கிலோமீற்றர்) நீளமான பெரியதொரு தடுப்புச்சுவரினை ஸ்தாபிக்கும் செயற்பாடானது 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாணப்பணிகள் 4 கட்டங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பேர்லின் சுவர் நிர்மாணிக்கப்பட்டதினையடுத்து இச்சுவரினை தாண்டி தப்பிக்க முயன்ற பலர் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் ஆட்சியானது கிழக்கு ஜேர்மனியில் வீழ்ச்சியுற்றதனினை தொடர்ந்து 1989ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்றது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி கிழக்கு பேர்லின் வாசிகள் மேற்கு பேர்லினுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதினையடுத்து பேர்லின் சுவரானது இரு நாட்டவர்களினாலும் இடிக்கப்பட்டது.


பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 03ம் திகதி  ஒன்றிணைந்தது கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்து ஜேர்மனி என்கின்ற தனிநாடாக உலகில் புதியதொரு அவதாரமாக மாற்றம்பெற்றது.


பேர்லின் சுவரின் வீழ்ச்சியினைக் குறிக்கும்முகமாக நவம்பர் 09ம் திகதி  உலக ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin