Sunday, June 9, 2013

ஜூன் 8 ⊷ உலக சமுத்திர தினம்


 
உலகின் உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியம், உயிர்களின் வாழ்க்கை, மற்றும் காலநிலையின் பிரதான சக்தியாக சமுத்திரங்களே விளங்குகின்றன.
மாசடைவுகள், அகழ்வுகள், உலக வெப்பமயமாதல் மற்றும் அளவுக்கதிகமான மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக உலக சமுத்திரங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன, இதன் பிரகாரம், உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக 2008ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2009ம் ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 8ம் திகதி உலக சமுத்திர தினமாக கொண்டாடப்படுகின்றது. 

அந்தவகையில், சமுத்திரங்கள் தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…!

  பூமியின் மேற்பரப்பில் 71% வகிபாகத்தினை சமுத்திரங்கள் வகிக்கின்றன. அதாவது பூமியின் மேற்பரப்பில் 362 மில்லியன் சதுரகிலோமீற்றர்களுக்கு சமுத்திரங்கள் பரந்து வியாபித்திருக்கின்றன. இது சூரியமண்டலத்தின் 2 வது மிகச்சிறிய கோளாகிய செவ்வாய் கோளின் மேற்பரப்பினை விட 2 மடங்கும், பூமியின் துணைக்கோளாகிய சந்திரனை விட 9 மடங்கும் அதிகமாகும்.  

♞ புவிக்கோளின் நீர் இருப்பில் 97% இற்கும் அதிகமான பங்கு நீரானது சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றது. 


புவியில் மிக நீளமான தொடர்ச்சியான மலைத் தொடரானது சமுத்திரத்திலேயே அமைந்துள்ளது. இது 55,000 கிலோமீற்றரினை விடவும் நீளமானதாகும்.  

சமுத்திரத்தின் சராசரி ஆழமானது 3,720 மீற்றர்களாகும். மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள 11,033 மீற்றர்கள் ஆழம் கொண்ட மரியானா ஆழியே சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதியாகும். 


உலக மசகு எண்ணெய்யில் மூன்றிலொரு பங்கானது சமுத்திரங்களிலிருந்தே கிடைக்கின்றது. குறிப்பாக மேற்கு அவுஸ்திரேலியன் நீர்ப்பரப்புகளிலிருந்தே அதிகமான அளவில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.

சமுத்திரங்களில் அண்ணளவாக 20 மில்லியன் தொன் தங்கங்கள் காணப்படுகின்றதாம். 

உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் ஆகும். இது பூமியின் மேற்பரப்பில் 30% வகிபாகத்தினை வகிக்கின்றது. மேலும் அத்திலாண்டிக் 21%, இந்து சமுத்திரம் 14% வகிபாகத்தினை வகிக்கின்றது.

உலகிலுள்ள சமுத்திரங்களில் அதிகமான தீவுகள் பசுபிக் சமுத்திரத்திலேயே அமைந்துள்ளன. இங்கே 25,000 இற்கும் அதிகமான வித்தியாசமான தீவுகள் காணப்படுகின்றன.  

உலகில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது பிரதான உணவு மூலத்திற்கு சமுத்திரங்களிலேயே தங்கியுள்ளனர், 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்கால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (7 பில்லியன்) 


உலகில் செயற்படு நிலையிலுள்ள 90% எரிமலைகள் சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றன. இதில் அதிக எண்ணிக்கையானவை தென் பசுபிக் சமுத்திர பிராந்தியத்திலேயே காணப்படுகின்றன.

(குறிப்பு :-  நேற்றைய முழுநாள் மின்தடையின் காரணமாக இன்றுதான் இந்த ஆக்கத்தினை பதிவிட வாய்ப்புக் கிடைத்தது)

***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான தகவல்கள்... நன்றி நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ..

Blog Widget by LinkWithin