Friday, August 31, 2012

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக அதிக ஓட்டம் பெற்றவர்....


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டத்தினை பெற்ற வீரராக மே.தீவுகளின் ரினோ வெஸ்ட் சாதனை படைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 7-11ம் திகதி வரை இங்கிலாந்தின் எட்வெஸ்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் அவர் இச்சாதனையினை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். 112 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் உள்ளடங்களாக 95 ஓட்டங்களினைப் பெற்ற ரினோ வெஸ்ட்,  பந்துவீச்சில் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களினை வீழ்த்தி போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினையும் வெற்றிகொண்டார்.

போட்டிச் சுருக்கம்..(3வது டெஸ்ட், ஜூன் 7-11)
மே.தீவுகள் 426
இங்கிலாந்து 225/5
மழை காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அரைச்சதம் பெற்றவர்கள் வருமாறு.....

Ø  ரினோ வெஸ்ட் (மே.தீவுகள்) 95 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 2012

Ø  சகிர் கான்(இந்தியா) 75 ஓட்டங்கள் எதிர் பங்களாதேஷ், 2004

Ø  ரிச்சர்ட் கொலிங்(நியூசிலாந்து) 68* ஓட்டங்கள் எதிர் பாகிஸ்தான், 1973

Ø  வேர்ட் வொக்லெர்(தென்னாபிரிக்கா) 62* ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1906

Ø  கிளென் மெக்ராத்(அவுஸ்திரேலியா) 61 ஓட்டங்கள் எதிர் நியூசிலாந்து, 2004

Ø  வாசிம் பாரி(பாகிஸ்தான்) 60* ஓட்டங்கள் எதிர் மே.தீவுகள், 1977

Ø  ஜோன் ஸ்னோ(இங்கிலாந்து)  59* ஓட்டங்கள் எதிர் மே.தீவுகள், 1966

Ø  முஸ்டாக் அஹ்மெட்(பாகிஸ்தான்) 59 ஓட்டங்கள் எதிர் தென்னாபிரிக்கா, 1997

Ø  பெட் சிம்கொக்ஸ்(தென்னாபிரிக்கா) 54 ஓட்டங்கள் எதிர் அவுஸ்திரேலியா, 1998

Ø  ரொட்னி ஹொக்(அவுஸ்திரேலியா) 52 ஓட்டங்கள் எதிர் மே.தீவுகள், 1984

Ø  வெஸ் ஹோல்(மே.தீவுகள்) 50* ஓட்டங்கள் எதிர் இந்தியா, 1962

Ø  ப்ரெட் ஸ்பொப்ஃபொர்த்(அவுஸ்திரேலியா) 50 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1885

Ø  ஹுலாம் அஹ்மெட்(இந்தியா) 50 ஓட்டங்கள் எதிர் பாகிஸ்தான், 1952

***

Sunday, August 26, 2012

உலக நாணயத்தாள்கள்…..!!!


உலக நாணயத்தாள்கள் தொடர்பான சுவையான தகவல்கள்.....

Ø பாகிஸ்தான் பயன்படுத்திய இந்திய நாணயத்தாள்கள்.|

 
1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர்  முதல் குறிப்பிட்ட  சில மாதங்கள் பாகிஸ்தான் நாட்டில் நாணயச்சுற்றோட்டத்திற்கு போதுமான பாகிஸ்தான் நாணயத்தாள்கள் இல்லாமையினால் இந்திய நாணயத்தாள்களில் பாகிஸ்தான் என்ற முத்திரையினையிட்ட நாணயத்தாள்களே புழக்கத்திலிருந்தன.

Ø அவுஸ்திரேலிய டொலர்.|

 
1966ம் ஆண்டு அவுஸ்திரேலியா நாடானது டொலர் நாணய அலகிற்குள் தன்னை உள்வாங்கிக்கொள்ள முன்னர் அதன் உத்தியோகபூர்வ நாணய அலகாக அவுஸ்திரேலியன் பவுண் விளங்கியது. தொடக்கத்தில் அவுஸ்திரேலிய டொலருக்கு "றோயல்" என்ற பெயரே வழங்கப்பட்டது. இந்த பெயரானது உள்ளூர் மக்களிடையே பிரபல்யம் அடையாமையினால் டொலர் என மாற்றம் செய்யப்பட்டது.

Ø அமெரிக்க டொலர்.|

 
அமெரிக்க டொலரினைக் குறிப்பிடுவதற்கு $ என்ற குறியீடானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் $ என்கின்ற குறியீடானது அமெரிக்க நாணயத்தாள்களில் இதுவரை தோற்றம் பெற்றதில்லை.

Ø பூட்டான் பண்டமாற்று முறை.|

 
1974ம் ஆண்டிற்கு முன்னர் பூட்டான் நாட்டில் எந்தவிதமான  நாணயங்களும் பாவனையில் இருக்கவில்லை. மாறாக பண்டமாற்று முறையையே(பொருட்கள், சேவைகளுக்குப் பதிலாக பொருட்கள், சேவைகளை வழங்குதல்) மாற்றாகப் பயன்படுத்தினர். பூட்டான் 1974ம் ஆண்டு தனது நாணய அலகாக நகுல்ட்ரம்  இனை அறிமுகப்படுத்தியது.

Ø எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம்.|

 
எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம் 33 நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்கின்றது. அவரின் உருவப்படம் முதன்முதலில் 1935ம் ஆண்டு கனடா நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளித்தபோது அவரின் வயது 9 ஆண்டுகளாகும்.
மகாராணியின் உருவப்படம் பல்வேறு நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்க காரணம் யாதெனில் இந்த நாடுகள் பொதுநலவாயத்தில் அங்கம்வகிப்பதுடன் அந்த நாடுகள் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருந்தமையாலாகும்.

Ø இந்திய  நாணயத்தாள்கள்.|

 
இந்திய நாட்டு நாணயத்தாள்களில் ஒரு ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தினைக் கொண்டிருப்பதுடன், இரண்டு ரூபா மற்றும் அதற்கும் மேற்பட்ட பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய மத்திய வங்கியின் ஆளுனரின் கையொப்பத்தினைக் கொண்டிருக்கும்.

Ø நாணய அலகுகள்.|

 
உலகில் 5 நாணய அலகுகளே தன்னை பிரதிநிதித்துவப்படுத்த தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அவையான அமெரிக்க டொலர், ஜப்பான் யென், பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண், யூரோ, இந்திய ரூபாய். 

 
இவற்றில் பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண் நாணய அடையாளம் மட்டுமே நாணயத்தாள்களில் அச்சிடப்படுகின்றன.

 ***

Saturday, August 25, 2012

ஈமு பறவைகள்...!!!


அண்மைய நாட்களில் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஈமு பண்ணைகளை நடாத்திவந்த பண்ணையாளர்கள் பெருமளவு பணத்தினை சுருட்டிக்கொண்டு தலைமறைவாக ஈமு பறவைகள் உணவின்றி செத்துமடிவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஈமு பறவைகள் தொடர்பான சிறு பார்வை.........



அவுஸ்திரேலிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட ஈமு பறவைகள் அந்த நாட்டின் தேசியப் பறவையும் ஆகும். தீக்கோழிகளினையடுத்து உலகில் மிக உயரமான பறவை வகையினைச் சேர்ந்தவை ஈமு பறவைகள் ஆகும். இவை சராசரியாக 6 - 6.5 அடி (1.5 - 2 மீற்றர்) உயரம் வரை வளரக்கூடியவை அத்துடன் இவற்றின் சராசரி நிறை 50 - 55 கிலோகிராமிற்கும் அதிகமானதாகும். ஈமு பறவைதான் பின்னோக்கி நடக்கமுடியாத ஒரே பறவை வகை ஆகும்.

ஈமு(Emu) என்ற வார்த்தை அரபு மொழியிலிருந்து பிறந்ததாகும், இதற்கான அர்த்தம் மிகப் பெரியவை என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் Dramaius Novahollandiae ஆகும்.

அவுஸ்திரேலியாவின் குளிர் மலைப் பிரதேசங்கள், புதர் மற்றும் மரங்கள் நிறைந்த வரண்ட நிலப்பகுதி மற்றும் சமவெளிகளில் ஈமு பறவைகள் 80 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றன. பொதுவாக இவை அடர் வனங்கள், பாலைவனங்களில் வசிப்பதனை தவிர்த்துவருகின்றன. 



தீக்கோழி, கிவி பறவைகளினைப் போன்றே பறக்கமுடியாத பறவை வகையினைச்(Ratites) சேர்ந்த  ஈமு பறவைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை ஆகும், இவற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 31 மைல்களுக்கும்(50கிலோமீற்றர்) அதிகமாகும். அத்துடன் ஈமு பறவைகள் வேகமாக நீந்தக்கூடிய ஆற்றல் கொண்டவையுமாகும்.

ஈமு பறவைகளுக்கு  நீர் நிறைந்த குட்டைகளில் விளையாடுவது ரொம்ப பிடித்தமானதாகும்.


கம்பளிப்பூச்சிகளே இவற்றின் விருப்பமான உணவாகும், அத்துடன் வெட்டுக்கிளிகள், புற்கள், பூக்கள், பழங்கள், விதைகள், தளிர்கள் , வண்டுகள் ஆகியவற்றினையும், சில வேளைகளில்  இவை கற்களையும் உட்கொள்ளும்.
சில வேளைகளில் ஈமு பறவைகள் உணவினைத்தேடி 15 25 கிலோமீற்றர் தூரம் பயணிக்குமாம்.

ஈமு பறவைகள் ஒரு ஒழுங்குமுறைக்கமைய நீரினை குடிக்கின்றன. அவை நீரினை வீணாக்குவதில்லை,  அவை ஒரு நாளில் 3 கலன்கள் நீரினையும் அருந்தும் தன்மையும் கொண்டவையாகும்.

ஈமு பறவைகளில் ஆண் பறவைகளினைவிடவும் பெண் பறவைகள் உயரமானவையாகும். காடுகளில் வாழ்கின்ற ஈமு பறவைகளின் சராசரி ஆயுட்காலம் 5 10 ஆண்டுகளாகும்.

ஈமு பறவைகளின் எதிரிகள் டிங்கோ, கழுகுகள், பூனைகள், நரிகள், நாய்கள் மனிதர்கள் ஆகியனவாகும். இதன் முட்டைகளுக்கு பல்லிகளே எதிரிகளாகும்.

ஆண் ஈமு பறவைகள்  நிலத்தில் குழி தோண்டி மரப்பட்டைகள், புற்கள், மரக் குச்சிகள், இலைகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி சொரசொரப்பான கூட்டினை அமைக்கின்றன.  ஈமு பறவைகளின் கூடுகள் 1.5 மீற்றர் அகலம் கொண்டதாகும்.

பெண் ஈமு பறவைகள் 2 3 வயதினை அடையும்போது முட்டையிட  ஆரம்பிக்கும். பொதுவாக 2 - 4 நாட்களுக்கொரு தடவை 1 முட்டை வீதம் சராசரியாக 20 30 முட்டைகளினை மார்ச் - ஒக்டோபர் வரையான முட்டையிடும் காலப்பகுதியில் கருமைப்பச்சை நிறத்தில் முட்டைகளையிடுகின்றன. இதன் முட்டையொன்று 0.4 0.9 கிலோகிராம் நிறையுடையதாகும்.

பெண் ஈமு பறவைகள் 5 11 முட்டைகளை கூட்டில் இட்ட பின் , ஆண் ஈமு பறவைகள் முட்டை மேலேறி அமர்ந்து அடைகாக்கும், இதன் போது அவை உணவின்றி, நீரின்றி குஞ்சு பொரிக்கும்வரை 8 வாரங்களாக அடைகாக்கும் ஆற்றல்கொண்டவையாகும். குஞ்சுகள் பொரித்து 24  மணித்தியாலத்திற்குள் அவை நடக்கும் ஆற்றலை பெற்றுவிடுகின்றன. 



முட்டையிட்ட பின் பெண் ஈமு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேறுதிசை நாடிச் சென்றுவிடுவதனால் ஆண் ஈமு பறவைகளே அடைகாப்பது முதல் அதன் குஞ்சுகளை 18 மாதங்கள்வரையும் தன்னுடன் பராமரித்துக்கொள்கின்றன.

மாமிசத்திற்காகவும், எண்ணெய் உற்பத்திக்காகவும், தோல் பொருட்கள் உற்பத்திக்காகவும், இதன் முட்டைக்கோதுகள் அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பங்களிப்பதால் உலகின் பல நாடுகளில் ஈமு பறவைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

***
Blog Widget by LinkWithin