அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.
அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.
*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,
*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.
100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்
***
4 comments:
Good
///சச்சின் 29 வயது 134 நாட்களில் 2009/10 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்///
பாஸ் 2009 ஆண்டு எப்படி சச்சினுக்கு 29 வயசாக இருக்கும் சச்சினுக்கு அப்ப 36 வயதுதானே...நீங்கள் ஆண்டை மாறிக்குறிப்பிட்டுள்ளீர்கள் திருத்தவும் நண்பரே
2002ல்தான் சச்சினுக்கு 29 வயது
100வது டெஸ்ட் போட்டிகள் பற்றி சூப்பர் தகவல்கள்
கருத்துரைக்கு நன்றி ஹரி, ராஜ்..
நன்றி.. நண்பர் ராஜ், சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்..
Post a Comment