Monday, June 22, 2015

ஜூன் 22 -------› உலக ஒட்டக தினம்

“பாலைவனக் கப்பல்” என்றழைக்கப்படுகின்ற ஒட்டகங்களின் சூழல் முக்கியத்துவத்தினை உணர்த்தும்முகமாக ஜூன் மாதம் 22ம் திகதி உலக ஒட்டக தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.
ஒட்டகங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள் சில…!


ஒட்டகத்தின் ஆங்கில வார்த்தையான கேமல் (Camel) என்பது அரேபிய மொழியிலிருந்து உதிர்த்தது. அரேபிய மொழியில் “அழகு” என்பது அதன் அர்த்தமாகும். ஒட்டகம் என்றாலே பாலைவனமும் அது தனக்குள் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரும்தான் பலரது நினைவுக்கு வரும். ஒட்டகம் நீண்ட பயணத்திற்கு தயார்படுத்துவது சற்று வித்தியாசமானதாக இருக்கும். பயணத்திற்கு முன் ஒட்டகத்தில் பயணம் செய்ய இருப்பவர் ஒட்டகத்திற்கு அதிகப்படியான உப்பைக் கொடுப்பார். உப்பின் தன்மையால் அது அதிகளவான தண்ணீரைக் குடிக்கும். கிட்டத்தட்ட 80 லீற்றர் தண்ணீரை ஒட்டகம் குடித்துவிடும். ஒட்டகத்தின் கூன் தண்ணீரை சேமிப்பதில்லை. மாறாக அதில் கொழுப்பு சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் உடல் முழுவதும் வெப்பத்தை அதிகம் ஈர்க்காததாக அமைந்துள்ளது.


ஒட்டகத்திற்கு மூன்று வயிறு இருக்கிறது. முதலாவது வயிற்றில் தனக்குத் தேவையான உணவை சேகரித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் அந்த உணவை வாயில் அசைபோட்டு உட்கொள்ளும். இரண்டாவது வயிறு, உணவுகளை ஜீரணப்படுத்துவதற்கான திரவியங்களை சுரக்கும் இடமாக இருக்கின்றது. மூன்றாவது வயிற்றில் அசைபோட்ட உணவுப்பண்டங்கள் சென்று சேர்கின்றன. அங்குதான் உணவு ஜீரணிக்கப்படுகின்றது. இதில் மூன்றாவது வயிற்றைத் தவிர முதலிரண்டு வயிறுகளின் பக்கவாட்டுச் சுவர்களில் நிறைய பை போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்தப் பைகளில் தண்ணீரை ஒட்டகங்கள் சேர்த்து வைத்துக் கொள்கின்றன. எப்போது அதற்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ, அப்போது திறந்து சுரக்கும் நீரை எடுத்துக் கொள்ளும்.


வெகு நாட்களுக்கு ஒட்டகம் தண்ணீர் அருந்தாமல் வாழமுடியும். ஏனெனில் அவைகளின் இரத்த அணுக்களின் வடிவம் முட்டை வடிவத்திலிருக்கின்றன. டீஹைட்ரேஷன் அல்லது உடலில் தண்ணீர் இழந்த பின்னரும் இரத்த அணுக்கள் முட்டை வடிவத்தில் இருப்பதால் உடலில் ஒட்டிக்கொண்டே இருக்கும். மனித உடலில் உள்ள இரத்த அணுக்கள் வட்டமாக உள்ளதால் உடலில் தண்ணீர் குறையும்போது இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒன்றாக குவிந்துவிடும். ஒட்டகங்களின் உடலின் வெப்பம் இரவில் 34 பாகை செல்சியஸ், பகலில் 41 பாகை செல்சியஸ் ஆகும். பகலில் 41 பாகை வரை உடல் சூடான பின்னரே ஒட்டகங்களுக்கு வியர்வை வர ஆரம்பிக்கும். தங்கள் உடலில் 25 சதவீதம் தண்ணீர இழந்தாலும் அவற்றின் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் மற்ற மிருகங்கள் 15 சதவீதம் தண்ணீரை இழந்தவுடனே அவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். பச்சையாக இருக்கின்ற செடிகளினை உண்பதினாலும், தண்ணீர் குடிப்பதினாலும் ஒட்டகங்களுக்கு ஈரப்பசை கிடைக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் அதிக பாரம் ஏற்றாமல், வேகமாக நடக்காமல், ஓரளவு சாதாரண வேகத்தில் நடந்து சென்றால் எந்தப் பாலைவனத்திலும் ஒட்டகம் 10 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.

 ***
Blog Widget by LinkWithin