Sunday, December 11, 2011

வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டாக்டர் ராதா கிருஷ்ணன்......

உலகில் நிற பேதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போராடியிருக்கின்றார்கள். இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திற்கு அடுத்து இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்தவர் டாக்டர் ராதா கிருஷ்ணன். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளாகிய செப்டெம்பர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.



அந்தவகையில் , டாக்டர் ராதா கிருஷ்ணன், எவ்வாறு வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கினார் என்பதற்கு சான்றாக இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம். இந்த மாமேதை, இந்தியர்களைக் கிண்டல் செய்யும் மேல் நாட்டவரை, குறிப்பாக ஐரோப்பியரை, தனது புத்தி சாதுரியத்தால் மூக்கை உடைப்பதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது.

ஒரு சமயம் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது ஆங்கிலேயர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அது வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும் இந்தியரான டாக்டர் ராதாகிருஷ்ணனை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்பது அந்த வெள்ளையரது குறிக்கோளாக இருந்தது.

அவர் பேசும்பொழுது, “ இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவர்கள், ஐரோப்பியரான நாம்தான். அதனால்தான் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட, ஐரோப்பியர்களாகிய நம்மை வெள்ளை நிறத்தில் படைத்திருக்கின்றான்” என்று டாக்டர் ராதாகிருஷ்ணனை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறிப்பிட்டார்.

அவரது தலைக்கனம் மிகுந்த பேச்சைக் கவனித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்த வெள்ளையரின் மூக்கை உடைத்து, மற்ற நிறத்தவர்மேல் அவர் கொண்டிருப்பது மிகவும் தவறான அபிப்பிராயம் என்பதை உணர்த்த தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

அந்தத் தருணம் வந்தது, டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே சற்று முன்பு பேசிய அன்புச் சகோதரர், இறைவனின் படைப்பில் வெள்ளை நிறத்தின் மேன்மையை பற்றிக் குறிப்பிட்டார். இந்த நிறப் பாகுபாட்டை பற்றி நான் ஒரு விசயத்தைக் அவருக்குச் சொல்ல விஉரும்புகின்றேன். அவர் மட்டுமல்ல னீங்களும் சற்று கவனமாகக் கேளுங்கள்.

” இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட்டுச் சாப்பிட விரும்பினான். அதற்கு முன்பு அவனுக்கு ரொட்டி சுட்டுப் பழக்கமில்லை. ஆனாலும், ஓரளவு அதை எப்படி செய்வது என்று அவனுக்குத் தெரியும். நீர் ஊற்றி மாவை பிசைந்தான். பிறகு வட்டமாக அதைத் தட்டி, அடுப்பின் மேலே வைக்கைப்பட்டிருந்த கல்லின்மேலே போட்டான். அது சரியாக வேகக்கூட இல்லை. அதற்குள் அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான்.

“அப்பொழுதுதான் அது சரியாக வேகாமல் வெள்ளை நிறத்துடனும், பச்சை மாவின் ருசியுடனும் இருப்பதைக் கண்டான். ரொட்டி மேலும் வெந்து வெள்ளை மாவின் நிறம் மாறிய பிறகுதான் அதை அடுப்புக் கல்லிலிருந்து எடுக்க வேண்டும் என்ற விசயம் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆகவே இரண்டாவது ரொட்டியை சற்று நேரம் கல்லிலேயே போட்டு விட்டான். ஒருவிதமான கருகல் வாசனை வந்த பிறகே ரொட்டியை எடுத்தான். ரொட்டி கறுப்பு நிறத்தில் தீய்ந்துபோய் இருந்தது. ரொட்டி இப்போது ருசிக்கவில்லை.

அதன்பிறகுதான் கடவுளுக்கு ஒரு விசயம் புரிந்தது. ரொட்டியை உடனே அடுப்பிலிருந்து எடுக்கக்கூடாது. அதிக நேரம் அடுப்பிலேயே போட்டிருக்கவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்தால் தான் ரொட்டி, சாப்பிடும் பக்குவ நிலைக்கு வந்திருக்கும் என்ற உண்மை புரிந்தது.

இதன் அடிப்படையில்தான் மனிதனுக்கு நிறங்களைக் கொடுத்தான் இறைவன். வேகாத ரொட்டி போன்ற அவசரப் படைப்புத்தான் வெள்ளை நிறத்தக் கொண்ட ஐரோப்பியர் மிகவும் நிதானமாக யோசித்தபின் உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆபிரிக்கர். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான நேரத்தில் படைக்கப்பட்டவர்கள்தான் இந்தியராகிய நாங்கள்” என்றுகூறி முடித்தார். அந்த அழகிய உதாரணத்தக் கேட்ட ஐரோப்பியர்களே ரசித்துக் கைதட்டினர்.

ஒரு சமயம் டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஒரு வெள்ளைக்காரரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளையரின் பேச்சில், உலகிலேயே மேல் திசை நாடுகளைச் சேர்ந்தவர்களெ எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அவர், “உலக அளவில் மேல் நாட்டு மக்களே மேன்மைக்குரியவர்கள், நாடு, இனம்,மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் மேல் நாட்டவராகிய நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும் நிறத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அனைவருமே ஒன்றுபட்டிருக்கின்றோம் என்றார். அதுவரை அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அவரது நிறவெறிக் கொள்கை தவறானது என்பதை நெத்தியில் அடித்தார் போல் கூற முடிவு செய்தார்.

”பாருங்கள் நீங்கள் கூறுவது உண்மைதான் உலகம் எங்கிலும் கழுதைகளிருந்தாலும், அவை நிறத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குதிரைகள் தான் எங்களைப் போல பல நிறங்களில் இருக்கும்” என்று ஒரு போடு போட்டர். அதைக் கேட்டதும் அந்த வெள்ளைக்காரரின் முகம் தொங்கிப் போய்விட்டது.

***

No comments:

Blog Widget by LinkWithin